Friday, July 30, 2021

இலங்கையில் மனித உரிமை மீறல்கள். இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் என்ன? வைகோ கேள்விகள்; அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 1207
29.07.2021

கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

3. இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?

4. இலங்கையில் முஸ்லிம்கள் உடல் அடக்க உரிமைகளைத் திரும்பத் தருவதற்கும், தமிழர்களுடைய நிலங்களில் இலங்கைப் படையினர் நிலை கொண்டு, தமிழர்களைக்  கண்காணித்து வருவதையும், அவர்கள் மீது தொடர் அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும், தூதரக முறையில் இந்தியா ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டதா?

5. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக;

6. இல்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?

உள்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம்

1. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து,
இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு விசாரணை கோரி இருக்கின்றன.

2 முதல் 6 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சமயங்கள் கொண்ட இலங்கை நாட்டில், தமிழர் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்வதற்கும், பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கம் நிலவுதற்கும், அவர்களுடைய முன்னேற்றம், எதிர்காலக் கனவுகளை, ஒன்றுபட்ட இலங்கை என்ற நாட்டுக்கு உள்ளே நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்தியா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இந்தப் பொருண்மையில், இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றது; பல்வேறு நிலைகளில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்று உள்ளன; இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றது.

2019, 2020 ஆம் ஆண்டுகளில், இலங்கைக் குடிஅரசின் தலைவர் இந்தியா வருகை தந்தபோதும், 2020 செப்டெம்பர் 26 ஆம்நாள், இரண்டு நாடுகளின் பிரதமர்கள் இணையக் காணொளி வழியாக நடத்திய இருதரப்புப் பேச்சுகளிலும், 2021 ஜனவரி மாதம், இந்திய அயல் உறவு அமைச்சர் இலங்கை சென்றபோதும், மேற்கண்ட கருத்துகளை, இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் (United Nations Human Rights Council - UNHRC), 46 ஆவது கூட்டத் தொடரில், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிய வாழ்வு என்ற தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தியது.

தமிழர்களின் உரிமைகளை மதிக்கின்ற வகையில், உண்மையான அதிகாரப் பகிர்வுதான், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் என்பதையும் எடுத்துக் கூறியது.

கூடுதலாக, இலங்கை அரசு நல்லிணக்க  முயற்சிகளை மேற்கொள்ளவும், மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தவும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பன்னாட்டு சமுதாயத்துடன் இணைந்து அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும்,  விடுதலை உணர்வுடன், மனித உரிமைகள் பாதுகாப்புடன் வாழ வகை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.07.2021

சென்னை வான்ஊர்தி நிலையப் பெயர்ப் பிரச்சினை; வைகோ MP க்கு, அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்!

கடந்த ஜூலை 17 ஆம் நாள், தில்லியில், வான்ஊர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ,எம்.பி., அவர்கள் நேரில் சந்தித்து, ஒரு கோரிக்கை விண்ணப்பம் அளித்து இருந்தார். சென்னை வான் ஊர்தி நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட, அண்ணா, காமராஜர் பெயர்ப்பலகைகளை, மீண்டும் அதே இடங்களில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு, அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா விளக்கம் அளித்து, இன்று (28.07.2021) கடிதம் எழுதி உள்ளார். கடித விவரம்;

அன்புள்ள திரு வைகோ அவர்களுக்கு,

வணக்கம். சென்னை வான்ஊர்தி நிலையத்தின், அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையப் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டது குறித்து, ஜூலை 17 ஆம் நாள் தாங்கள் கடிதம் எழுதி இருந்தீர்கள்.

சென்னை வான்ஊர்தி நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பழைய உள்நாட்டு முனையக் கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. எனவே, காமராசர் உள்நாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், அந்தப் பெயர்ப்பலகை மீண்டும் பொருத்தப்படும்.

அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை, வான்ஊர்தி நிலையத்தில் வான் ஊர்திகள் வந்து இறங்குகின்ற பகுதியிலும், பழைய பன்னாட்டு முனையத்தின் நகர்ப்புறப் பார்வைப் பக்கத்திலும், அதே இடங்களில் அப்படியே உள்ளது. எனினும்,  அடுத்த கட்ட விரிவாக்கத்திற்காக, அந்தக் கட்டடமும் இடிக்கப்பட உள்ளது; கட்டுமானப் பணிகளைத் தொடங்குகின்றபொழுது, அந்தப் பெயர்ப்பலகை அகற்றப்படும்; கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றவுடன், அண்ணா பன்னாட்டு முனையம் என்ற பெயர்ப்பலகை, மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்படும்.

வான் ஊர்தி நிலையங்களைப் பராமரித்து வருகின்ற, இந்திய வான் ஊர்தி நிலையங்கள் ஆணையத்தின் வழக்கப்படி, இணையதளங்களில், காமராஜர் உள்நாட்டு முனையம் என்றோ, அண்ணா பன்னாட்டு முனையம் என்றோ குறிப்பிடுவது இல்லை; சென்னை பன்னாட்டு வான் ஊர்தி நிலையம் என்றே குறிப்பிடப்படுகின்றது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு, அமைச்சர் விளக்கம் எழுதி இருக்கின்றார்.

தலைமை நிலையம்
 மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’ 
சென்னை - 8
29.07.2021

இராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிகாற்றுத் திட்டம்; வைகோ MP கேள்விகள்; அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 1078
28 ஜூலை 2021

மாண்புமிகு எண்ணெய், இயற்கை எரிகாற்றுத் துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பாரா?

1. இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை, அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த, இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டம் குறித்த விவரங்கள்;

2. அந்தத் திட்டச் செலவுத் தொகை எவ்வளவு? 2021-22 ஆம் நிதி ஆண்டில், அதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கின்றீர்கள்?

3. இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் துறையில் ஏற்பு பெறப்பட்டதா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இந்தத் திட்டத்தால் பயன் பெறும் பகுதிகள் யாவை? அடுத்த மூன்று ஆண்டுகளில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும்?

எண்ணெய், இயற்கை எரிகாற்றுத் துறை இணை அமைச்சர் இராமேஸ்வர் தாலி விளக்கம்:

1,2 ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின், எண்ணுhர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டத்தின் (ETBNMTL) ஒரு பகுதியான, இராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே, 142 கிலோ மீட்டர் நீளம், 4 MMSCMD திறன் கொண்ட, இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டத்தை, 17.02.2021 அன்று, மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இராமநாதபுரம்-தூத்துக்குடி இடையேயான எரிகாற்றுக் குழாய் திட்டத்திற்கான மொத்தச் செலவு மதிப்பு 700 கோடி ரூபாய் ஆகும். 2021-22 ஆம் நிதி ஆண்டிற்கு, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

3,4 கேள்விகளுக்கு விளக்கம்:

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம், சுற்றுச்சூழல் ஏற்பு பெறுவதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறை அமைச்சிடம் (Ministry of Environment, Forest and Climate Change - MoEF) திட்ட வரைவு வழங்கி இருக்கின்றார்கள். அதற்கான சட்டப்பிரிவுகளை, அமைச்சகம் ஆய்வு செய்தது; இந்தத் திட்டத்திற்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை எனத் தீர்மானித்தது.

கேள்வி 5 க்கு விளக்கம்: இராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிகாற்றுத் திட்டத்தால், அந்த இரு மாவட்டங்களும் பயன்பெறும்; 30 பேருக்கு நேரடியாகவும், 75 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தத் திட்டத்தால் பயன்பெறும் தொழிற்கூடங்கள், எரிகாற்று வழங்குதல் பணிகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.07.2021

Wednesday, July 28, 2021

மார்கண்டேயா அணை குறித்து வைகோ கேள்விகள்: அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 737 (26.07.2021)

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா?

1. தமிழ்நாட்டு உழவர்களின் வேளாண்மைக்குத் தண்ணீர் வருவதைத் தடுக்கின்ற வகையில், கர்நாடக அரசு மார்கண்டேயா ஆற்றில் அணை கட்டியது குறித்து,  தமிழ்நாட்டு அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றதா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

3. தமிழ்நாடு எழுப்பி இருக்கின்ற கோரிக்கைகளை ஆய்வு செய்ய, ஒரு தீர்ப்புஆயம் அமைக்கப்படுமா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இல்லை என்றால், ஏன்? அதற்கான காரணங்களைத் தருக.

அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் விளக்கம்

1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.

1956 ஆம் ஆண்டு, மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் , 2019 நவம்பர் 30 ஆம் நாள், தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டுகள் அடங்கிய கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்பி இருக்கின்றது. அதே சட்டத்தின் 4 ஆவது பிரிவின் கீழ், பெண்ணையாறு அல்லது தென் பெண்ணை என அழைக்கப்படுகின்ற ஆற்று நீர்ப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து வைப்பதற்கு, தீர்ப்பு ஆயம்  அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்றான மார்கண்டேயா ஆற்றில், 500 MCFT நீர் தேக்கி வைப்பதற்காக, தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் யார்கோல் என்ற கிராமத்தில், கர்நாடக அரசின் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியம் ஒரு அணை கட்டுவதற்கு, அதே கோரிக்கை விண்ணப்பத்தில், தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றது.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஒன்றிய நீர்வள ஆணையத்தில் (Central Water Commission) தலைவர் தலைமையில், ஒரு பேச்சுவார்த்தைக் குழு, 20.1.2020 அன்று, ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ் அமைக்கப்பட்டது. இரண்டு கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், மேற்கொண்டு பேசுவதில் பயன் இல்லை என்று அந்தக் குழு கூறியதால், அடுத்து கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர், 16.03.2021, 08.07.2021  ஆகிய நாள்களில், மேற்கொண்டு தகவல்கள் கேட்டு, தமிழ்நாடு கர்நாடக அரசுகளுக்குக் கடிதம் எழுதி உள்ளார். அந்தத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.07.2021

ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை வசதி ஏற்படுத்துக! ரயில்வே அமைச்சரிடம், வைகோ MP கோரிக்கை!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (28.07.2021) ரயில்வே அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை:

மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

இதுவரையிலும், ரயில் என்ஜின்களில் கழிப்பு அறைகள் இல்லை; அடுத்த பெட்டிக்குச் செல்வதற்கான வழியும் இல்லை; இதனால், ரயில் என்ஜின் பைலட்டுகளும், உதவியாளர்களும், இயற்கை அழைப்புகளுக்காகத் தவிக்கின்ற நிலை உள்ளது. தொடரி நிலையங்களில் ரயில்கள் நிற்கின்ற நேரமும் குறைவாக இருப்பதால், அங்கே உள்ள கழிப்பு அறைகளைப் பயன்படுத்துவதற்கும் உரிய நேரம் கிடைப்பது இல்லை.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினையை, எங்களுடைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் முன்னணியினர், இன்று எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

2013-14 ஆம் ஆண்டுக்கான இந்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, என்ஜின்களில் கழிப்பு அறை வசதி ஏற்படுத்தப்படும் என, ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

2014 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் ஆணையம், இந்தப் பிரச்சினையை ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு நினைவூட்டி, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆனால், இதுவரை எந்தப் பயனும் இல்லை.

