Saturday, July 24, 2021

கணேசமூர்த்தி எம்.பி., கோரிக்கை; ரயில்வே அமைச்சர் ஏற்பு!

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன், இன்று பகல் 12.30 மணி அளவில், புது தில்லி, ரயில்வேஅமைச்சகக் கட்டடமான ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்தார். அப்போது, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து, கீழ்காணும் கோரிக்கை விண்ணப்பத்தினை அளித்தார்.

தமிழ்நாட்டில், மாநில நெடுஞ்சாலை எண் 83 ஏ, ஈரோடு-தாராபுரம் சாலையுடன், கரூர் சாலையும் இணைந்து, ஈரோடு நகருக்குள் நுழையும் இடத்தில், 1932 ஆம் ஆண்டு கட்டப்பட்ட  ரயில்வே சுரங்கப்பாதை எண் 352, உயரம் குறைவாக இருக்கின்றது. அந்தக் காலத்தின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்றவாறு, 3.5 மீட்டர் உயரமும் 6 மீட்டர் அகலமும் கொண்டதாகக் கட்டப்பட்டது.

ஆனால், தற்போது இலட்சக்கணக்கான மக்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர். கனரக ஊர்திகளின் போக்குவரத்து பெருகி விட்டது. ஆனால், உயரம் குறைவாக இருப்பதால், கனரக ஊர்திகள், இந்த வழியாகச் செல்ல முடியவில்லை; திரும்பிச் செல்ல நேரிடுகின்றது; அதனால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது.

எனவே, இந்தப் பாலத்தை உடனடியாகப் புதுப்பித்துக் கட்ட வேண்டிய நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் ஆகியோருடன், மாநில நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் இணைந்து செயல்பட்டு, இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, மேற்கண்ட ரயில்வே அதிகாரிகள் தகுந்த ஒத்துழைப்பு நல்கிடவும், தொடரித்துறையின் சார்பில் உரிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கிடவும் தாங்கள் ஆவன செய்து தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு கணேசமூர்த்தி கேட்டுக்கொண்டார்.

இந்தக் கோரிக்கை ரயில்வே அமைச்சர் உடனே ஏற்றுக்கொண்டு, மேற்கண்ட ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய ஆணைகளைப் பிறப்பித்தார். எனவே, விரைவில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.07.2021

No comments:

Post a Comment