Tuesday, April 6, 2021

அறிஞர் வே.ஆனைமுத்து மறைவுக்கு வைகோ MP இரங்கல்!

மார்க்சிய-பெரியாரிய பொது உடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர், அய்யா வே.ஆனைமுத்து அவர்கள், இன்று காலையில் இயற்கை எய்திய செய்தி அறிந்து  வருந்துகின்றேன்.

19 வயதில், வேலூரில் தந்தை பெரியார் அவர்களின் உரை கேட்டு, அவரது வழியைப் பின்பற்றி, வாழ்நாள் முழுமையும் பெரியாரின் பெருந்தொண்டனாக உழைத்திட்ட பெருமைக்கு உரியவர். என் மீதும், நம் இயக்கத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு இருந்தார். அவ்வப்போது அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவது  வழக்கம். கடந்த முறை உடல் நலம் குன்றி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது புதல்வர் பன்னீர்செல்வம் அவர்களிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்து கொண்டேன்.

1957 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்கள் சாதி ஒழிப்பிற்காக நடத்திய அரசியல் அமைப்பு சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 18 மாத காலம் சிறைத் தண்டனை பெற்ற தியாக வேங்கை இவர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன வகுப்பினர், பழங்குடியினர் பேரவைத் தலைவராகவும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாகம்மை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் பணியாற்றினார். உத்தரப் பிரதேசம், பிகார், கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலான அண்டைய நாடுகளிலும் பெரியார் கொள்கைகளைப் பரப்பினார். அதற்காக, நிறையப் பயணித்தார்.

வடமாநிலங்களில் சமூகநீதிக் கருத்துகளை பிரச்சாரம் செய்து, மண்டல் குழு பரிந்துரைகள் நிறைவேற்றம் பெற இவர் ஆற்றிய பணி மகத்தானது.

திராவிட நாடு, பல்லவ நாடு, அனில், குமரன் ஆகிய இதழ்களில் அறிவார்ந்த கட்டுரைகளைத் தீட்டிய ஆனைமுத்து அவர்கள், குறள்மலர், குறள் முரசு, சிந்தனையாளன் ஆகிய இதழ்களையும் நடத்தி வந்தார்.

1970 ஆம் ஆண்டில் அவர் இயக்கி வந்த சிந்தனையாளன் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளையும், பேச்சுகளையும் தொகுத்து, மூன்று தொகுதிகளாக வெளியிட்டார். அவற்றையே, 2010 ஆம் ஆண்டில், இருபது தொகுதிகளாக, அரிய பல தகவல்களை இணைத்து வெளியிட்டார். ‘ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ எனும் தலைப்பிலும் இவரின் அறிவார்ந்த நூல்கள் வெளிவந்துள்ளன.

வயது முதிர்ந்த நிலையிலும், உடல் நலம் குன்றிய நிலையிலும், தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களைப் பரப்பிடும் உணர்வோடு, பொது உடைமைக் கட்சித் தோழர்களையும், அம்பேத்கர் இயக்கத் தோழர்களையும் இணைத்துக் கொண்டு, இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார்.

திராவிட இயக்க வரலாற்றில் அவரின் தனித்த புகழ் எந்நாளும் நிலைத்து நிற்கும். அவரின் உடல் அவரது விருப்பத்திற்கு இணங்க சென்னையில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்படுகின்றது.

அவரது மறைவால் துயரில் ஆழ்ந்து இருக்கின்ற மக்கள் தமிழ்ச்செல்வி, பன்னீர்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் ஆகியோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரது கட்சித் தோழர்களுக்கும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
 வைகோ
 பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.04.2021

No comments:

Post a Comment