Monday, August 30, 2021

வைகோவுடன், இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் அவர்கள், இன்று (30.08.2021), சென்னை அண்ணா நகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தார்.

தனது தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான் அவர்களுடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தமைக்காக வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தங்களைப் பற்றி, என் தந்தையார் நிறைய செய்திகளை எனக்குச் சொல்லி இருக்கின்றார் என்றார்.

உங்கள் தாத்தா, பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களுடன் எனக்கு நீண்ட காலப் பழக்கம் உண்டு. எண்பதுகளில் தொடங்கி, பலமுறை சந்தித்து இருக்கின்றேன்; பல நிகழ்வுகளில் அவருடன் ஒன்றாகப் பங்கேற்று இருக்கின்றேன். தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கப் பணி ஆற்றினார். அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கினார்.

அதேபோல, உங்கள் தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான் அவர்கள், சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பது வழக்கம். எதிர்பாராத வகையில், குறைந்த வயதில் அவர் திடீரென இயற்கை எய்தியது அதிர்ச்சியாக இருந்தது.

26 வயதிலேயே நீங்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கின்றீர்கள். என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்; தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும்; உங்களுக்கு நிறையக் கடமைகள் இருக்கின்றன என்று, வைகோ குறிப்பிட்டார்.

ஆமாம் ஐயா, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, நுவரேலியாவில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும். தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். அதற்காக முதல்வரையும் சந்திக்க இருக்கின்றோம் என அமைச்சர் தெரிவித்தார். நீங்கள் இலங்கைக்கு வந்து தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக, தமிழ்நாடு அரசு ரூ 300 கோடி ஒதுக்கி இருப்பதை வைகோ குறிப்பிட்டார். தொடர்ந்து, ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து, இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

வேளாண் பகைச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்; மாநில உரிமைக் கொடியை உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். வைகோ பாராட்டு!

ஒன்றிய பா.ஜ.க. அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளை காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் கடந்த 2020 நவம்பர் 26 முதல் இன்றைய நாள் வரையில் 277 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள்.

இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கொந்தளிப்பை அலட்சிப்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், வேளாண் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களும் இந்தியாவில் வேளாண் தொழிலையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து:க கொடுக்க வழி வகை செய்கிறது.

வேளாண்துறை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் பெரு நிறுவனங்களிடம் போய்விடும் அபாயம் உருவாகி உள்ளது.

வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இச்சட்டங்கள் உறுதிப்படுத்தவில்லை.

வேளாண் விளை பொருள் சந்தை முழுக்க முழுக்க பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்களின் பிடியில் சென்றுவிடும்.

மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் பகைச் சட்டங்களும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது ஆகும்.

இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்டு 28 ஆம் நாள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் பகைச் சட்டங்களை இரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் வெற்றி கிட்டும் வரை போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பக்கம் தி.மு.க. அரசு நிற்கும் என்பதற்கு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் சான்றாக இருக்கிறது.

இதனிடையே அரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தொகுதியான கர்னலில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது அரியாணா காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட கொடூர தாக்குதலால் விவசாயிகள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அடக்குமுறை மூலம் விவசாயிகளை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காணுகிற அரியாணா அரசுக்கும், அலட்சியப்படுத்துதல் மூலம் இத்தகைய அறப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்று நினைக்கின்ற நரேந்திர மோடி அரசுக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.08.2021

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ரூ. 317.42 கோடி அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைகோ பாராட்டு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (27.08.2021 ) காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ 317.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார்.

நாடு இழந்து, வீடு இழந்து, உறவுகளை இழந்து, அனைத்தையும் இழந்து அநாதைகளாய், அகதிகளாய் முகாம்களில் தங்கள் வாழ்நாளை கடத்திக்கொண்டு இருக்கின்ற ஈழத் தமிழ் உறவுகளுக்கு மனிதநேய அடிப்படையில் பல்வேறு உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல், அவர்களது பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொறியியல் படிப்பு பயில்வதற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும் இவ்வாறே கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். முதுநிலை பட்டப் படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில், பாலிடெக்னிக் படிப்பிற்கு 2,500 ரூபாய், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு 3,000 ரூபாய், இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு 5,000 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை பாலிடெக்னிக் படிப்பிற்கு 10,000, இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பிற்கு 12,000 ரூபாய், இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20,000 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி இனி வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பத்துக் கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அங்குள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 சுயஉதவிக் குழுக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயுடன், மேலும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையை மாற்றி, குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1500 ரூபா, இதரப் பெரியவர்களுக்கு 1000 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என இனி உயர்த்தி வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடும்பத்திற்கு 5 சமையல் எரிவாயு உருளைக்கு தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ அரிசி இனி விலை இல்லாமல் வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், தமிழ்நாடு அரசு குடும்பம் ஒன்றுக்கு அதற்காக அளித்த தொகை 1790ஐ, 3473 என உயர்த்தி வழங்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 1296 ரூபாய் மதிப்பில், சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் பாத்திரங்கள் வழங்கப்படும்.

இத்துடன் முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளி பதிவில் உள்ள அகதிகளுக்கும் உதவிகளை வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்கவும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத்துறைச் செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்பட்டு, இலங்கைத் தமிழ் அகதிகளுக்குத் தேவையான உடனடி நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு இலங்கைத் தமிழ் அகதிகளான நம் உறவுகளுக்கு தாய் உள்ளத்தோடு தேவையான பல்வேறு உதவிகளை கடமை உணர்ச்சியோடு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு நிறைவேற்றி உள்ளது.

