Monday, July 26, 2021

இளங்குமரனார் புகழ், என்றென்றும் வாழ்க. வைகோ MP!

ஆயிரம் பிறை கண்ட அண்ணல் இளங்குமரனார், உடலால் தளர்வுற்ற போதிலும், உள்ளத்தால் தளராமல், இளங்குமரனாகவே வாழ்ந்து வந்தார். அவர் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.

கலிங்கப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். நீண்ட காலம் திருச்சியில் வாழ்ந்து, தமிழ்ப்பணி ஆற்றி, கடைசி ஐந்து ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்து மறைந்து இருக்கின்றார். அவருடன் பல மேடைகளில் பங்கேற்று இருக்கின்றேன்; அவரது குடும்பத்தாருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றேன்.

தமிழ் என்று தோள் தட்டி ஆடு
நல்ல தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு

என்று, தமிழின் நுண்மையையும், தொன்மையையும் கண்ட பூரிப்பில், தமிழுக்காக அரும்பாடுபட்டதோடு, ஆனந்தக் கூத்து ஆடி, அகம் மகிழ்ந்தவர். தமிழ் இலக்கண, இலக்கியங்கள் அனைத்தையும் ஒருசேர அச்சிட்டு, தமிழ் மறை என்றே பெயர் சூட்டி, அவற்றை மொத்தமாக வெளியிட்டார். ஏறத்தாழ, 17000 ரூபாய் மதிப்பிலான நூல்களை, 8000 ரூபாய் என்று விலையிட்டு, அவற்றை நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கி மகிழ்ந்தார்.

தமிழுக்காகவே தன்னை வாழ்வித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகிய பெருமக்களுடன் தம்மை வாழ்வித்துக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார். இரண்டறக் கலந்தவராய், இந்தப் பெருமக்களின் வழியில், தம் வாழ்நாளைச் செலவிட்டார்; 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அத்தனைத் தமிழ் நூல்களையும் தொகுத்து, பிழை திருத்தி, எள் அளவும் குறை இன்றி வெளியிடுவது என்பது, எளிய பணி அல்ல. அந்தப் பணியை முழுமையாகச் செய்து முடித்த மகிழ்வில், தமிழுக்காகவே வாழ்ந்த நிறைவோடு இன்று இயற்கை எய்தி உள்ளார். இளங்குமரனார் பணிக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். அன்னாரை, எவ்வளவு போற்றினாலும் தகும்.

ஆண்ட தமிழுக்கு அழிவு உண்டோ? மீண்டும் தமிழின் பொற்கால ஆட்சியைக் கொண்டு வருவோம் எனச் சூளுரைத்து, அதற்காகத் தம் வாழ்நாள் முழுமையும் அலைந்து திரிந்து, நூல்களைத் தேடிப் பிடித்து அச்சிட்டுத் தமிழுக்கு ஆக்கம் செய்த இளங்குமரனாரின் புகழ் நீண்டு வாழும்; தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்றாலும், ஈடுபாட்டாலும் நிறை வாழ்வு வாழ்ந்த அப்பெருமகனாரின் புகழ், என்றென்றும் வாழ்க என்று வாழ்த்துவோம்!

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.07.2021

No comments:

Post a Comment