ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா?
1. தமிழ்நாட்டு உழவர்களின் வேளாண்மைக்குத் தண்ணீர் வருவதைத் தடுக்கின்ற வகையில், கர்நாடக அரசு மார்கண்டேயா ஆற்றில் அணை கட்டியது குறித்து, தமிழ்நாட்டு அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றதா?
2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;
3. தமிழ்நாடு எழுப்பி இருக்கின்ற கோரிக்கைகளை ஆய்வு செய்ய, ஒரு தீர்ப்புஆயம் அமைக்கப்படுமா?
4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;
5. இல்லை என்றால், ஏன்? அதற்கான காரணங்களைத் தருக.
அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் விளக்கம்
1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.
1956 ஆம் ஆண்டு, மாநிலங்களுக்கு இடையிலான ஆற்று நீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 3 இன் கீழ் , 2019 நவம்பர் 30 ஆம் நாள், தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டுகள் அடங்கிய கோரிக்கை விண்ணப்பத்தை அனுப்பி இருக்கின்றது. அதே சட்டத்தின் 4 ஆவது பிரிவின் கீழ், பெண்ணையாறு அல்லது தென் பெண்ணை என அழைக்கப்படுகின்ற ஆற்று நீர்ப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து வைப்பதற்கு, தீர்ப்பு ஆயம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளுள் ஒன்றான மார்கண்டேயா ஆற்றில், 500 MCFT நீர் தேக்கி வைப்பதற்காக, தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் யார்கோல் என்ற கிராமத்தில், கர்நாடக அரசின் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியம் ஒரு அணை கட்டுவதற்கு, அதே கோரிக்கை விண்ணப்பத்தில், தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றது.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஒன்றிய நீர்வள ஆணையத்தில் (Central Water Commission) தலைவர் தலைமையில், ஒரு பேச்சுவார்த்தைக் குழு, 20.1.2020 அன்று, ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ் அமைக்கப்பட்டது. இரண்டு கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், மேற்கொண்டு பேசுவதில் பயன் இல்லை என்று அந்தக் குழு கூறியதால், அடுத்து கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர், 16.03.2021, 08.07.2021 ஆகிய நாள்களில், மேற்கொண்டு தகவல்கள் கேட்டு, தமிழ்நாடு கர்நாடக அரசுகளுக்குக் கடிதம் எழுதி உள்ளார். அந்தத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.07.2021
No comments:
Post a Comment