Friday, July 30, 2021

இராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிகாற்றுத் திட்டம்; வைகோ MP கேள்விகள்; அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 1078
28 ஜூலை 2021

மாண்புமிகு எண்ணெய், இயற்கை எரிகாற்றுத் துறை அமைச்சர், கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பாரா?

1. இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை, அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த, இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டம் குறித்த விவரங்கள்;

2. அந்தத் திட்டச் செலவுத் தொகை எவ்வளவு? 2021-22 ஆம் நிதி ஆண்டில், அதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கின்றீர்கள்?

3. இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் துறையில் ஏற்பு பெறப்பட்டதா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இந்தத் திட்டத்தால் பயன் பெறும் பகுதிகள் யாவை? அடுத்த மூன்று ஆண்டுகளில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும்?

எண்ணெய், இயற்கை எரிகாற்றுத் துறை இணை அமைச்சர் இராமேஸ்வர் தாலி விளக்கம்:

1,2 ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின், எண்ணுhர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டத்தின் (ETBNMTL) ஒரு பகுதியான, இராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே, 142 கிலோ மீட்டர் நீளம், 4 MMSCMD திறன் கொண்ட, இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டத்தை, 17.02.2021 அன்று, மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இராமநாதபுரம்-தூத்துக்குடி இடையேயான எரிகாற்றுக் குழாய் திட்டத்திற்கான மொத்தச் செலவு மதிப்பு 700 கோடி ரூபாய் ஆகும். 2021-22 ஆம் நிதி ஆண்டிற்கு, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

3,4 கேள்விகளுக்கு விளக்கம்:

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம், சுற்றுச்சூழல் ஏற்பு பெறுவதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறை அமைச்சிடம் (Ministry of Environment, Forest and Climate Change - MoEF) திட்ட வரைவு வழங்கி இருக்கின்றார்கள். அதற்கான சட்டப்பிரிவுகளை, அமைச்சகம் ஆய்வு செய்தது; இந்தத் திட்டத்திற்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை எனத் தீர்மானித்தது.

கேள்வி 5 க்கு விளக்கம்: இராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிகாற்றுத் திட்டத்தால், அந்த இரு மாவட்டங்களும் பயன்பெறும்; 30 பேருக்கு நேரடியாகவும், 75 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தத் திட்டத்தால் பயன்பெறும் தொழிற்கூடங்கள், எரிகாற்று வழங்குதல் பணிகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.07.2021

No comments:

Post a Comment