முன்பு தொடரிகளில், பயணச் சீட்டு பரிசோதகர்களுக்கு, படுக்கை வசதி கிடையாது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதுடன், ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கையும் விடுத்தேன். அதன் விளைவாக, அவர்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

அண்மைக்காலமாக, ரயில் என்ஜின் பைலட்டுகளாக பெண்களும் பயிற்சி பெற்றுப் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தாங்கள் இந்தப் பிரச்சினையையில் உடனடி கவனம் செலுத்தி, ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை நிலையம்
 மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8 
28.07.2021

Tuesday, July 27, 2021

காவிரி - குண்டாறு நதிகள் இணைப்பு: வைகோ MP கேள்விகள்: அமைச்சர் விளக்கம்!

நட்சத்திரக் குறி (உடுக் குறி) இடப்பட்ட, கேள்வி எண் 68.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பாரா?

1.  நாடு முழுமையும் நதிகளை இணைப்பதற்கு, அரசு ஏதேனும் திட்டம் வகுத்து இருக்கின்றதா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தேவை; புதிய திட்டமாக இருந்தால், இதற்கு முன்பு செயல்படுத்திய திட்டங்களில் இருந்து, எந்த அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் தேவை.

3. காவிரி - குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து, தமிழ்நாடு அரசிடம் இருந்து, ஏதேனும் திட்ட வரைவு வந்துள்ளதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தருக;

4. தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டங்கள்; குறிப்பாக, கோதாவரி-கிருஷ்ணா-காவிரி இணைப்பு; மற்றும், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை குறித்த விவரங்கள் தருக.

*இதுகுறித்து, 26.07.2021 அன்று, நாடாளுமன்றத்தில், நீர்வளத்துறை அமைச்சர் அளித்த அறிக்கை:*

*கேள்வி எண் 1,2 ஆகியவற்றிற்கு விளக்கம்:*

1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒன்றிய நீர்ப்பாசனத்துறை, நீர்வளம் மிகுதியான ஆற்றுப்படுகைகளில் இருந்து நீர்வளம் குறைவான ஆறுகளுக்கு நீரைப் பகிர்வதன் மூலம் நீர் வளங்களை மேம்படுத்துவது குறித்து, தேசிய முன்னோக்குத் திட்டம் (National Perspective plan-NPP) ஒன்றை வரைந்தது.  அந்தத் திட்டத்தின் கீழ், தேசிய நீர்வள முகமை (National Water Develooment Agency NWDA), 30 இணைப்புத் திட்டங்களை அடையாளங் கண்டது.

அவற்றுள் 16 திட்டங்கள் தென்னிந்தியாவிலும், 14 திட்டங்கள் இமயமலைஆறுகளின் பாசனப் பகுதிகளிலும் செயல்படுத்துவற்கான ஆய்வு அறிக்கை வரையப்பட்டது. அதுகுறித்த விவரங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளன.

*கேள்வி 3 க்கு விளக்கம்:*

வெள்ளப் பெருக்கின்போது காவிரி நீரை, தெற்கு வெள்ளாறு வரை கொண்டு போவதற்கான திட்டத்திற்கு, கொள்கை அளவில் ஏற்பு அளிப்பதுடன், நிதி உதவியும் கோரி, தமிழ்நாட்டு அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.

தேசிய முன்னோக்குத் திட்டத்தின்படி, காவிரி (கட்டளை)-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது, மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணைஆறு-காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.

இந்தத் திட்டம் குறித்து, தேசிய நீர்வள முகமையின் விரிவான அறிக்கை, இந்தத் திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்கு, 2020 ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  இந்த இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 4.48 இலட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.  மேலும், 2050 ஆம் ஆண்டு வாக்கில், கூடுதலாக 28 இலட்சம் மக்களுக்கு, மாதந்தோறும் 79 எம்சிஎம் நீர் வழங்கிட வகை செய்யும்; தொழிற்சாலைகளின் கூடுதல் தேவைக்காக, 139 எம்சிஎம் நீர் கிடைக்கும்.

*கேள்வி 4 க்கு விளக்கம்:*

தென்னிந்திய நதிகள் இணைப்பிற்கான 16 திட்டங்களுள் 12 திட்டங்கள், தெற்குப் பகுதிக்கானவை:

1. மகாநதி (மணிபத்ரா) - கோதாவரி (தௌலேஸ்வரம்) இணைப்பு
2. கோதாவரி (போலாவரம்) - கிருஷ்ணா (விஜயவாடா) ஆந்திர அரசு செயல்படுத்தி விட்டது.
3. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (புலிசிந்தலா) இணைப்பு
4. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) இணைப்பு
5. கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) - பெண்ணை ஆறு (சோமசீலா) இணைப்பு
6. கிருஷ்ணா ( ஸ்ரீ சைலம்) - பெண்ணை ஆறு இணைப்பு
7. கிருஷ்ணா (அலமாட்டி) - பெண்ணை ஆறு இணைப்பு
8. பெண்ணை ஆறு (சோமசீலா) - காவிரி (கல்லணை) இணைப்பு
9. காவிரி (கட்டளை) - வைகை - குண்டாறு இணைப்பு
10. பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு
11. நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பு
12. பெட்டி - வர்தா இணைப்பு

மேற்கண்ட திட்டங்களுள், ஒன்று முதல் பத்து வரையிலான திட்டங்களுக்கு, முதல்கட்ட ஆய்வுஅறிக்கை நிறைவு பெற்று, தொடர்புடைய மாநிலங்களுக்குத் தரப்பட்டு இருக்கின்றது.

மணிபத்ரா- ஈஞ்சம்பள்ளி அணைகள் இணைப்பில், பெரும்பகுதி நிலம் நீருக்குள் மூழ்குவதால்,  எஞ்சிய நீரை, கோதாவரியின் துணை ஆறான இந்திராவதி படுகைக்குத் திருப்பி விடுவது குறித்து  ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை; மாற்றுத் திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,  முன்னோக்கு அறிக்கை, தொடர்புடைய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட உள்ள ஆறுகளின் பட்டியல், இணைப்பில் தரப்பட்டு உள்ளது.

நதிகள் இணைப்பிற்கான சிறப்புக்குழு ( The special Committee for Interlinking Rivers -ILR), தொடர்புடைய மாநிலங்களின் கருத்துகளை ஆராய்ந்தபிறகு, அனைவருக்கும் இணக்கமான முறையில், திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான பணிகளை  விரைவுபடுத்தும்.

நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு படிக்கட்டுகள் உள்ளன. இணக்கத் தீர்வை ஏற்படுத்துவதற்கான கருத்துப் பரிமாற்றங்கள், திட்ட முன் வரைவுகள், தொடர்புடைய முகமைகளிடம் இருந்து இசைவு பெறுதல், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சகத்தின் ஏற்பு, பருவநிலை மாற்றங்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பு வழங்குதல், நீர்ப்பாசனம் தொடர்பான அறிஞர்களின் கருத்துகளைப் பெறுதல், வெள்ளத் தடுப்பு குறித்த நடவடிக்கைகள், நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல், அத்துடன் திட்டத்தைச் செயல்படுத்துவற்கான நிதிமுதல் பெறுவதற்கான ஏற்பாடுகள், இதுபோன்ற அனைத்துப் பணிகளும் நிறைவு பெற வேண்டும்.

எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கு இடையிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே,  செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.07.2021

Monday, July 26, 2021

இளங்குமரனார் புகழ், என்றென்றும் வாழ்க. வைகோ MP!

ஆயிரம் பிறை கண்ட அண்ணல் இளங்குமரனார், உடலால் தளர்வுற்ற போதிலும், உள்ளத்தால் தளராமல், இளங்குமரனாகவே வாழ்ந்து வந்தார். அவர் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.

கலிங்கப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். நீண்ட காலம் திருச்சியில் வாழ்ந்து, தமிழ்ப்பணி ஆற்றி, கடைசி ஐந்து ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்து மறைந்து இருக்கின்றார். அவருடன் பல மேடைகளில் பங்கேற்று இருக்கின்றேன்; அவரது குடும்பத்தாருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றேன்.

தமிழ் என்று தோள் தட்டி ஆடு
நல்ல தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு

என்று, தமிழின் நுண்மையையும், தொன்மையையும் கண்ட பூரிப்பில், தமிழுக்காக அரும்பாடுபட்டதோடு, ஆனந்தக் கூத்து ஆடி, அகம் மகிழ்ந்தவர். தமிழ் இலக்கண, இலக்கியங்கள் அனைத்தையும் ஒருசேர அச்சிட்டு, தமிழ் மறை என்றே பெயர் சூட்டி, அவற்றை மொத்தமாக வெளியிட்டார். ஏறத்தாழ, 17000 ரூபாய் மதிப்பிலான நூல்களை, 8000 ரூபாய் என்று விலையிட்டு, அவற்றை நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கி மகிழ்ந்தார்.