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால் என்று அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் முன்பு குறிப்பிட்டார். அந்தத் தமிழ் ஈழ உறவுகளின் கண்ணீரைத் துடைக்கும் மனிதநேயப் பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முகாம்களில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள இயலாத நிலையில், அகதிகளில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளும் நாளேடுகளில் அவ்வப்போது வெளிவந்துகொண்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையிலும் கவனம் செலுத்தி, முகாம்களில் தமிழ் ஈழ அகதிகள் நிம்மதியாக வாழ்ந்திடவும், இலங்கை செல்ல விரும்பும் ஒருசிலருக்கு அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.08.2021

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்திடுக. வைகோ வேண்டுகோள்!

மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர்; ஆற்று நீர்,  ஊற்று நீர்ப் பாசனம் இல்லாத வறண்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், உடல் உழைப்பை செலுத்தி, குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். மணப்பாறை முறுக்கும், மாட்டுச் சந்தையும் மாநிலம் முழுமையும் புகழ்பெற்றது. அன்னைத் தமிழ் மொழி காக்க, ஆதிக்க இந்தியை எதிர்த்து, மணப்பாறை ரயில் நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர், 

1928 இல், “திருக்குறள் தீபாலங்காரம்“ என்னும் அரிய உரை நூலைத் தந்த மருங்காபுரி ஜமீன்தாரினி கி.சு.வி.இலட்சுமி அம்மணி வாழ்ந்த ஊர்; தமிழ் செம்மொழி என அறிவிக்கத் தக்க ஆவணங்களைத் திரட்டி, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, உதவியாகத் திகழ்ந்த மணவை மு°தபா அவர்கள் படித்து வளர்ந்த நகரமான மணப்பாறை பகுதியில் வாழ்கின்ற மக்கள், தொகுதியின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து, கல்லூரிப் படிப்பிற்கு, திருச்சிக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று, கடந்த 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா முடக்கத்தின்போது, வீட்டு வாசல்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெண்கள் கோரிக்கை அட்டையைக் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்; மணப்பாறைக்குக் கல்லூரி வேண்டும் என வேண்டுகோள் விடுத்து முகநூல், இன்°டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்.

அவர்களது நியாயமான கோரிக்கைக்கு நானும் ஆதரவு தெரிவித்து, அரசுக் கல்லூரி அமைத்திட வலியுறுத்தி, நாளிதழ்கள் உள்ளிட்ட காட்சி ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அப்போதைய முதல்வர் மணப்பாறைக்கு வந்தபோது, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் கைது ஆனார்கள்.  

மணப்பாறை மக்களின் பல ஆண்டுக் கோரிக்கையை உணர்ந்து, அரசு கல்லூரி அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கின்றது. 

உயர்கல்வித் துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்புகளில், தமிழகத்தில் திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, சேர்க்காடு ஆகிய ஊர்களில் இருபாலர் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என்று அறிவித்ததை வரவேற்று நன்றி  நன்றி தெரிவிக்கின்றேன்.

அந்த மகிழ்ச்சியில் மணப்பாறை மக்களும் பங்கேற்கின்ற வகையில், மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மணப்பாறையில் அரசுக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.08.2021

Friday, August 20, 2021

வீரமணிக்கு சிலை எழுப்புங்கள் என்றார் தந்தை பெரியார்;திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்)நிறுவி இருக்கின்றோம்!தமிழர் தலைவர் வீரமணி சிலை திறப்பு விழாவில் வைகோ MP உரை!

மகிழ்ச்சிக்குரிய இந்த நன்னாளில், 
அறிவாசான் தந்தை பெரியார், 
அன்னை மணியம்மையார், 
தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி ஆகியோரின் வெண்கலச் சிலைகள் திறப்பு விழாவோடு, 

பெற்ற தாய்க்கு ஒரு தனயன் செய்கின்ற பெரும் கடமையாக, தானும் தன் துணைவியார் உஷாவும் கட்டி எழுப்பி இருக்கின்ற இல்லத்துக்கு, 
தன்னுடைய அன்னை தமயந்தி அவர்களுடைய பெயரையும் சூட்டி, 
அனைவரையும் வரவேற்ற, திராவிடர் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர், பாராட்டுக்கு உரிய பணிகளைச் செய்து வருகின்றவர்  என்று எல்லோராலும் போற்றப்படுகின்ற  அன்புச் சகோதரர் இளந்திரையன் அவர்களைப் பாராட்டுகின்றேன். 

தமிழர் தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையைத் திறந்து வைக்க இருக்கின்ற, மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களே,

நாளைய தினம் பிறந்தநாள் காண்கின்ற, சமூகநீதிப் போராளி, தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகின்ற, என்னுடைய ஆருயிர்ச் சகோதரர், நாடாளுமன்ற உறுப்பினர், 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர், எழுச்சித் தமிழர் 
தொல். திருமாவளவன் அவர்களே,

இந்த அழைப்பு இதழில் இடம்பெற்று இருக்கின்ற, 
மானமிகு கருஞ்சடைப்படை வீரர்களே,

இந்த நிகழ்ச்சியிலே நேரடியாகக் கலந்துகொண்டும், காணொளி வாயிலாகக் கண்டுகொண்டும் இருக்கின்ற கருஞ்சட்டை உறவுகளே, தமிழ்ப் பெருமக்களே,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை, 
நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, 
எனக்குக் கிடைத்து இருக்கின்றது. 

திராவிட இயக்கப் போர்வாள் என்று எனக்குப் பட்டம் சூட்டியவரே மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள்தான். அவருக்கு வயது 88.

