வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட நடுத்தர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சேக் தாவூது.
தாம் பிறந்த நெல்லைச் சீமையில் வற்றாது பாய்ந்து ஓடும் ஜீவ நதியாம் தாமிர பரணி நதி மீது கொண்ட பற்றுதலால் தம் பெயரை தாமிரா என மாற்றிக் கொண்டார்.
இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களால் வார்ப்பிக்கப்பட்டவர்.
முதன்முதலாக கல்கியில் இவர் எழுதிய அப்பா எனும் சிறுகதை அனைவர் மனதிலும் இடம் பிடித்தது.
ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என தமிழக வாரப்பத்திரிகைகளில் இவர் எழுதிய சிறுகதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.
தாமிராவின் கதை புனையும் ஆற்றலால் கவரப்பட்ட பாலச்சந்தர், தான் இயக்கிய “பொய்” படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார்.
படப்பிடிப்பிற்காக இத்திரைப்பட குழுவினர் அனைவரும் இலங்கை சென்றுவிட தாமிரா விற்கு கடவுச்சீட்டு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய்விடுமோ என வருந்திய நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாத நிலையில் என்னைத் தொடர்பு கொண்டார்.
அவருக்கு கடவுச்சீட்டு கிடைக்க நான் உடனடியாக ஏற்பாடு செய்த உதவியால் அவர் இலங்கை பயணமானார்.
பொய் படத்தின் வசனங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.
தனது திறமையால் படிப்படியாக உயர்ந்த தாமிரா, தனது குருநாதர் பாலச்சந்தரையும இயக்குனர் சிகரம் பாராஜாவையும் வைத்து ரெட்டைச்சுழி எனும் திரைப்படத்தை இயக்கினார்.
அதன்பின் பாலச்சந்தரின் பட்டரையில் வளர்ந்த சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்துவரும் அன்புச் சகோதரர் சமுத்திரகனி அவர்களை நாயகனாகக் கொண்ட ஆண்தேவதை எனும் திரைப்படத்தை இயக்கினார்.
தொடர்ந்து குறும்படங்கள், வெப் சீரியல்கள் எடுத்து வந்தார்.
தமிழ் திரையுலகிற்கு தம் திறமையாலும் ஆற்றலாலும் இன்னும் பல சிறப்புக்களைச் சேர்க்க வேண்டிய தம்பி தாமிரா 52 வயதில் கொடிய கொரோனா தொற்றால் மறைந்த செய்தி மனதை வாட்டுகிறது.
அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்தும், நலம் விசாரித்தும் என்னிடம் அலைபேசியில் உரையாடும் தாமிராவின் குரலை இனி என்று கேட்பேன்?
தாமிராவை இழந்து அதிர்ச்சியில் திகைத்து நிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.04.2021
No comments:
Post a Comment