தமிழுக்காகவே தன்னை வாழ்வித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகிய பெருமக்களுடன் தம்மை வாழ்வித்துக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார். இரண்டறக் கலந்தவராய், இந்தப் பெருமக்களின் வழியில், தம் வாழ்நாளைச் செலவிட்டார்; 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அத்தனைத் தமிழ் நூல்களையும் தொகுத்து, பிழை திருத்தி, எள் அளவும் குறை இன்றி வெளியிடுவது என்பது, எளிய பணி அல்ல. அந்தப் பணியை முழுமையாகச் செய்து முடித்த மகிழ்வில், தமிழுக்காகவே வாழ்ந்த நிறைவோடு இன்று இயற்கை எய்தி உள்ளார். இளங்குமரனார் பணிக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். அன்னாரை, எவ்வளவு போற்றினாலும் தகும்.

ஆண்ட தமிழுக்கு அழிவு உண்டோ? மீண்டும் தமிழின் பொற்கால ஆட்சியைக் கொண்டு வருவோம் எனச் சூளுரைத்து, அதற்காகத் தம் வாழ்நாள் முழுமையும் அலைந்து திரிந்து, நூல்களைத் தேடிப் பிடித்து அச்சிட்டுத் தமிழுக்கு ஆக்கம் செய்த இளங்குமரனாரின் புகழ் நீண்டு வாழும்; தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்றாலும், ஈடுபாட்டாலும் நிறை வாழ்வு வாழ்ந்த அப்பெருமகனாரின் புகழ், என்றென்றும் வாழ்க என்று வாழ்த்துவோம்!

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.07.2021

சென்னை-பெங்களூரு தொழில் வணிக வழி அமைக்கும் பணி: வைகோ MP கேள்விகள்; அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 536

மாண்புமிகு தொழில் வணிகத்துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா?

1. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு, தொழில் வணிக வழி அமைக்கும் பணி, எந்தக் கட்டத்தில் உள்ளது? (Progress of Chennai-Bengaluru Industrial Corridor)

2. திட்டத்திற்கான மொத்தச் செலவுத் தொகை எவ்வளவு? இதுவரை எவ்வளவு செலவு செய்து இருக்கின்றீர்கள்? ஆண்டுவாரியான கணக்கு தேவை.

3. எந்த நாளில் இயங்கத் தொடங்கும்? விவரங்கள் தருக.

*தொழில், வணிகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் அளித்த விளக்கம்*

1. சென்னை பெங்களூரு வணிக வழி அமைக்கும் திட்டத்தின், முன்னோக்குப் பணிகள் நிறைவு பெற்று விட்டன. கீழ்காணும் மூன்று முனைகளில் (nodes), வளர்ச்சிப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 அ). ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணப் பட்டினம்
 ஆ). கர்நாடகத்தில் துமகூரு
 இ). தமிழ்நாட்டில் பொன்னேரி.

மேற்கண்ட முனைகளில், முதன்மைத் திட்டம் வகுத்தல் பணிகளும், அதற்கான, பொறிஇயல் கட்டுமானப் பணிகளும், கிருஷ்ணப்பட்டினத்திலும், துமகூருவிலும் நிறைவு பெற்று விட்டன.

2020 டிசம்பர் 30 ஆம் நாள், பொருள் ஆக்கம் தொடர்பான அமைச்சர் அவைக் குழு, மேற்கண்ட இரு முனைகளிலும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏற்பு வழங்கி விட்டது. மேற்கண்ட மூன்று முனைகள் குறித்தும், மேலும் சில தரவுகளைத் தருகின்றேன்.

1. கிருஷ்ணப் பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்): திட்ட சிறப்பு நோக்கு ஊர்தியால், (Project Special Purose Vehicle-SPV) திட்ட மேலாண்மை மதி உரைஞர்கள் (Project Management Consultant) தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 1814 ஏக்கர் நிலம் மாற்றி வழங்கப்பட்டு இருக்கின்றது. சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டு அறிஞர்கள் குழு (Expert Appraisal Committee), காடுகள் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்து, கொள்கை அளவில் ஏற்பு வழங்கி இருக்கின்றது.

2. துமகூரு (கர்நாடகா): திட்ட மேலாண்மை அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 1668 ஏக்கர் நிலம் மாற்றித் தரப்பட்டு விட்டது.


3. பொன்னேரி (தமிழ்நாடு): முதன்மைத் திட்டம் வகுப்பதற்கும், தொடக்க நிலைப் பொறிஇயல் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குமான மதி உரைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

2 மற்றும் 3 ஆவது கேள்விகளுக்கான விளக்கங்கள்:

சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டு அறிஞர்கள் குழு (Expert Appraisal Committee), 2020 டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் கூடியது; கிருஷ்ணப்பட்டினம், துமகூரு திட்டப் பணிகளுக்காக, ரூ 2,139.44  மற்றும் 1701.81 கோடி செலவுத் தொகைக்கு ஏற்பு வழங்கியது. இந்த இரண்டு முனைகளுக்கான சாலைப் பணிகளை, 36 முதல் 48 மாதங்களில் நிறைவு செய்ய, காலக்கெடு வகுக்கப்பட்டு உள்ளது.

சென்னை பெங்களூரூ தொழில் வணிக வழிக்காக, இதுவரை செலவு செய்யப்பட்டுள்ள தொகை விவரம் (ஆண்டுவாரியாக).

                                                      2018-19 2019-20 2020-21 மொத்தம்

1. கிருஷ்ணப்பட்டினம் முனை: 9.76           1.93 450.95 462.64 கோடி

2. துமகூரு முனை:                         4.43     4.49 584.24 594.44 கோடி

3. பொன்னேரி முனை:                  0         0.03         0.41       0.44 கோடி

மொத்தம்                              14.49 6.45           1,039.38         1060.02 கோடி

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
26.07.2021

Sunday, July 25, 2021

வைகோ MP கேள்விகள்; தொழில் வணிகத்துறை அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 537

மாண்புமிகு தொழில் வணிகத்துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பாரா?

1. முதன்முறை முயற்சியில் தொடங்கப்படுகின்ற நிறுவனங்கள் (Start up) என்ற திட்டத்தின் குறிக்கோள்கள் யாவை?

2. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தத் திட்டத்தின் கீழ், வணிகர்கள், தொழில் முனைவோர்களுக்கு, நிதி உதவிகளும், ஊக்கத்தொகைகளும், எந்த வகைகளில் வழங்கப்பட்டன?

3. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நிதி உதவி பெற்றோர் எத்தனை பேர்? அதுகுறித்த புள்ளி விவரங்கள் தேவை.

4. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் எவ்வளவு புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன?

தொழில் வணிகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் விளக்கம்

1. முதன்முறை முயற்சியாக புதிய நிறுவனங்களைத் தொடங்குதல் என்ற  (Start Up India) திட்டம், 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 26 குடியரசு நாளில் தொடங்கப்பட்டது.

வலுவான சூழலைக் கட்டமைப்பது, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது,  முதன்முறையாகத் தொழில் முயற்சிகளைத் தொடங்குவோருக்கு உதவிகள்அளிப்பது ஆகிய நடவடிக்கைகளால், பெரிய அளவில் புதிய வேலைவாய்ப்புகளைத் தோற்றுவித்து, நாட்டின் பொருள் ஆக்கத்தை வளர்ப்பது ஆகியவை, இந்தத் திட்டத்தின் முதன்மைக் குறிக்கோள்கள் ஆகும்.

2. இதற்காக, ரூ 10000 கோடி நிதியம் ஒன்றை, தொழில் மற்றும் உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கின்ற துறை ( Promotion of Industry and Internal Trade), 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம்   அறிவித்தது.

இந்தியாவில்  தொழில் வணிக வளர்ச்சிக்கு வலுவான சூழலைக் கட்டமைக்க, இந்த நிதி உதவிகள் மிகவும் தேவை. புதிய கண்டுபிடிப்புகளைத் தூண்டுவது, தொழில் முனைவோரை ஊக்குவிப்பது, வணிகம் வளர்ப்பது, பங்கு முதல் திரட்டுவது போன்றவை இதன் குறிக்கோள்கள் ஆகும்.

இந்த நிதியம், முதன்முறை முயற்சி தொழில் நிறுவனங்களில் நேரடியாக முதல் போடாது. ஆனால், செபியில் பதிவு பெற்ற, மாற்று முதல் நிதியங்களுக்கு (Alternate Investment Funds) நிதி உதவி அளிக்கும்.  சான்றாக, னுயரபாவநச குரனேள இல் முதல் போடும்போது, அவர்கள் அதற்கு மாற்றாக, இந்திய முதன்முறைத் தொழில் முனைவோரின் நிறுவனங்களில் பங்கு முதல் போடுவார்கள்.

தொழில் மற்றும் உள்நாட்டு வணிக ஊக்குவிப்புத்துறையில் (DPIIT- Department for Promotion of Industry and Internal Trade) பதிவு பெற்று, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இந்தத் திட்டத்தில் உதவிகள் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர்.

2021 ஜூன் 2 ஆம் நாள் நிலவரப்படி, செபியில் பதிவு பெற்ற, 72  மாற்று முதல் நிதியங்களுக்கு, சிட்பி (SIDBI) வங்கி, 5409.45 கோடி நிதி உதவி அளிக்க, ஒப்புக்கொண்டு உள்ளது. இந்த நிதியத்தில், 36,790 கோடி நிதி உள்ளது.

முதன்முறை தொழில் தொடங்குவோருக்கான நிதியில் இருந்து 1541 கோடி ரூபாய் எடுத்து, மொத்தமாக 5811 கோடி ரூபாய்கள், 443 முதன்முறை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

DPIIT ஊக்கத்தொகை விவரப் பட்டியல், இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. DPIIT, முதல்முயற்சி தொழில் தொழில் நிறுவனங்களுக்கான விதை நிதியம் (Startup India Seed Fund Scheme -SISFS) ஒன்றைத் தோற்றுவித்து இருக்கின்றது. அதன் வழியாக, கருத்து உருவிற்கான சான்றுகளை ஆக்குவதற்கு, 945 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்; சான்றாக, முன்னோடி வளர்ச்சி (Prototype develoment), சோதனைகள், சந்தை நுழைவு, வணிகமயம் ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள்.