10 வயதில் மேடையேறி, 78 ஆண்டுகள் தொடர்ந்து மேடைகளிலே முழங்கிய ஒரு தலைவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே கிடையாது என்கின்ற அந்தப் பெருமைக்கு உரிய அண்ணன் வீரமணி அவர்களுடைய 88 ஆவது வயதில், 
அவர் போற்றிய தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு  88 ஆவது வயதில் சிலை திறந்து வைக்கப்பட்டது போலவே, 
தமிழ்நாட்டில் முதன்முதலாக, 
அண்ணன் வீரமணி அவர்களின் சிலையையும்  திறந்து வைக்கின்ற வாய்ப்பை, இந்த எளியவனுக்கு வழங்கிய திராவிடர் கழகத்துக்கு, திராவிடர் கழகத்தின் இளைஞர்அணி பாசறைக்கு, 
நான் என்னுடைய இதயமெல்லாம் நிரம்பி இருக்கின்ற, ததும்பி வழியக்கூடிய நன்றி உணர்வைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் நாள், திண்டுக்கல்லில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சிலையை, 
குன்றக்குடி அடிகளார் தலைமையில், 
அண்ணன்  முத்தமிழ் அறிஞர் டாக்டர்  கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் பேசுகின்ற பொழுது, தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்:  

“பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வருகின்ற எனக்கு சிலை எழுப்பி இருக்கின்றீர்கள். 
அதே பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பி வருகின்ற வீரமணிக்கும்  சிலை எழுப்புங்கள்” என்று, 
அன்றைக்கு திண்டுக்கல்லில் சொன்னார்,  
மற்ற மாநாடுகளில் சொன்னார்.  
அது இன்று நிறைவேறி இருக்கின்றது.

2021 ஆக°ட் 16 ஆம் நாள், திருமுதுகுன்றத்தில் இந்தச் சிலையைத் திறக்கின்ற வாய்ப்பை நான் பெற்று இருக்கின்றேன்.

எளிய குடும்பத்திலே பிறந்தார்  அண்னன் வீரமணி. அவரது பெயரைச் சொல்லும்போது, 
நமக்கு நினைவு வருவதெல்லாம்,

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்
தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என் என் பதியே கூறியதைப் போலவே,

பழந்தமிழ் மன்னர்களின் மணி மாளிகையின்  முகப்பிலே, துன்பத்திலே தவிப்போர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்காகக் கட்டப்படுவது ஆராய்ச்சி மணி ஆகும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையிலே, 
அர்ச்சகர்களும் உள்ளே சென்று அந்த ஆலயங்களிலே ஆறுகால பூசை நடைபெற ஒலிப்பது ஆலய மணி  ஆகும். விழிகளில் சுடர் விடுவது கண்ணின் மணி ஆகும்.  

ஆனால் மடமையைக் கொளுத்துவோம்;  
பகுத்தறிவைப் பரப்புவோம்; மௌடீகத்தைச் சாய்ப்போம்; சமூக நீதியைக் காப்போம் என்ற அறைகூவலை எழுப்புவது எங்கள் வீரமணி ஆகும்.  

அவருடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பது என்பது, வரலாற்றிலே வாழ்க்கையிலே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று 
நான் கருதுகின்றேன்.

அவர், என்னை நெஞ்சார நேசிக்கின்றார்; 
நான் நெடுநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்;  நான் உடல் நலனோடு இருக்க வேண்டும் என்று கவலைப்படுகின்றார்; 
அவருடைய சிலையை நான் திறந்து வைப்பது என்பது, உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரிய கருவூலமான பொக்கிசம் என்று நான் கருதுகிறேன்.

எளிய குடும்பத்திலே பிறந்து, நாள்தோறும் தொடரிவண்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் படிப்பதற்குச் சென்றார்.  
பி.ஏ. ஹானர்° தேர்வு பெற்றார்.

10 வயது மாணவனாக மேசையைப் போட்டு, அங்கு மாணவச் சிறுவன் வீரமணி  பேசுகின்றார் என்று விளம்பரப்படுத்துவார்கள். 
அந்தக் கணீர் வெண்கலக் குரல் எழும்; 
கூட்டம் திரளும். இப்படியே சிதம்பரம் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல்,  கடலூர் வட்டாரத்தில் மட்டும் அல்ல பல்வேறு இடங்களுக்குச் சென்று 10 வயதிலே கொள்கைப் பரப்புரையைத் தொடங்கி விட்டார்.  

1943 ஆம் ஆண்டு, அவர் கடலூரில் சுயமரியாதை மாநாட்டை நடத்தி, அதிலே பேரறிஞர் அண்ணாவின் கரங்களிலே கொடுக்க வேண்டும் என்பதற்காக நிதி திரட்டி, 112 ரூபாய் அண்ணா அவர்களுடைய திருக்கரங்களில் ஒப்படைத்தார் அண்ணன் வீரமணி அவர்கள். நான் அதையும் எண்ணிப் பார்க்கின்றேன்.

அவர்  பி ஏ ஹானர்° படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு கட்டத்தில் பண நெருக்கடி. தந்தை பெரியாருக்கு  எழுதுகின்றார். பெரியார் அவர்கள், 
84 ரூபாய் தந்தி மணி ஆர்டர் அனுப்பி வைக்கின்றார். அவர் எளிதில் பணம் கொடுக்க மாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். 
காரணத்தோடுதான் கொடுக்க மாட்டார். 
அவர், 84 ரூபாய் அனுப்பி வைத்தார் என்றால், 
அது அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரும் உதவி. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார்.

அண்ணன் வீரமணி அவர்கள் படித்து முடித்து விட்டு வழக்கு உரைஞர் தொழில் புரிந்தார். 
அதில் வெற்றியும் பெற்றார் சிறந்த வழக்கு உரைஞர் எனப் பேரையும் புகழையும் நிலை நாட்டினார். 
அந்த வேளையில், அறிவாசான் பெரியார் அவர்கள், அண்ணன் வீரமணி அவர்களை அழைத்து, 
‘விடுதலை ஏட்டினை நடத்துவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கின்றது; எனவே, அந்தப் பணியை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகிறேன்; 
நீங்கள் வந்து இந்த பத்திரிகையை நடத்துங்கள்’ என்று அழைத்தார்.

