கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சிஜன்) தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
‘அனைத்து இந்திய அளவிலும் கூட, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; போதுமான அளவு இருக்கின்றது; ஆனால், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள்தான் தேவை’ என்று, இந்தியாவின் முன்னணி ஆக்சிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறி உள்ளார். இதுகுறித்த அவரது கருத்துகள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏட்டில், இன்று விரிவாக வெளிவந்து இருக்கின்றது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 7000 டன் ஆக்சிஜன் தொழிற்கூடங்களில் ஆக்கப்படுகின்றது. அதில், ஐநோக்ஸ் நிறுவனம் மட்டும், 2000 டன் ஆக்கித் தருகின்றது.
இந்தியாவில் ஆக்சிஜன் ஆக்குவதில், மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. அங்கே உள்ள நிறுவனங்கள், 25 முதல் 50 விழுக்காடு அளவிற்கு ஆக்சிஜனைக் கூடுதலாக ஆக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 27 நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் தேவைக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கின்றது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், இதேபோன்ற கொரோனா முற்றுகையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை.
அண்மையில், இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு 8828 மெட்ரிக் டன்னும், வேறு பல நாடுகளையும் சேர்த்து, மொத்தமாக 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது.
சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும்; ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள்; அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை, சென்னை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.04.2021
No comments:
Post a Comment