ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பாரா?
1. நாடு முழுமையும் நதிகளை இணைப்பதற்கு, அரசு ஏதேனும் திட்டம் வகுத்து இருக்கின்றதா?
2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தேவை; புதிய திட்டமாக இருந்தால், இதற்கு முன்பு செயல்படுத்திய திட்டங்களில் இருந்து, எந்த அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் தேவை.
3. காவிரி - குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து, தமிழ்நாடு அரசிடம் இருந்து, ஏதேனும் திட்ட வரைவு வந்துள்ளதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தருக;
4. தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டங்கள்; குறிப்பாக, கோதாவரி-கிருஷ்ணா-காவிரி இணைப்பு; மற்றும், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை குறித்த விவரங்கள் தருக.
*இதுகுறித்து, 26.07.2021 அன்று, நாடாளுமன்றத்தில், நீர்வளத்துறை அமைச்சர் அளித்த அறிக்கை:*
*கேள்வி எண் 1,2 ஆகியவற்றிற்கு விளக்கம்:*
1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒன்றிய நீர்ப்பாசனத்துறை, நீர்வளம் மிகுதியான ஆற்றுப்படுகைகளில் இருந்து நீர்வளம் குறைவான ஆறுகளுக்கு நீரைப் பகிர்வதன் மூலம் நீர் வளங்களை மேம்படுத்துவது குறித்து, தேசிய முன்னோக்குத் திட்டம் (National Perspective plan-NPP) ஒன்றை வரைந்தது. அந்தத் திட்டத்தின் கீழ், தேசிய நீர்வள முகமை (National Water Develooment Agency NWDA), 30 இணைப்புத் திட்டங்களை அடையாளங் கண்டது.
அவற்றுள் 16 திட்டங்கள் தென்னிந்தியாவிலும், 14 திட்டங்கள் இமயமலைஆறுகளின் பாசனப் பகுதிகளிலும் செயல்படுத்துவற்கான ஆய்வு அறிக்கை வரையப்பட்டது. அதுகுறித்த விவரங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளன.
*கேள்வி 3 க்கு விளக்கம்:*
வெள்ளப் பெருக்கின்போது காவிரி நீரை, தெற்கு வெள்ளாறு வரை கொண்டு போவதற்கான திட்டத்திற்கு, கொள்கை அளவில் ஏற்பு அளிப்பதுடன், நிதி உதவியும் கோரி, தமிழ்நாட்டு அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
தேசிய முன்னோக்குத் திட்டத்தின்படி, காவிரி (கட்டளை)-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது, மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணைஆறு-காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.
இந்தத் திட்டம் குறித்து, தேசிய நீர்வள முகமையின் விரிவான அறிக்கை, இந்தத் திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்கு, 2020 ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 4.48 இலட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், 2050 ஆம் ஆண்டு வாக்கில், கூடுதலாக 28 இலட்சம் மக்களுக்கு, மாதந்தோறும் 79 எம்சிஎம் நீர் வழங்கிட வகை செய்யும்; தொழிற்சாலைகளின் கூடுதல் தேவைக்காக, 139 எம்சிஎம் நீர் கிடைக்கும்.
*கேள்வி 4 க்கு விளக்கம்:*
தென்னிந்திய நதிகள் இணைப்பிற்கான 16 திட்டங்களுள் 12 திட்டங்கள், தெற்குப் பகுதிக்கானவை:
1. மகாநதி (மணிபத்ரா) - கோதாவரி (தௌலேஸ்வரம்) இணைப்பு
2. கோதாவரி (போலாவரம்) - கிருஷ்ணா (விஜயவாடா) ஆந்திர அரசு செயல்படுத்தி விட்டது.
3. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (புலிசிந்தலா) இணைப்பு
4. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) இணைப்பு
5. கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) - பெண்ணை ஆறு (சோமசீலா) இணைப்பு
6. கிருஷ்ணா ( ஸ்ரீ சைலம்) - பெண்ணை ஆறு இணைப்பு
7. கிருஷ்ணா (அலமாட்டி) - பெண்ணை ஆறு இணைப்பு
8. பெண்ணை ஆறு (சோமசீலா) - காவிரி (கல்லணை) இணைப்பு
9. காவிரி (கட்டளை) - வைகை - குண்டாறு இணைப்பு
10. பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு
11. நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பு
12. பெட்டி - வர்தா இணைப்பு
மேற்கண்ட திட்டங்களுள், ஒன்று முதல் பத்து வரையிலான திட்டங்களுக்கு, முதல்கட்ட ஆய்வுஅறிக்கை நிறைவு பெற்று, தொடர்புடைய மாநிலங்களுக்குத் தரப்பட்டு இருக்கின்றது.
மணிபத்ரா- ஈஞ்சம்பள்ளி அணைகள் இணைப்பில், பெரும்பகுதி நிலம் நீருக்குள் மூழ்குவதால், எஞ்சிய நீரை, கோதாவரியின் துணை ஆறான இந்திராவதி படுகைக்குத் திருப்பி விடுவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை; மாற்றுத் திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னோக்கு அறிக்கை, தொடர்புடைய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட உள்ள ஆறுகளின் பட்டியல், இணைப்பில் தரப்பட்டு உள்ளது.
நதிகள் இணைப்பிற்கான சிறப்புக்குழு ( The special Committee for Interlinking Rivers -ILR), தொடர்புடைய மாநிலங்களின் கருத்துகளை ஆராய்ந்தபிறகு, அனைவருக்கும் இணக்கமான முறையில், திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்.
நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு படிக்கட்டுகள் உள்ளன. இணக்கத் தீர்வை ஏற்படுத்துவதற்கான கருத்துப் பரிமாற்றங்கள், திட்ட முன் வரைவுகள், தொடர்புடைய முகமைகளிடம் இருந்து இசைவு பெறுதல், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சகத்தின் ஏற்பு, பருவநிலை மாற்றங்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பு வழங்குதல், நீர்ப்பாசனம் தொடர்பான அறிஞர்களின் கருத்துகளைப் பெறுதல், வெள்ளத் தடுப்பு குறித்த நடவடிக்கைகள், நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல், அத்துடன் திட்டத்தைச் செயல்படுத்துவற்கான நிதிமுதல் பெறுவதற்கான ஏற்பாடுகள், இதுபோன்ற அனைத்துப் பணிகளும் நிறைவு பெற வேண்டும்.
எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கு இடையிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே, செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.07.2021
No comments:
Post a Comment