அண்ணன் வீரமணி அவர்கள் தயங்கினார். 

‘உங்களுக்கு, 300 ரூபாய் 400 ரூபாய் வருமானம் வந்தது; இப்போது 500 ரூபாய் 1000 ரூபாய் வருமானம் வருகிறது எனவே, நான் ஊதியம் தந்து விடுகிறேன்’ என்று ஐயா சொன்னார். 
நான் ஊதியம் வாங்க மாட்டேன் என்று அண்ணன் வீரமணி அவர்கள் மறுத்தார்கள். 
கொஞ்சம் தொகையாவது வாங்கிக் கொள்ளலாமே? என்றார்.
‘இரண்டும் ஒன்றுதானே அய்யா; எனக்கு எதுவுமே வேண்டாம்; நான் எதையும் எதிர்பார்க்காமல் எதையும் வாங்காமல், விடுதலை ஏட்டினை நடத்த என்னாலான கடமையைச் செய்கிறேன்’ என்று கூறினார்.

இதற்கு பின்னர் ஐயா சொல்கிறார்:

‘வீரமணி அவர்கள் பி ஏ ஹானர்° படித்து இருக்கின்றார்கள்; நல்ல புத்திசாலித்தனமும் கெட்டிக்காரத் தனமும் உடையவர்; 
வழக்கு உரைஞர் தொழிலில் அவருக்கு 300,400, 500 அல்லது 1000 வரை வருமானம் வருகின்றது; 
இவ்வளவு வருமானம் பெரிய அளவிலே வருகின்றபோது, அவரை நான் விடுதலை பத்திரிகையில் பொறுப்பு ஏற்று நடத்த அழைக்கின்ற பொழுது, எதுவுமே வேண்டாம் ஊதியமும் வேண்டாம்;  எனக்கென்று எதுவும் தர வேண்டாம் என்று கூறி, பொதுத்தொண்டு ஆற்றுகின்ற மனப்பான்மை எளிதில் வந்து விடாது.  ஆனால் அப்படிப்பட்டவர் வருவார் வரக்கூடும் வந்துவிட்டார். 
அவர்தான் வீரமணி. அவர்களிடம் விடுதலை பத்திரிகையின் ஏகபோக பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன்’ என்று,

அறிவாசான்  பெரியார் அவர்கள் அறிவித்தார்கள் .

விடுதலை பத்திரிக்கைக்கு 86 வயது என்றால், 
அதில் 58 ஆண்டுகள் ஆசிரியராக அண்னன் வீரமணி அவர்கள் பணியாற்றி இருக்கின்றார் என்று சொன்னால், அது சாதாரணமான காரியம் அல்ல. 

அப்படிப் பட்ட அண்ணன் வீரமணி அவர்கள், தமிழகத்தில் சமூக நீதியைக் காப்பதற்கும், பகுத்தறிவை  வளர்ப்பதற்கும், மடமையை ஒழிப்பதற்கும், தந்தை பெரியார் அவர்களுக்கு அவர் வலதுகரமாக இருந்து செயல்பட்டதால், சிறைச்சாலை சென்றார்; மிசா கொடுமையைக் கண்டார்; தாக்கப்பட்டார்.  மம்சாபுரத்திலே அவரது உயிருக்குக் குறி வைத்துத் தாக்கினார்கள். இப்படிப் பல்வேறு தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டார்.

பொதுவாழ்கையிலே இத்தனைத் தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டதால், 
உடல்நிலை கெடவும் செய்கிறது; 
இருதய நோயும் எற்பட்டது; அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் இன்றைக்கும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றார்; அய்யா வழியில், அய்யாவைப் போலவே, ஊர் ஊராக ஊர்தியிலே சென்று, பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றார் 
எண்ணற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார் என்று சொன்னால் அது தமிழ்நாட்டின் தவப்பயன் என்றுதான் நான் கருதுகின்றேன்.

அண்ணன் வீரமணி அவர்களை, ஒரு நாள் அய்யா பெரியார் அவர்கள் அழைக்கின்றார்கள். 
உங்களுக்கு நான் பெண் பார்த்து இருக்கின்றேன்; திருமணம் செய்து கொள்கின்றீர்களா? என்று கேட்கிறார்.
‘அய்யா சொன்னால் சரி’ என்கிறார்.
‘பெண்ணைப் பார்த்து விட்டு வந்து விடுங்கள்’ என்கிறார் ஐயா.
 ‘வேண்டாம்’ என்கிறார்
‘இல்லையில்லை; போய்ப் பார்த்து விட்டு வந்து விடுங்களேன்.’
அப்போதும்கூட, ‘அய்யா சொன்னால் சரி அவ்வளவுதான்; நான் போய்ப் பார்க்க வேண்டிய தேவை  இல்லை’ என்று கூறி விடுகின்றார்.

‘அந்தப் பெண் யார்? 

அழ. சிதம்பரம் என்பவர் மனைவியை இழந்தவர். 
அவர் இன்னொரு விதவைப் பெண் 8 வயதில் விதவையான ரெங்கம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொள்கின்றார். அந்த சிதம்பரம் ரங்கம்மாள் அவர்களுடைய மகள்தான், அண்ணன் வீரமணி அவர்களுடைய துணைவியார் மோகனா அம்மையார் அவர்கள்.