இத்தகைய முயற்சிகள், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்; முதலீட்டாளர்களை ஈர்ப்பது, முதல் திரட்டுவது, பிற வணிக நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது போன்ற வழிமுறைகளைக் கற்றுத் தரும். இந்தத் திட்டம், அடுத்த நான்கு ஆண்டுகளில், 3600 தொழில்முனைவோருக்கு உதவியாக இருக்கும்.

2021 ஜூலை 15 ஆம் நாள் நிலவரப்படி, தொழில் முனைவோருக்கான விதை நிதியத்தின் திறன்ஆய்வு அறிஞர்கள், 2 தொழில் முனைவோருக்கு, ரூ 8 கோடி நிதி உதவி அளிக்கத் தேர்வு செய்துள்ளனர்.

3. 2021 ஜூலை 7 ஆம் நாள் நிலவரப்படி, தமிழ்நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், 2408 முதல் முயற்சி தொழில் நிறுவனங்கள், DPIIT ஊக்கத் தொகை பெறத் தகுதி பெற்று உள்ளன. ஆண்டுவாரியான விவரப் பட்டியல், இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

4. அதேபோல, 2021 ஜூலை 7 ஆம் நாள் நிலவரப்படி, தமிழ்நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், DPIIT பதிவு பெற்ற முதல் முயற்சித் தொழில் நிறுவனங்களில், 26327 பேர் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளளனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.07.2021

Saturday, July 24, 2021

கணேசமூர்த்தி எம்.பி., கோரிக்கை; ரயில்வே அமைச்சர் ஏற்பு!

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன், இன்று பகல் 12.30 மணி அளவில், புது தில்லி, ரயில்வேஅமைச்சகக் கட்டடமான ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்தார். அப்போது, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து, கீழ்காணும் கோரிக்கை விண்ணப்பத்தினை அளித்தார்.

தமிழ்நாட்டில், மாநில நெடுஞ்சாலை எண் 83 ஏ, ஈரோடு-தாராபுரம் சாலையுடன், கரூர் சாலையும் இணைந்து, ஈரோடு நகருக்குள் நுழையும் இடத்தில், 1932 ஆம் ஆண்டு கட்டப்பட்ட  ரயில்வே சுரங்கப்பாதை எண் 352, உயரம் குறைவாக இருக்கின்றது. அந்தக் காலத்தின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்றவாறு, 3.5 மீட்டர் உயரமும் 6 மீட்டர் அகலமும் கொண்டதாகக் கட்டப்பட்டது.

ஆனால், தற்போது இலட்சக்கணக்கான மக்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர். கனரக ஊர்திகளின் போக்குவரத்து பெருகி விட்டது. ஆனால், உயரம் குறைவாக இருப்பதால், கனரக ஊர்திகள், இந்த வழியாகச் செல்ல முடியவில்லை; திரும்பிச் செல்ல நேரிடுகின்றது; அதனால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது.

எனவே, இந்தப் பாலத்தை உடனடியாகப் புதுப்பித்துக் கட்ட வேண்டிய நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் ஆகியோருடன், மாநில நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் இணைந்து செயல்பட்டு, இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மேற்கண்ட ரயில்வே அதிகாரிகள் தகுந்த ஒத்துழைப்பு நல்கிடவும், தொடரித்துறையின் சார்பில் உரிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கிடவும் தாங்கள் ஆவன செய்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு கணேசமூர்த்தி கேட்டுக்கொண்டார்.

இந்தக் கோரிக்கை ரயில்வே அமைச்சர் உடனே ஏற்றுக்கொண்டு, மேற்கண்ட ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய ஆணைகளைப் பிறப்பித்தார். எனவே, விரைவில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.07.2021

ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயம் ஆகாது. வைகோவிடம், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதிமொழி!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும், இன்று பகல் 12.30 மணி அளவில், தில்லியில் ரயில்வே அமைச்சகக் கட்டடம் ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்தனர்.

அமைச்சர் அன்புடன் வரவேற்றார். அத்துடன், நான் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் செயலாளராக இருந்தேன்; அப்போது நீங்கள் பொடா சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தீர்கள்; அங்கிருந்து நீங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதங்களை எல்லாம், நான்தான் பிரதமரிடம் கொண்டு போய்க் கொடுப்பேன்; அவர் உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்து இருந்தார் என்பதை நான் அறிவேன்; நீங்கள் ஒரு கொள்கைக்காக வாழ்கின்றவர்; எந்தக் கட்டத்திலும், நீங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் என்பதை நான் அறிவேன். அதனால், உங்கள் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. இப்போது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் என்று கேட்டார்,

அமைச்சரிடம் வைகோ அவர்கள் முன்வைத்த வேண்டுகோள்:

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயம் ஆக்கப் போவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனால், தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது. அதைத் தனியார்மயம் ஆக்கினால், ஆட்குறைப்பு செய்து விடுவார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். தொழிலாளர்களின் நலன்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும்; எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆமாம்; நீங்கள் சொல்வது சரிதான். உலகத்திலேயே இதுபோன்ற தொழிற்சாலைகள், ஒன்பது நாடுகளில் மட்டும்தான்  இருக்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும், தனியாரிடம் கொடுக்க மாட்டோம்; என்று உறுதிமொழி அளித்தார். இந்தச் செய்தியை, சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிலாளர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாம் என்றும் சொன்னார்.

அமைச்சருக்கு வைகோ மிகவும் நன்றி கூறினார். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார்மயம் ஆவதைத் தடுத்து நிறுத்தியது போல், இன்றைக்கு, ஐசிஎஃப் தனியார் மயம் ஆவதைத் தடுத்த மகிழ்ச்சியை வைகோ வெளிப்படுத்தினார். 

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.07.2021

Thursday, July 22, 2021

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், வைகோ கோரிக்கை!

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். அப்போது அவர் விடுத்த கோரிக்கை:

“திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணி இடங்களுக்கான தேர்வுகளை,  ஜூலை 23 முதல் 31 வரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டின் மதுரைக் கோட்டமும், திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்ளே இடம் பெறுகின்றது.

கேரள மாநிலத்தில், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில், மதுரைக் கோட்டத்திற்கு உள்ளே ஒரேயொரு மையம் கூட இல்லை.  

எனவே, தமிழ்நாட்டு இளைஞர்கள், தேர்வுகளை எழுதுவற்காகக் கேரளத்திற்குச் சென்று, ஒரு வாரம் வரையிலும், விடுதிகளில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், கேரளாவில் கொரோனா தொற்று இன்னமும் கடுமையாகத் தாக்கிக் கொண்டு இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனவே, இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கின்றது.

ரயில்வே அதிகாரிகளின் இத்தகைய போக்கிற்கு நான் கடுமையான எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தக் கோட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதன் முதல் கட்டமாக, நாளை தொடங்க இருக்கின்ற இந்தத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்;  அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டில், சமூக இடைவெளியுடன், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போதுமான தேர்வு மையங்கள் அமைப்பதுடன், படித்து வேலை இல்லாமல் இருக்கின்ற, தமிழ்நாட்டின் தகுதி உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சம நீதி கிடைத்திட ஆவன செய்திடுமாறு, தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.”

இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2021

ஜிஎஸ்டி. இழப்பு ஈடு; மாநிலங்களுக்குத் தந்தது என்ன? வைகோ MP கேள்விகள், அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 198

கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. 2020-21, 2021-22 ஆம்  நிதி ஆண்டில், ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு ஈட்டுத் தொகை எவ்வளவு? மாநில வாரியாகப் பட்டியல் தேவை.

2. நடப்பு நிதி ஆண்டில், மாநிலங்களுக்குத் தர வேண்டிய தொகையை, ஒன்றிய அரசு முழுமையாக வழங்கி விட்டதா?

3. இல்லை என்றால், வேறு ஏதேனும் மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்தீர்களா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தரவுகள் தேவை.

4. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள், தாராள மருத்துவ உதவிகள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனவா?

5. அவ்வாறு இருப்பின், அதற்கு ஒன்றிய அரசின் விளக்கம் என்ன?

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்திரி எழுத்து மூலம் அளித்து இருக்கின்ற விளக்கம்

1 முதல் 3 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

மாநிலங்களுக்கு இழப்பு ஈடு வழங்குவது தொடர்பாக, 2017 ஜிஎஸ்டி சட்டத்தின் 8 ஆவது பிரிவின்படி, இழப்பு ஈட்டுத் தொகை, ஜிஎஸ்டி இழப்பு ஈட்டு நிதி என்ற தனிக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றது; அதே சட்டத்தின் பிரிவு 10(1) இன்படி, இது, பொதுக்கணக்கின் கீழ் வருகின்றது.

ஜிஎஸ்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளை, பிரிவு 10(2) இன்படி, ஒன்றிய அரசு ஈடு செய்யும்.

அதன்படி, 2017-18; 18-19; 19-20 ஆகிய நிதி ஆண்டுகளில், வழங்க வேண்டிய இழப்பு ஈட்டுத் தொகையை முழுமையாக வழங்கி இருக்கின்றோம். ஆனால், பொருளாதாரச் சூறாவளி காரணமாக, ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது; அதே வேளையில், கூடுதல் இழப்பு ஈட்டுத் தொகைக்கான தேவை ஏற்பட்டு விட்டது. 2020 ஏப்ரல் 20 முதல், 2021 மார்ச் முடிய, 91000 கோடி ரூபாய், மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், வருவாய் பற்றாக்குறை காரணமாக, முழுத்தொகை வழங்கப்படவில்லை. மாநிலங்களுக்குத் தர வேண்டிய தொகை குறித்த விவரங்கள், இத்துடன் இணைப்பில் உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.