அவர்கள் வாழ்க்கையைப் பாருங்கள். மேடையில் சொல்வதை வாழ்க்கையில் செய்து காட்டக்கூடிய ஒரு குடும்பமாக அண்ணன் வீரமணி அவர்கள் குடும்பம் இருப்பதை எண்ணி நான் பெருமைப்படுகின்றேன்.

பெரியார் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தளகர்த்தர் கிடைத்தது போல வேறு யாருக்கும் கிடைப்பது மிகமிக அரிது. 
தந்தை பெரியாருக்கு, அவர் வாழ்நாள் முழுதும் போராடுவதற்கு கிடைத்தவர்களிலே மிகப் பெரிய ஆயுதம், எதிரிகள் நெருங்க முடியாத ஆயுதம் அண்ணன் வீரமணி அவர்கள் ஆவார்கள்.

டெல்லி மாநகரத்திலே பெரியார் மையம் கட்டினார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு நசுக்கப்பட்டவர்களின்  பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தந்து, 
அவர்கள் வாழ்வை உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பெரியார் மையம் இடிக்கப்பட்ட வேளையில், நான்  நாடாளுமண்டத்தில் மாநிலங்கள் அவையில் இருந்தேன். 
நண்பகல் வீட்டுக்கு வந்தேன். தொலைபேசி ஒலிக்கின்றது மறுமுனையிலே பதட்டத்தோடு அண்ணன் வீரமணி பேசுகின்றார்; ‘
பெரியார் மையத்தை பொக்லைன்  வைத்து இடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்; 
எப்படியாவது நீங்கள் தடுக்க வேண்டுமே  வைகோ’ என்கிறார்

நான் உணவு அருந்தவில்லை. 
திரும்ப நாடாளுமன்றத்துக்கு ஓடினேன். 
அங்கே நகர்ப்புற வளைச்சித் துறை அமைச்சராக அனந்தகுமார் இருந்தார். 
அவருடைய அறைக்குச் சென்றேன். 
அவரிடம்  சொன்னேன்,
 ‘எங்கள் பெரியார் மையத்தை இடிக்கிறார்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டும்; பெரும் விபரீதத்தை விலைக்கு வாங்குகிறீர்கள் நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்; அங்கே அண்னன் வீரமணி அவர்கள், திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்கள் சென்னையிலே துடித்துக்கொண்டு இருக்கின்றார்; அவரிடம் பேசுங்கள்’ என்று, தொலைபேசியில் அண்ணன் வீரமணியை அழைத்து இதோ அமைச்சர் உங்களிடம் பேசுகிறார் என்று அமைச்சரிடம் தொலைபேசியை கொடுத்தேன். இவர் பேசினார்.

அடுத்து, உள்துறை அமைச்சரிடம் சொல்லலாம் என்று நினைத்தால் அங்கே ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அமைச்சர் எல் கே அத்வானி இடையில் எழுந்து வர முடியாது என்கிறார்கள். 
தில்லி துணைநிலை ஆளுநர் போனை எடுத்து வைத்து விட்டார் தொலைபேசிக்கே வரவில்லை.  
இடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி விட்டார்கள்.

மறுநாள் காலையிலே அங்கே சென்றேன். 
சந்திர ஜித் யாதவ் அங்கு வந்தார். நானும் அந்த இடத்திற்குச் சென்று விட்டேன்.  
சாயங்காலம் அண்ணன் வீரமணி அவர்கள் வந்து விட்டார்கள்.
 என் வாழ்க்கையில் அவர் கண்கலங்கி நான் பார்த்தது இல்லை. அவர் கண் கலங்குகின்றார். கண்ணீர்த் துளிகள் கன்னங்கள் வழியே வழிந்து ஓடுகின்றது.

‘பெரியார் மையத்தை இடித்து விட்டார்களே வைகோ? எப்படியாவது இங்கே மீண்டும் பெரியார் மையத்தை எழுப்பியாக வேண்டுமே’ என்கிறார்.

நான் இன்று உள்துறை அமைச்சரைப் பார்த்தேன். நம்முடைய பதற்றத்தையும் நம்முடைய வேதனையும், கோபத்தையும் கவலையையும் ஆத்திரத்தையும் எடுத்துச் சொன்னேன். 
பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டேன். நாளை முடியாதே என்றார். 
‘இல்லை ஆசிரியர் வீரமணி வருகிறார் நீங்கள் அவசியம் சந்திக்க வேண்டும்’ என்று சொன்னேன். பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒப்புக்கொண்டார் வாருங்கள் போவோம் என்று, 
நானும் அண்ணன் வீரமணி அவர்களும், சமூக நீதிக் காவலர் வி பி சிங்,  அண்ணன் இரா.செழியன் ஆகியோரும், அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை சாயங்காலம் 4 மணிக்கு சந்திக்க சென்றோம். பேசினோம்.

இவர்தான் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி என்றவுடன்,
 ‘அவரை எனக்குத் தெரியும்; மதுரை டெசோ மாநாட்டில் சந்தித்து இருக்கின்றேன்’ என்றார். 

அவர்தான் திராவிடர் கழகத்தின் தலைவர். 
அவர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்; திராவிட இயக்கக் கொள்கைக்காக உறுதியாக இருப்பார்கள் உயிரையும் கொடுப்பார்கள். 
எங்கள் தென்னாட்டிலே, வடநாட்டுத் தலைவர்கள் பெயர் இருக்கின்றன. 
திலகர் பெயர் இருக்கின்றது, நேரு பெயர் இருக்கின்றது, படேல் பெயர் இருக்கின்றது. பூங்காக்களில் அரங்கங்களிலே இருக்கின்றன. 
ஆனால், எங்கள் தலைவர்கள் பெயர், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவிற்கே வழிகாட்டிய வீராதி வீரர்கள் எங்களுடைய மண்ணிலே தோன்றினார்களே, அவர்களுடைய பெயர் தில்லியில் இருக்கின்றதா? வட இந்தியாவில் இருக்கின்றதா? கிடையாது.

நாங்கள் தனி நாடு கேட்டவர்கள்; 
திராவிட நாடு கேட்டவர்கள். அதற்காகப் போராடியவர்கள், சிறை சென்றவர்கள்; இன்றைக்கும் அந்த உறுதியோடு போராடி தனித்துச் செல்ல வேண்டும் என்கிற உறுதி கொண்டவர்கள். தந்தை பெரியாரின் எண்ணத்தைக் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். 
நீங்கள் இதை சரி செய்து கொடுக்காவிட்டால் மீண்டும் எங்களை அந்தப் பாதையில் தள்ளாதீர்கள்; 
அதே பாதையில் தனிநாடு கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தை நோக்கி எங்களைத் தள்ளாதீர்கள்
அண்ணன் வீரமணி அவர்கள் தேர்தலில் நிற்க மாட்டார். ஆனால் இந்தக் கொள்கையை நோக்கிச் செல்வதற்கு நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள்’ என்று சொன்னேன்.

‘பதற்றப்படாதீர்கள் வைகோ, 
என்ன செய்ய வேண்டுமோ செய்வோம்’ என்று கூறி, உடனே தொலைபேசியில் ஆனந்தகுமார் அவர்களை அழைத்தார். 
‘வைகோ வந்திருக்கின்றார்; அவர்களோடு தலைவர்கள் வந்திருக்கிறார்கள் பெரியார் மையம் இடிக்கப்பட்டு விட்டதாம்.  அவர்கள் எந்த இடத்தைக் கேட்கின்றார்களோ, அந்த இடத்தைக் கொடுங்கள்’ என்று தொலைபேசியிலே உத்தரவு போட்டார் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்.

அதன் பிறகு தேடிச்சென்று அப்போலோ மருத்துவமனை அருகில், 
முன்பு இருந்த இடத்தை விட மிக சிறப்பான இடத்தை பெரியார் மையத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அன்றைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது;  
அந்த நாளையும் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.

ஆரிய மாயையா? திராவிட மாயையா? என்ற கேள்வி எழுந்தது. 
திராவிட மாயை என்று சிலர் எழுதினார்கள். 
திராவிட இயக்கத்தினர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் துரோகம் செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வந்தபோது, 
ஆரிய மாயையா? திராவிட மாயையா? ‘விடுதலைப் போர்: இந்திய வரலாறு’ என்ற நூலை எழுதியவர் அண்ணன் வீரமணி அவர்கள். 
ஆங்கிலத்திலும், தமிழிலும் ஏராளமாக எழுதி, அவற்றை நமக்கு வாளும், கேடயமுமாக ஆக்கி வைத்து இருக்கின்றார்.

உலகில் தமிழன் எங்கே தாக்கப்பட்டாலும், 
அதற்காகத் துடிப்பவர். தமிழனின் உயிருக்கு ஆபத்து என்றால், முதல் குரல் கொடுக்கக் கூடியவர் அண்ணன் வீரமணி அவர்கள். 

இலங்கைத் தீவில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேறிய பிறகு, சிங்களவர்கள், ஈழத்தமிழர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். இனக்கொலையை அரங்கேற்றினார்கள். 
தமிழர்களை வெட்டிக் கொன்றார்கள். அந்த வன்முறைகளை எதிர்த்து, ஈழத்துக் காந்தி தந்தை செல்வா அவர்கள் அறவழியில் போராடினார்கள். வட்டக்கோட்டையில் மாநாடு கூட்டினார்கள். 
இனி சிங்களவர்களோடு சக வாழ்வு சாத்தியம் இல்லை. தனி இறையாண்மை கொண்ட தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு; இதை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்.

அந்தக் கொள்கைக்காகப் பிரபாகரன் களம் கண்டார். உலகின் ஏழு வல்லரசு நாடுகளின் ஆயுதங்களை எதிர்த்துப் போராடினார். 
ஆனை இறவுச் சமரில் சிங்களவர்களின் பெரும்படையைத் தோற்கடித்த புலிப்படையை உருவாக்கினார். 
வங்கக் கடலில் கடற்படை அமைத்தார்; வன்னிக் காட்டுக்கு உள்ளே வான்படை அமைத்தார். 
அவருடைய நெஞ்சில் அண்ணன் வீரமணி இருக்கின்றார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, தில்லியின் உத்தரவை ஏற்று, சென்னையில் இருந்த புலிகளின் ஆயுதங்களைப் பறித்தார்கள். 
வீரத்தம்பி பிரபாகரன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். 
எல்லோருக்கும் கவலை சூழ்ந்தது. அப்போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் ஈழத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். பெங்களூருவில் நடைபெற்ற சார்க் மாநாட்டுக்கு நான் வர மாட்டேன் என்று பிரபாகரன் அவர்கள் சொல்லி விட்டார்கள். 
அதன்பிறகு, எம்ஜிஆர் அவர்கள் காவல்துறை அதிகாரியை அழைத்து, ஆயுதங்களைத் திரும்பக் கொடுக்கச் சொல்லிவிட்டார்கள். 
அப்போது, பிரபாகரன் அவர்களின் உண்ணாவிரதத்தை அண்ணன் வீரமணி அவர்கள்தான் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்கள்.

ஆக ஒரு பெரிய வரலாறு அவருக்கு இருக்கின்றது. மடமையைக் கொளுத்துகின்ற வரலாறு, மௌடீகத்தைச் சாய்க்க, சமூக நீதியைக் காக்கப் போராடிய வரலாறு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகப் போராடிய வரலாறு; சமூக நீதியைக் காப்பதற்கு, இந்திய ஒன்றியத்தின் அரசு அமைப்புச் சட்டத்தில்  31 சி என்ற பிரிவை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் திருத்தம் வருவதற்கு முழுமுதற் காரணம் அண்ணன் வீரமணி அவர்கள்தான் என்பதை நான் பதிவு செய்யாவிட்டால், 
கடமை தவறியவன் ஆவேன்.