4,5 கேள்விகளுக்கான விளக்கம்:

ஜிஎஸ்டியை நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் விளைவாக ஏற்பட்ட இழப்புக்கு, 2017 ஆம் ஆண்டு சட்டத்தின்படி ஈடு கோரி, சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன; அத்துடன், ஃஎப்ஆர்பிஎம் வரையறையைக் கூட்ட வேண்டும்; மருத்துவக் கருவிகளை வாங்குவதற்குக் கூடுதல் நிதி தர வேண்டும்; மானியப் பகிர்வு குறித்து, பொதுவான கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

ஒன்றிய அரசு அதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது; இயன்ற அளவு உதவிகள் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பு ஈடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து, ஜிஎஸ்டி மன்றத்தின் 41 மற்றும் 42 ஆவது கூட்ட அமர்வுகளில், விரிவாகப் பேசி இருக்கின்றோம்.

2020-21 ஆம் நிதி ஆண்டில், இழப்பு ஈடு தருவதற்கான நிதிப்பற்றாக்குறை காரணமாக, ஒன்றிய அரசு, 1.1 இலட்சம் கோடி ரூபாய் கடன் திரட்டி, அந்தத் தொகையை மாநிலங்கள் திரும்பச் செலுத்த வேண்டிய கடனாக வழங்கி இருக்கின்றது.

ஜிஎஸ்டி மன்றத்தின் 43 ஆவது கூட்டத்தில் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆண்டைப் போலவே, நடப்பு நிதி ஆண்டில், மேலும் 1.59 இலட்சம் கோடி ரூபாயை, ஒன்றிய அரசு, பொதுச்சந்தையில் திரட்டி, அந்தத் தொகையை மாநில அரசுகள் திரும்பச் செலுத்த வேண்டிய கடனாக வழங்கும். அதன்படி, 15.07.2021 அன்று, ரூ 75000 கோடி, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. கூடுதலாக, இழப்பு ஈட்டு நிதியில் உள்ள இருப்பைப் பொறுத்து, வழக்கமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பு ஈட்டுத் தொகையையும், ஒன்றிய அரசு வழங்கும்.

மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு தர வேண்டிய இழப்பு ஈட்டுத் தொகை பட்டியல்படி, தமிழ்நாட்டுக்கு, ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை ரூ 6155 கோடியும்; 2021 ஏப்ரல் மே மாதங்களில் ரூ 3574 கோடியும், ஒன்றிய அரசு தர வேண்டும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2021

கொரோனா தொற்று: நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், வைகோ உரை!

கொவிட் 19 கொரோனா தீ நுண்மி குறித்து, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், நேற்று (20.07.2021) நடைபெற்ற விவாதத்தில், வைகோ பங்கேற்று ஆற்றிய உரை.

“நான் எடுத்த எடுப்பிலேயே, இந்தக் கொடிய கொள்ளை நோயைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கும், தங்களை ஒப்படைத்துக் கொண்டு உழைக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், யாரெல்லாம் உயிர் நீத்தார்களோ, அவர்களை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் கல்லூரியில் பொருளாதாரம் படித்தபோது, அந்தத் துறையின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவரான மால்தஸ் சொன்ன கொள்கை, இப்படியும் நடக்குமா? என்று என்னைத் திகைக்க வைத்தது.

மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகும்; ஒரு பெரிய குண்டு வெடிப்பு ஏற்படுவது போல, ஏதோ ஒரு வழியில் இயற்கை மக்களைக் கொல்லும். அதை யாராலும் தடுக்க முடியாது. போர்க்களங்களும், கொடிய கொள்ளை நோய்களும்தான், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறுகின்றார்.

அதன்பிறகு நான் ஆராய்ந்து பார்த்ததில், மால்தஸ் சொன்னதுதான் உண்மை என்பதைப் புரிந்து கொண்டேன். கடந்த பல நூற்றாண்டுகளில், கோடானுகோடி மக்கள், கொள்ளை நோய்களால்தான் இறந்து போயிருக்கின்றனர்.

அதுபோல, இப்போது வந்திருக்கின்ற கொவிட் 19 தீ நுண்மி, சீன நாட்டின் ஊஹான் நகரில் இருந்து புறப்பட்டது என்று, ஆதாரங்களுடன் கூறுகின்றார்கள். அதே சீன நாட்டில், இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துவுக்கு முந்தைய 3000 ஆண்டில், அமின் மங்கா என்ற பகுதியில் தோன்றிய கொள்ளை நோய், ஒரு இலட்சம் பேரைக் கொன்று குவித்தது. இதனை, சிர்லா என அழைத்தார்கள். இறந்தவர்களுடைய உடல்களை, ஒரே இடத்தில் போட்டு எரித்தார்கள். அதன்பிறகு, அந்தப் பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை.  

அடுத்து, கி.மு. 430 இல், ஏதென்ஸ் நகரில் ஏற்பட்ட கொள்ளை நோய், ஐந்து ஆண்டுகள் நீடித்தது. ஒரு இலட்சம் பேர் இறந்தார்கள்.

அடுத்து, கி.பி. 165 முதல் 180 வரை ரோமப் பேரரசில், ஆண்டோனைன் பிளேக் என்ற நோய் பரவிற்று. உயிர்களைச் சூறையாடியது. ஐம்பது இலட்சம் பேர் இறந்தார்கள்.

கி.பி.250 இல், ரோமாபுரியில் மட்டும், சைபிரியான் பிளேக் நோயில், 5000 பேர் இறந்தார்கள். நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, இறந்தவர்களின் உடல்கள் மீது, கெட்டியான சுண்ணாம்பைக் கொண்டு பூசினார்கள்.

அடுத்து, கி.மு. 541, 552 இல், பைசாண்டியப் பேரரசின் எல்லைக்கு உள்ளே, ஜஸ்டினியன் பிளேக் தொற்று பரவிற்று; 10 விழுக்காடு மக்கள் இறந்து போனார்கள்.

1346 முதல் 1353 வரை, கருப்பு மரணம், ஆசியாவில் இருந்து ஐரோப்பாவுக்குப் பரவியது; அந்தக் கண்டத்தின் மக்கள் தொகையில் சரிபாதிப்பேரைக் கொன்றது.

பின்னர் மெக்சிகோவிலும், மத்திய அமெரிக்க நாடுகளிலும், 1545 முதல் 1548 வரை, கோகோ லிஸ்ட்லி எனும் கொள்ளை நோய், ஒரு கோடியே 50 இலட்சம் பேரைக் கொன்றது.

அடுத்து, 16 ஆம் நூற்றாண்டில், அமெரிக்க பிளேக் எனும் கொள்ளை நோய், மேற்கு அரைக்கோளப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களுள் 90 விழுக்காட்டினரைக் கொன்றது.

1665-66 ஆம் ஆண்டுகளில், லண்டனில் பிளேக் நோய் பரவியது. சார்லஸ் மன்னன், மக்களை வெளியேற்றினான். மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் இறந்து போனார்கள்.

மார்செய்ல் பிளேக் தொற்று, 1720-23 ஆம் ஆண்டுகளில், ஒரு இலட்சம் பேரைக் கொன்றது.

1770-72 ஆம் ஆண்டுகளில், ரஷ்யா பிளேக் தொற்றில், ஒரு இலட்சம் பேர் இறந்தார்கள்.

1793 இல், ஃபிலடெல்ஃபியா மஞ்சள் காய்ச்சலில் 50000 பேர் இறந்தார்கள்.

1889-90 ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் ஃபுளூ கொள்ளை நோயில், 10 இலட்சம் பேர் இறந்தார்கள்.

1916 இல், அமெரிக்காவில் போலியோ இளம்பிள்ளைவாதம் தாக்கியதில் ஒரு இலட்சம் பேர் இறந்தார்கள். 1918-1920 ஆம் ஆண்டுகளில், ஸ்பானிஷ் ஃபுளூ காய்ச்சல், வட துருவத்தில் இருந்து உலகின் தென் கடல் பகுதிகள் வரை பரவியது. ஐந்து கோடிப் பேர் இறந்தார்கள்.

1957-58 களில், சீனாவில் இருந்து பரவிய, ஆசிய ஃபுளூ காய்ச்சலில், பத்து இலட்சம் பேர் இறந்தார்கள்.

1981 முதல் இன்று வரை, எய்ட்ஸ் நோயால் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள்.

2009-2010 ஆம் ஆண்டுகளில், கினி பன்றிக் காய்ச்சலில், இரண்டு இலட்சம் பேர் இறந்தார்கள்.

2014-16 இல், மேற்கு ஆப்பிரிக்காவில், எபோலா கொள்ளை நோய் தாக்கி, 11000 பேர் இறந்தார்கள்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள கொள்ளை நோயில், உலகம் முழுமையும் 40 இலட்சம் பேர் இறந்துள்ளனர்.

இனி, மூன்றாவது அலை தாக்கக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

அதை எதிர்கொள்வதற்குத் தேவையான உயிர்க்காற்று (ஆக்சிஜன்) மூச்சுக் கருவிகள் (வெண்டிலேட்டர்கள்) எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான சடலங்கள் கங்கையில் மிதக்கின்ற காட்சிகள், பதற வைக்கின்றது.

அடித்தட்டுத் தொழிலாளர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உயிர்க்காற்று ஆக்குவதற்கும், மூச்சுக்கருவிகளும் செய்வதற்கு,ஒன்றிய அரசு உதவிட வேண்டும். செங்கல்பட்டிலும், நீலகிரி மாவட்டம் குன்னூரிலும், அத்தகைய ஆய்வுக்கூடங்கள் இருப்பதை, உறுப்பினர் சிவா அவர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.

இத்தகைய மருத்துவ வசதிகள், ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும்; தொழிலாளர்கள், குக்கிராமங்களில் வசிப்பவர்கள், நகரங்களில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு, உயிர்க்காற்றும், உயர்தர மருத்துவமும் கிடைப்பதற்கு, அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில், நடுத்தரக் குடும்பத்தினர், ஏழைகள் கட்டணம் செலுத்த முடியவில்லை. அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்பதே நமது குறிக்கோள் ஆக இருக்க வேண்டும்.”

வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8
‘தாயகம்’
21.07.2021

Tuesday, July 20, 2021

தியாகப் பெருநாள் வாழ்த்து - வைகோ MP!

ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றவும் உலகெங்கும் நினைவுகூரப்படுகின்றது. இந்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது ஆகும்.

நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், அரபா பெருவழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

மதச்சார்பின்மைதான் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கின்ற அரணாகும். அதனைத் தகர்பதற்கு அராஜக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசே பக்க பலமாகச் செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, விபரிதமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.

இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
20.07.2021

Monday, July 19, 2021

இந்திய ஒன்றிய வான் ஊர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆதித்ய சிந்தியாவுடன் வைகோ சந்திப்பு! சென்னை வானூர்தி நிலையங்களுக்கு மீண்டும் அண்ணா காமராஜர்‌ பெயரை விரைந்து சூட்டிட கோரிக்கை!

ஒன்றிய அரசின், வான் ஊர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவர்களை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (19.07.2021) மாலை 4.30 மணிக்கு, தில்லி ராஜீவ் காந்தி பவனில் உள்ள, அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். அமைச்சருக்கு பட்டு ஆடை அணிவித்துத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது வைகோ, அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோள்:

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய பெருமக்கள், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள். இவ்விரு தலைவர்களும், உலகத் தமிழர்களின் போற்றுதலுக்கு உரியவர்கள்.

சென்னை வான்ஊர்தி நிலையத்தின் பன்னாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்றும்; உள்நாட்டுப் போக்குவரத்து முனையம், காமராசர் உள்நாட்டு முனையம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரு தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்த பெயர்ப்பலகைகளை, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, திடீரென நீக்கிவிட்டார்கள். அதனால், உலகம் முழுமையும் தமிழர்கள் கொந்தளித்தனர். எங்கள் இயக்கத்தின் சார்பில், வான் ஊர்தி நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பலத்த கண்டனம் தெரிவித்தன.

வான் ஊர்தி நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; அந்தப் பணி நிறைவு பெற்றதும், இரண்டு தலைவர்களின் பெயர்ப்பலகைகள் மீண்டும் பொருத்தப்படும் என, ஒன்றிய அரசின் வான்ஊர்தி போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்தது.

ஆனால், அடுத்த சில மாதங்களில், இணையதளங்களில் இருந்தும், இரு தலைவர்களின் பெயர்களையும் ஓசை இன்றி நீக்கிவிட்டனர். நீக்க வேண்டும் என, யாரும் கோரிக்கை வைக்கவில்லை. தமிழக அரசிடம் கலந்து பேசவும் இல்லை. இது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்ற செயல்; பெரும் வேதனை அளிக்கின்றது.  

எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி, அண்ணா, காமராசர் பெயர்களை மீண்டும் சூட்டிட ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ, அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து ஆய்வு செய்வதாக, அமைச்சர் தெரிவித்தார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8                                                    
19.07.2021

Sunday, July 18, 2021

தலைமை கழக அறிவிப்பு. நாடாளுமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம்! வைகோ MP பங்கேற்பு!

இன்று ஜூலை 18, முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்பாடு செய்து இருந்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமை வகித்தார். மாநிலங்கள் அவை முன்னவர் பியுஷ் கோயல் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சி நிறைவு பெறுகின்ற வேளையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் வந்து பங்கேற்றார்.  

கூட்டம் முடிகின்ற வேளையில் பேசிய கட்சிகளின் உறுப்பினர்களைப் பார்த்து, குறைந்த நேரம் பேசுங்கள் என்று பிரகலாத் ஜோஷி சொன்னபோது, வைகோ எதிர்ப்புத் தெரிவித்தார். 

அதன்பிறகு அவர் பேசியதாவது:-

“இந்தக் கூட்டத்தில் ஒரு கட்சிக்கு ஒருவரைத்தான் பேச அனுமதித்திருக்க வேண்டும். பல கட்சிகளில் இரண்டு உறுப்பினர்களைப் பேச அனுமதித்தீர்கள். 

அதனால், எங்களைப் போன்ற மற்ற கட்சிகளுக்கு நேரத்தைக் குறைக்கின்றீர்கள். 

இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகின்றீர்கள். 

சமூக நீதியை, சவக்குழிக்கு அனுப்ப முயற்சிக்கின்றீர்கள்.  

எண்ணற்ற தலைவர்களும், தொண்டர்களும் எத்தனையோ தியாகங்கள் செய்து விடுதலை பெற்றோம். 

இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் என்றால், இன்றைய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும். 

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு,ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றீர்கள். 

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், நீட் தேர்வு 13 மாணவ, மாணவியரின் உயிர்களைப் பறித்து விட்டது. 

காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

கொழுந்து விட்டு எரிகின்ற மேகே தாட்டு அணைப் பிரச்சினையில், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துக் கருத்துச் சொல்ல, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.°டாலின் அவர்கள் ஒரு குழுவை அனுப்பினார். நானும் அந்தக் குழுவில் இடம் பெற்றேன். மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று, அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சொன்னார். ஆனால், கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியைச் சந்திக்கின்றார். மேகேதாட்டுஅணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். 

முயலோடு சேர்ந்து ஓடுவது, வேட்டை நாயோடு சேர்ந்து துரத்துவது போன்ற அணுகுமுறையை, ஒன்றிய அரசு பின்பற்றி வருகின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டும். ஜனநாயகத்தைக் காக்கின்ற அணுகுமுறை வேண்டும்.”

இவ்வாறு வைகோ பேசினார். 

கூட்டம் முடிந்தவுடன், வைகோ அவர்கள் அருகில் வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வைகோ அவர்களிடம் உடல் நலம் விசாரித்தார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8
‘தாயகம்’
18.07.2021

மீனவர்களை ஒடுக்கும் கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன்வரைவை திரும்பப் பெறுக. வைகோ MP அறிக்கை!

பா.ஜ.க. அரசு ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது.

மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன் பிடித் தொழிலுக்கு இச்சட்ட முன்வரைவு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றது.

இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்து, நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என்று குறிக்கப்படுகிறது.

இதில் பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்கக் கூடாது. கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப்படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். மீன் பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப் பொருத்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, “வணிகக் கப்பல் சட்டம் 1958” இன் கீழ் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே மீன் பிடி உரிமங்கள் கொடுக்கப்படும்.

இதன்படி பதிவு செய்ய வேண்டுமானால் கப்பலில் வேலை செய்யும் மாலுமி கட்டுமரத்திலும் கூட இருக்க வேண்டும். கட்டுமரம், படகு இயக்க ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும்.

இவை எதுவுமே பாரம்பரிய மீன்பிடிக் கட்டுமரங்களில் இருந்ததும் இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. ஆனால் புதிய சட்ட முன்வரைவில் இடம்பெற்று இருக்கின்றன.

12 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழமான நல்ல மீன்கள் நிறைந்துள்ள பகுதியில் அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உள்ளூர்  பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி இல்லை.

தடையை மீறிச் செல்லும் மீனவர்கள் தண்டனைக்குள்ளாவர்கள். மீன் வளத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கலன்களை ஆய்வு செய்ய இந்த முன்வரைவு அதிகாரம் அளிக்கிறது. இச்சட்டத்தை மீறும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கவும், 5 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கவும் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய கடல் எல்லைக்குள் சட்டத்தை மீறி பன்னாட்டு கப்பல்கள் பதிவு செய்யாமல் கட்டுப்பாடற்ற முறையில் மீன் வளத்தை கொள்ளை அடிப்பதை இச்சட்டம் தடை செய்யும். மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறி கடல் மீன் வளச் சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது.

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தை பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றிய அரசு உண்மையிலேயே நமது கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீனவர்கள் நலனுக்காகவும் சட்டம் இயற்றக் கருதினால் கடலோர மாநில அரசுகள் மற்றும் மீனவர் நலச் சங்கங்கள், மீனவ மக்கள் பிரதிநிதிகள் குழுவை அமைத்து, கருத்துகளைப் பெற்று சட்ட முன்வரைவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.07.2021

மேகே தாட்டு அணை: தமிழ்நாட்டுக்கு அநீதி கட்டக் கூடாது! - வைகோ MP!

இன்று (16.07.2021) பகல் 1 மணி அளவில், தில்லியில், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களை, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் குழு சந்தித்தது. அப்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அமைச்சரிடம் உரைத்த கருத்துகள்:

“மனித வாழ்க்கையின் உயிர்நாடி தண்ணீர் ஆகும். நதிகளை இணைக்க வலியுறுத்தி, நானும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தமிழ்நாட்டில் நீண்ட நடைபயணங்களை மேற்கொண்டு பரப்புரை செய்தோம். நமது குடிஅரசின் முன்னாள் தலைவர், மறைந்த அப்துல் கலாம் அவர்கள், எதிர்காலத்தில் தண்ணீருக்காகத்தான் போர்கள் நடக்கும் என்று சொன்னதை, நினைவூட்ட விரும்புகின்றேன். மாநிலங்களுக்கு இடையே, தண்ணீருக்காக ஏற்பட்டுள்ள மோதல்களின் விளைவாகத்தான், அவர் அப்படிக் கூறினார்.  

இந்தப் பின்னணியில், மேகேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகும். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்தால், இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி விடும்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி மக்கள் வேலை இழந்து விடுவார்கள்; வாழ்க்கை ஆதாரங்களை இழந்துவிடுவார்கள்.

எனவே, ஒன்றிய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக இருந்தால், தமிழ்நாடு மட்டும் அல்ல; ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும். இந்தப் பிரச்சினையை நாம் கூட்டாகச் சேர்ந்துதான் எதிர்கொள்ள வேண்டும்.

2020 ஆகஸ்ட் மாதம், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடகத்தின் பாசனப் பரப்பை விரிவுபடுத்துவதே நமது நோக்கம்; அதற்காக, மேகே தாட்டுவில் அணை கட்டுவோம் என்று சொன்னார். 2020 செப்டெம்பர் மாதம், தில்லிக்கு வந்து, அணை கட்டுவதற்கு அனுமதி கோரினார்.