அத்தகைய பெருமைக்கு உரிய அண்ணன் வீரமணி அவர்களுடைய சிலையை காணொளி வாயிலாகத் திறந்து வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

அவர் 100 ஆண்டுகள் வாழ்வார்; அந்த விழாவிலும் கலந்து கொண்டு பேசுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டும். நல்ல உடல்நலத்துடன் அவர் நமக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.  நாம் இன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் சிலையை அவமதித்து விடலாம் உடைத்து விடலாம் எனச் சிலர்  கருதுகின்றார்கள். 
அப்போது நான் சொன்னேன்: இந்த இடத்தில் நாங்கள் பெரியார் சிலையை உடைக்கப் போகின்றோம் என அறிவித்து விட்டு வா, உன் கை உன்னிடம் இருக்காது என்று பகிரங்கமாக எச்சரித்தேன். 
அதேபோல, இன்றைக்கு நாம் திறந்து இருக்கின்ற அண்ணன் வீரமணி சிலை, ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் ஆட்சி ஏற்பட்டு இருக்கின்றது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நிறைவேற்றுகின்ற அரசு அமைந்து இருக்கின்றது. 
அந்த அரசுக்குப் பக்க பலமாக உரிய ஆலோசனைகளை அண்ணன் வீரமணி அவர்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். 
அவர் வாழ்க; தந்தை பெரியார் புகழ் வாழ்க; 
பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க.

வணக்கம்.     
இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.     
                                                                                  பதிவு 
அருணகிரி 
9444 39 39 03   
19.08.2021

வைகோவுக்கு, தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் நன்றிக் கடிதம்!

தென் ஆப்பிரிக்கக் குடிஅரசின் முன்னாள் தலைவர் ஜேக்கப் ஜூமா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஜூலை 9 ஆம் நாள் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுமையும் வன்முறைகளில் ஈடுபட்டனர். கடைகளைச் சூறையாடினர். தீ வைத்தனர். மூன்று வாரங்கள் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியது.

எனவே, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் தமிழர்களுக்கு, இந்திய அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல்உறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இந்திய அரசு தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதற்காக, தென் ஆப்பிரிக்காவின் குவாஜூலு நேடால் மற்றும் கேடாங் மாகாணத் தமிழர்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் சார்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதங்களில், நெருக்கடியான காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியமைக்கு நன்றி; தற்போது, அமைதி திரும்பி விட்டது. நாங்கள் பாதுகாப்பாக உணர்கின்றோம்; இந்தியாவில் எங்களுக்கு ஆதரவுக் குரல் இருக்கின்றது என்ற நம்பிக்கை, எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
 
‘தாயகம்’                                  
சென்னை - 8                          மறுமலர்ச்சி தி.மு.க.,
18.08.2021

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை” அகற்றிய வரலாற்றுச் சாதனையாளர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்! வைகோ MP பாராட்டு!

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 ஆவது நாளில், அனைத்து சாதியினரும், இந்துமத ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யும் ஆணையை தமிழக மக்களுக்கு சமத்துவப் பரிசாக தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி உள்ளார்!

சென்னை மைலாப்பூரில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு குமரகுருசுவாமிகள், சுகிசிவம், திருமதி தேசமங்கையற்கரசி முதலான இந்துமத சான்றோர்களின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 58 அர்ச்சகர்களுக்கு, பணி நியமன ஆணையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய காட்சி நம்மையெல்லாம் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மிதக்கச் செய்தது!

மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் தமிழ் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சியும், ஓதுவாராக பணி நியமனம் பெற்ற ஓர் சகோதரி “போற்றி, போற்றி” என்று தமிழில் வழிபாடு செய்யும் காட்சியும் நம்மை பெரிதும் பரவசம் கொள்ளச் செய்துவிட்டது.

அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வழங்கும் சமத்துவச் சாதனையை - அமைதிப் புரட்சியை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தி இருக்கிறது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 1970 ஆம் ஆண்டு குடியரசு நாளான சனவரி 26 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெரியாரைச் சந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்ததை ஏற்று, பெரியார் அவர்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதற்காக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டன. மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திராவிடர் கழகமும், தி.மு.கழகமும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து போராடியதன் விளைவாக 16.12.1975 அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனாலும் முட்டுக்கட்டைகள் தடுத்ததால், நடைமுறைக்கு வரவில்லை.

தந்தை பெரியார் மறைந்தபோது, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே! என்ற கவலை பெரியாரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம்” என்று கண்ணீர்மல்க குறிப்பிட்டார் முதல்வர் கலைஞர்!

அந்த முள்ளை அகற்றும் அரும்பெரும் சாதனையைத்தான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

அமைதிப் புரட்சியை - சமத்துவப் புரட்சியை - இரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி, நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்திற்கு பறைசாற்றியுள்ள தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சர், அலுவலர்கள் முதலான அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் கனிந்த - இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்! பாராட்டுகள்!

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.08.2021

Sunday, August 15, 2021

வேளாண் துறையில் புதுமைப் புரட்சி! வைகோ MP பாராட்டு!