அதன் தொடர்ச்சியாக, 2020 நவம்பர் 18 ஆம் நாள், அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜார்கிஹோலி, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் சென்று, ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களைச் சந்தித்து, அணை கட்ட ஒப்புதல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு, தனது ட்விட்டர் பதிவில், கர்நாடக மாநில நீர்த் திட்டங்களுக்கு, ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.

அணை கட்டுவதற்காக, கர்நாடக அரசு ரூ 5000 கோடியை ஒதுக்கியது. பின்னர், திட்ட மதிப்பீட்டை 9000 கோடியாக உயர்த்தி இருக்கின்றது. ஏப்ரல் 14 ஆம் நாள், மே கேதாட்டு பகுதியில், அணை கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு இருப்பதாக, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் செய்தி வந்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்மண்டல அமர்வு, இந்தப் பிரச்சினையைத் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு, கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்க தீர்ப்பு ஆயத்திற்கு வருமாறு கர்நாடக அரசுக்கு ஆணை பிறப்பித்தது. இது தொடர்பாக, விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இன்றி, மேகே தாட்டு அணையைக் கட்ட முடியாது என்று, அந்தக் குழு அறிக்கை தந்தது.

ஆனால், தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம், தமிழ்நாடு அரசின் கருத்து எதையும் கேட்காமல், அவர்கள் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து விட்டது.

கர்நாடக மாநிலம், தனது பாசனப் பரப்பை, 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்று காவிரி நதிநீர் தீர்ப்புஆயம், இடைக்கால ஆணை பிறப்பித்து இருந்தது. ஆனால், கர்நாடகம், தனது பாசனப் பரப்பை, 18.85 இலட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தி இருக்கின்றது. அது மட்டும் அல்ல, உடனடியாக 21.1 இலட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக 30 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவுபடுத்தவும் திட்டம் வகுத்து உள்ளனர். அதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல புதிய ஏரிகள், பாசன நீர்நிலைகளைப் புதிதாக அமைத்து உள்ளது.

1971 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பரப்பு 25.03 இலட்சம் ஏக்கராக இருந்தது; நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், அதை 24.71 இலட்சம் ஏக்கராகக் குறைத்துவிட்டது. அதுவும், தற்போது, 16 இலட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது.

இது, கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் சேர்ந்து நடத்துகின்ற கூட்டுச் சதி ஆகும்.

தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தில்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, மேகே தாட்டு அணை கட்டக் கூடாது; அப்படிக் கட்டினால், தமிழ்நாட்டுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை எடுத்துக் கூறினார்.

மேகேதாட்டுவில் அணை கட்டினால், காவிரி நதிநீரில், தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை, வெறும் கானல் நீர் ஆகி விடும்.”

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
 ‘தாயகம்’
சென்னை – 8
16.07.2021



MEKADATU DAM   -  INJUSTICE TO TAMIL NADU  - 
SHOULD NOT BE CONSTRUCTED
 
Views of MDMK Party
Presented by Mr. Vaiko, MP & General Secretary, MDMK Party
To Mr. Gajendra Singh Shekhawat, Hon’ble Minister of Jal Shakti n the All Party Meeting held on 16.07.2021 at New Delhi
 
Water is the elixir of life. To this cause myself and my party workers from MDMK have taken a long march walking thousands of Kilometers across Tamil Nadu for the cause of inter linking river waters. At this hour of crisis, I recall what our former President late Dr. Abdul Kalam said “future wars would be over water". May be he came to such a conclusion based on the prevailing inter-state water problems in India. In the backdrop of this, Karnataka’s initiative in constructing the dam only obstructs the rightful needs of the people of Tamil Nadu. The denial of water to Tamil Nadu will turn lakhs of acres of fertile land into barren land besides rendering a huge population of our farmers jobless, taking away their livelihood.  This is not only a blow on Tamil Nadu but to the agrarian economy of India as a whole as India’s productivity in agriculture is set to suffer if the Central government renders any tacit support to Karnataka. This is viewed as a gross injustice to the people of Tamil Nadu.  Let us put an end to it collectively. 
In August, 2020, the Chief Minister, Mr Yedurriayappa while addressing the press stated that Mekadatu dam will be constructed by the Government and to irrigate our areas is our motto. In September 2020,  the CM of Karnataka came to Delhi and sought sanction for the dam. In continuation of the same on Nov18, 2020 the then Karnataka irrigation Minister Tyagi Holie  and Union minister hailing from  Karnataka Mr Pralhad Joshi accompanied both of them met the Union Minister Jal Sakthi Minister Mr. Gajender Singh Sekhawat and then in his twitter tweeted: Gajendra Singh Shekhawat,  Karnataka State irrigation programme, Central Government will give full sanction.  The Karnataka Government had an outlay of Rs 5000 cr for the construction of the dam and now it has been enhanced to Rs.9000 cr.   According to Times of India April 14 issue, materials have been collected for construction of dam. 
Then the National Greens Tribunal (Southern Range) suo motu took up the matter and issued ban on the attempts of attempts of Karnataka government. Further, an investigation committee was also formed to go into the matter.  They said, without getting environment and forest departments clearance,  Mekadatu dam should not be constructed.  But the main Tribunal National Greens Tribunal at Delhi, without eliciting TN’s opinion cancelled the Southern’s Tribunal’s order.  
Cauvery Tribunal in its interim order declared that Karnataka should not extend irrigation over and above 11.2 lak acres but Karnataka state enhanced it to 18.85 lakh acres for irrigation. Not only that it has also enhanced to 21.1 lac acres and they have targeted 30 lac acres in the next five years.   For the past two years, new water bodies have been constructed.  As far as TN irrigated land is concerned, it had 25.3 lakh acres in 1971.  The Cauvery Tribunal in its final award reduced to 24.71 lakh acres. That has further depleted to 16 lakh acres.  It is a tacit conspiracy between the Union Government and Karnataka Government.
Hon’ble Chief Minister of Tamil Nadu, Mr. Stalin came to Delhi and met the Hon’ble Prime Minister and expressed his opposition and reservation to the construction of Mekadatu dam and  emphasized the serious issue of this irrigation problem.
If Mekadatu dam is constructed 177.25 TMC water as per  The Supreme Court order for Tamil Nadu will become a mirage.

Head Quarter
Marumalarchi Diravida Munnetra Kazhagam
Thayagam
Chennai
16.07.2021

Thursday, July 15, 2021

என்.சங்கரய்யா நூறாவது ஆண்டு பிறந்தநாள். வைகோ MP நேரில் வாழ்த்து!

இன்று 15.07.2021 காலை 9 மணி அளவில், குரோம்பேட்டையில் உள்ள தோழர் என்.சங்கரய்யா அவர்கள் இல்லத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், கழக நிர்வாகிகளும் சென்று தோழர் சங்கரய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் இல்லத்தினரும் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை கனிவுடன் வரவேற்றார்கள்.

நூற்றாண்டு பிறந்தநாள் விழா காணும் பொதுஉடைமைப் புரட்சியாளர் என்.சங்கரய்யா அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பட்டாடை அணிவித்தும், மல்லிகை மலர் மாலை அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களுடனும், அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடனும் உரையாடிவிட்டு பொதுச்செயலாளர் அவர்கள் அங்கிருந்து விடை பெற்றார்.

கழகப் பொதுச்செயலாளர் அவர்களுடன் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராசேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மா.வை.மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஊனை ஆர்.இ.பார்த்திபன் ஆகியோரும், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக, பகுதிக் கழக நிர்வாகிகளும், அணிகளின் பொறுப்பாளர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.07.2021

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் வைகோ மாலை அணிவித்து மரியாதை!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை - கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், வடசென்னை மேற்கு டி.சி.இராசேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், தென்சென்னை மேற்கு வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு கிழக்கு ஊனை ஆர்.இ.பார்த்திபன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tuesday, July 13, 2021

தெற்கு ஆப்பிரிக்காவில் கலவரம்; இந்தியர்களைப் பாதுகாத்திடுக. வைகோ MP அறிக்கை!

தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா, 1999 ஆம் ஆண்டு, ஆயுதம் வாங்கிய போது, 2 பில்லியன் டாலர் கையூட்டாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அது தொடர்பான, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், ‘கொரோனா காலத்தில் சிறையில் அடைத்து, என்னைக் கொல்ல முயற்சிக்கின்றார்கள்; எனவே, நான் கைதாக மாட்டேன்’ என அவர் அறிவித்தார். தண்டனையை ஒத்தி வைக்கக் கோரிய அவரது மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதனால், ஜூலை 7 ஆம் தேதி இரவு, கைதானார்.

‘அவர் குற்றம் அற்றவர்; தற்போதைய ஆட்சியாளர்கள் அவரைப் பழிவாங்க முயற்சிக்கின்றார்கள்; விடுதலை செய்ய வேண்டும்’ எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடைகள், வணிக நிறுவனங்களுக்கு உள்ளே புகுந்து, பொருள்களைச் சூறையாடி வருகின்றார்கள்; கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்தத் தாக்குதல்களால், அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. துணிந்தவர்கள், துப்பாக்கிகளுடன் களம் இறங்கி இருப்பதாக, தமிழ் அமைப்புகளிடம் இருந்து, எனக்குச் செய்திகள் வந்தன.  

எனவே, அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என, ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8                                           
13.07.2021

Wednesday, July 7, 2021

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு? வைகோ MP கேள்வி!

பல்வேறு பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தனித்தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய ஒன்றியம் என்பதை மறுத்து, ஆர்எஸ்எஸ் சாதி மதவெறிக் கும்பல் வழிநடத்தும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்த அனைத்து வழிகளிலும் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

அந்த முயற்சிகளுள் ஒன்றுதான், செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் திட்டம் ஆகும். இந்திய மக்கள் தொகைக் கணக்கின்படி, வெறும் 24000 பேர் மட்டுமே பேசுகின்ற அந்த மொழியை, 135 கோடி மக்களின் நாக்குகளில் திணிக்க முயற்சிக்கின்றார்கள். 

அதற்காக, பல மொழிகள் பேசும் இந்திய மக்களின் வரிப்பணத்தைப் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து வருகின்றார்கள்.தமிழ் செம்மொழி என அறிவித்து விட்டு, வெறும் 22 கோடி ரூபாய்தான் வழங்கி இருக்கின்றார்கள். அதே நிலைமைதான், மராட்டியம், பெங்காலி உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கும். 

ஒன்றிய அரசின் கல்வித்துறை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, இந்தியா முழுமையும் நடத்தி வருகின்றது. அங்கே, 1 முதல் 6 வரையில், மாநில மொழிகளைப் படிக்காலாம்.ஆனால், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையில், விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், அந்த விருப்பப் பாடங்களுள் ஒன்றாகத் தமிழ் இருந்தது. தமிழ்நாட்டில் பயின்ற மாணவர்கள், தமிழைத்தான் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து படித்து வந்தனர். 

ஆனால், இப்போது தமிழ் மொழியை நீக்கி விட்டார்கள். இந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம்தான் விருப்பப் பாடம் என ஆக்கி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், இந்த நடைமுறையை ஓசை இல்லாமல் புகுத்தி விட்டார்கள். 

கொரோனா முடக்கத்தைப் பயன்படுத்தி, வீடுகளில் இணைய வழியில் படிக்கின்ற மாணவர்களுக்கு, சமஸ்கிருதத்தைத்தான் கற்பித்து வருகின்றார்கள்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். 

தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள  முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ் கற்பிக்காத பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு?

கண்டிப்பாக மூன்றாவது மொழி படித்தாக வேண்டும் என்றால் உலகிலேயே ஆகக் கூடுதலான மக்கள் பேசுகின்ற, இந்தியாவுடன் பெரும் வணிகத் தொடர்புளும், பண்டைக் காலம் முதல் பண்பாட்டுத் தொடர்புகளும் கொண்டுள்ள சீன மொழியைக் கற்பிக்கலாம். அல்லது தென்அமெரிக்கக் கண்டம் முழுதும் பேசப்படுகின்ற ஸ்பெனீஸ் மற்றும் பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பானிய மொழிகளைக் கற்பிக்கலாம்.

எனவே, இந்தப் பிரச்சினையில், தமிழக அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மொழி கற்பிக்காத பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
07.07.2021

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி! வைகோ MP அறிக்கை!

பீமாகோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மூச்சு அடங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மலைவாழ் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றி வந்தார். சமூகச் செயல்பாட்டாளராகவும், மனித உரிமைப் போராளியாகவும் திகழ்ந்த ஸ்டேன் சுவாமி, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைக்காக போராடியவர், குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர்.

ஸ்டேன் சுவாமி கிறிஸ்தவப் பாதிரியார் என்பதால், பழங்குடியினரை மதமாற்றம் செய்கிறார் என அவர் மீது வன்மம் கொண்டு இந்துத்துவ சனாதன சக்திகள் புழுதிவாரித் தூற்றின.

ஊபா சட்டத்தை ஏவி கடந்த ஆண்டு 2020 அக்டோபர் 8ஆம் தேதி ஸ்டேன் சுவாமியை பீமாகோரேகான் பொய் வழக்கில் சேர்த்து என்.ஐ.ஏ. கைது செய்தது. நடுக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயது நிறைந்த முதியவரை கைது செய்து, மும்பை தலோஜா சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார்கள்.

நடுக்கவாத நோயால் பீடிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி கை நடுக்கத்தால் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை என்று கூறி தன்னிடமிருந்து கைப்பற்றிய உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையை வழங்க என்.ஐ.ஏ.வுக்கு உத்திரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் என்.ஐ.ஏ., ஸ்டேன் சுவாமியிடமிருந்து உறிஞ்சு குழல் மற்றும் உறிஞ்சு குவளை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று ஈவு இரக்கமின்றி நீதிமன்றத்தில் கூறியது. சிறை நிர்வாகத்தின் சித்ரவதையால் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமிக்கு பிணை வழங்கவும், சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கொடிய கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு பிணை வழங்க என்.ஐ.ஏ. எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க. அரசின் கொடுமையான அடக்குமுறை ஸ்டேன் சுவாமி உயிரையே பறித்துவிட்டது. இந்தக் கொடூர மரணத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஸ்டேன் சுவாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.07.2021

Sunday, July 4, 2021

பூண்டி அய்யாறு வாண்டையார் மறைவு! வைகோ MP இரங்கல்!

தஞ்சைத் தரணியில் புகழ்பெற்ற பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இன்னொரு தூண் சாய்ந்தது. கடந்த மே மாதம் பூண்டி திருபுட்பம் கல்லூரியின் செயலாளர் - தாளாளர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் அவர்கள் மறைந்தார்கள். அந்த சோகம் மறைவதற்குள் அவரது இளைய சகோதரர் அய்யாறு வாண்டையார் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்.

பூண்டி குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த மறைவுச் செய்திகள் வேதனையையும் ஆற்றொணா துயரத்தையும் தருகிறது. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சர் பொறுப்பிலும் அரசியல் பணியாற்றிய அய்யாறு வாண்டையார் அவர்கள் பல பொதுநல அமைப்புகளில் முன்னின்று மக்களுக்குத் தொண்டு புரிந்தார். 2014 இல் தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி அவரைச் சிறப்பித்தது.

ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு கல்வி புகட்டிய பூண்டி வாண்டையார் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு ஈடு செய்ய இயலாதது ஆகும்.

திரு அய்யாறு வாண்டையார் அவர்கள் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசிக்கும் மக்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.07.2021

Saturday, July 3, 2021

காவிரி போலவே தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டின் உரிமை பறிப்பு! வைகோ கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்கம், நந்தி மலையில் ஊற்றெடுக்கும் நீர், ஒசகோட்டம், ஒரத்தூர் வழியாக தட்சிணப் பிணாசினி ஓடை, கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு, தென்பெண்ணை ஆறாகத் தமிழ்நாட்டுக்கு உள்ளே 320 கிலோமீட்டர் ஓடுகின்றது. 

கொடியாளம் தடுப்பு அணையைத் தாண்டி, ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு வந்து சேருகின்றது.

பின்னர் விழுப்புரம் மாவட்டம் வழியாகச் சென்று கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது. இதற்கு இடையில், சுமார் இரண்டாயிரம் ஏரிகளை நிரப்பி, தமிழ்நாட்டில் 4 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகின்றது. 

தென்பெண்ணை ஆற்றில் தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டுமொத்தத் தண்ணீரையும் தடுப்பதற்காக, கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப் பெரிய நீரேற்று நிலையம் அமைத்து, அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்குத் திருப்பி, அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத் திருப்பதி ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு செல்ல 2014 இல் திட்டம் வகுத்தது.

இதற்கு முன்பே 2010 இல் தென்பெண்ணை ஆற்றின் கிளையான மார்கண்டேய நதியின் குறுக்கே, தமிழ்நாடு எல்லை ஓரத்தில் 50 மீட்டர் உயரத்திற்குத் தடுப்பு அணை கட்டும் திட்டத்தையும் தொடங்கியது.

1892 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் திட்டங்கள் மற்றும் பாசனத் திட்டங்களுக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால், கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் இறங்கியபோது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் சரண் அமர்வு விசாரணை நடத்தியது.

விசாரணை முடிந்து, 2019 நவம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், “1956 ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்படி, தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு மற்றும் நதிநீர் சிக்கல் குறித்து மத்திய அரசிடம் தீர்ப்பாயம் அமைக்குமாறு தமிழக அரசு கோராதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியது.

“தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்குத் தடை விதிக்குமாறு கோரும் தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை” என்று கூறி தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசு யார்கோல் எனும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் துணை நதி மார்க்கண்டேய நதியின் குறுக்கே ஒன்றிய அரசின் நீர்வளம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அனுமதியைப் பெற்று, ரூ.87.18 கோடி செலவில் அணை கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டது.

தற்போது கர்நாடக அரசு, பங்காருபேட்டையைச் சுற்றியுள்ள 45 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக 40 மீட்டர் உயரம், 414 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு அணையைக் கட்டி முடித்து விட்டதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணையால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்கு நீர்ப் பாசனமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி விட்டது.

அ.இ.அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால் தென்பெண்ணை ஆற்றிலும் காவிரியைப் போல உரிமையை தமிழ்நாடு பறிகொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் அமைக்க தமிழ்நாடு அரசு கேட்காதது ஏன் என்றும் கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு காலம் கடந்து அரசுக்குக் கடிதம் எழுதி, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலுக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்குமாறு கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு, 2020 ஜனவரி 20 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறையின் தலைவர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து, பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தது. 

இக்குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா. ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர்கள், மத்திய வேளாண் துறையின் இணைச் செயலாளர், மத்திய சுற்றுச் சூழல் துறையின் இணைச் செயலாளர், நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆ~ப் ஹைட்ராலஜியின் இயக்குநர், மத்திய நீர்ப்பாசன மேலாண்மை அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

ஒன்றிய அரசு அமைத்த இக்குழு, 2020 பிப்ரவரி 24 மற்றும் ஜூலை 7 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, 2020 ஜூலை 31 ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு தனது அறிக்கையை அளித்தது.

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால், ஒரு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவெடுக்கலாம் என்று பேச்சுவார்த்தைக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் ஓராண்டு காலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதில் முடிவெடுக்காமல் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்திருப்பது கண்டனத்திற்கு உரியது.

காவிரி உரிமையை தட்டிப் பறித்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்த ஒன்றிய அரசு, தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கின்றது.

தென்பெண்ணை ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி 7.2.2018, 15.11.2019 ஆகிய இரு தேதிகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால் அ.இ.அ.தி.மு.க. அரசு செயலற்றுக் கிடந்தது.

தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்பட்டு, மார்க்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீர் செல்ல விடாமல் தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.07.2021

Thursday, July 1, 2021

மருத்துவர்களுக்கு வைகோ வாழ்த்து!

இன்று உலக மருத்துவர் நாள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக 24 மணி நேரமும் உழைத்து, கொரோனா பெருந்தொற்றை  எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகின்றார்கள்.

அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினார்கள்.

அந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மருத்துவரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
01.07.2021