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேளாண் வரவு செலவு திட்ட அறிக்கையை வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பதாக அமைச்சர் அறிவித்திருப்பதன் மூலம் ஒன்றிய அரசின் வேளாண் பகைச் சட்டங்களை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒருபோதும் ஏற்காது என பிரகடனம் செயப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 19.31 இலட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி, சாகுபடி பரப்பை உயர்த்தவும், உணவு தானிய உற்பத்தியில் 125 மெட்ரிக் கடன் என்ற இலக்கை அடையவும் திட்டம் தீட்டி உள்ளது வரவேற்கத்தக்கது.

கடும் நிதி நெருக்கடியிலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 4508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டத்தக்கது.

ஐந்து ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடி பரப்பை உயர்த்தும் திட்டம்;

நெல் கொள்முதல் விலையை சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ. 2015 -ம், சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2060 என உயர்த்தி இருப்பதும், கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50, கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 150 வழங்குவதும் விவசாயிகளுக்கு பயன்தரும்.

பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டிப் பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படுவது சிறப்புக்குரியது.

காவிரிப் படுகை வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் வாழ்வு வளம்பெற திருச்சி - நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந் தடமாக அறிவித்திருப்பது திமுக அரசின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கை தருகிறது.

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை நூறு விழுக்காடு மானியத்துடன் 500 பண்ணைக் குட்டைகள் அமைத்தல்; நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை தூர் வாரி ஆழப்படுத்தி நீரோட்டத்தை அதிகரிக்கச் செய்தல், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டம், மானியத்தில் மின் மோட்டார் பம்ப் செட்டுகள் அமைக்க ரூ. 10,000 நிதி உதவி. நுண்ணுயிர் பாசனத்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு நூறு விழுக்காடு மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் செயல்படுத்த 982.48 கோடி நிதி ஒதுக்கீடு; உழவர் சந்தைகளைப் புனரமைத்தல்; ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களைச் சேமிக்கவும், பரிவர்த்தனை மேற்கொள்ளவும் வசதிகளை செய்து தருதல்; நாற்பது வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை போன்ற திட்டங்கள் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை கிண்டியில் ஒரு கோடி மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம்;

முருங்கை ஏற்றுமதி மண்டலம், மதுரையில் முருங்கைக்கு என சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்தல்,

ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல்,

நீலகிரியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்,

சென்னை கொளத்தூரில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப் பொருள்களுக்கான நவீன விற்பனை மையம்,

ஈரோடு மாவட்டம் - பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம்,

கடலூர் மாவட்டத்தில் பலா சிறப்பு மையம், வடலூரில் புதிதாக அரசு தோட்டக் கலைப் பூங்கா, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம் ஆகியவை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைளை நிறைவேற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் கோவையில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இருப்பதும், மண் வளத்தைப் பாதுகாக்க இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 33.03 கோடியில் செயல்படுத்தப்படுவதும்,

இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசளிக்கும் திட்டமும் வரவேற்கத்தக்கவை.

மூலிகைப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு, தோட்டக்கலைப் பயிர்களுக்குச் சிறப்புக் கவனம், பனை வளர்ப்பு மற்றும் பனை தொடர்பான தொழில்களை ஊக்குவிக்க பனை மேம்பாட்டுத் திட்டம், சிறு தானியங்கள், பயிறு வகைகள், பழப் பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணஙகள் தொகுப்பு வழங்குதல் போன்றவை வேளாண் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும்.

வேளாண்மைத் தொழிலின் மேன்மையை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் தொடங்குவது மகிழ்ச்சிக்குரியது.

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல், ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் போன்றவை புதுமையான அறிவிப்புகள்.

உணவு பதப்படுத்துதலுக்குக்காக தனி அமைப்பு, கிருஷ்ணகிரியில் தோட்டக் கலைக் கல்லூரி, கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை போன்றவை வரவேற்கத்தக்கன.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், வேளாண்மைத் துறையில் புதுமைகளைப் புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் ரூ. 34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.08.2021

Saturday, August 14, 2021

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  இன்று 14.08.2021 சனிக்கிழமை காலை, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்ற 16ஆவது சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவை நல்கி வெற்றி பெறச் செய்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றோம்.

திராவிட இயக்கத்தின் ஆணி வேரான நீதிக்கட்சி, சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி தொடங்கிய நூறாவது ஆண்டில், 2021 மே 7 ஆம் நாள் தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பேருவகை கொள்கின்றது.

தீர்மானம் 2: சட்டமன்றத் தேர்தலில் வாகை சூடிய நமது சட்டமன்ற உறுப்பினர்களான வாசுதேவநல்லூர் தொகுதி டாக்டர் தி.சதன்திருமலைக்குமார், மதுரை தெற்கு தொகுதி புதூர் மு.பூமிநாதன், அரியலூர் தொகுதி வழக்கறிஞர் கு.சின்னப்பா, சாத்தூர் தொகுதி டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோருக்கு இக்கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 3: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா துயர் சூழ்ந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முனைந்து மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளும், செயல் திட்டங்களும் மக்களின் உயிர் காப்பதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகின்றது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், அரசு மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகின்றது.

தீர்மானம் 4: திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மே 7, 2021 அன்று முதல்வர் பொறுப்பு ஏற்றவுடனேயே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து முக்கிய ஆணைகளில் முதல் கையொப்பம் இட்டார்.

1) அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா உதவித் தொகையாக ரூ.4000 வழங்குதல். 

2) பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு (16.5.2021 முதல்) 

3) மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம்

4) மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற ‘உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கம்.

5) கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின்மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கும்.

முதல்வர் பொறுப்பு ஏற்ற முதல் நாளிலேயே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்த ஐந்து அரசு ஆணைகளும் நூறு நாட்களில் செயலாக்கம் பெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதற்கு மதிமுக சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவிக்கின்றது.

தீர்மானம் 5: தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.

இக்குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார மதி உரைஞர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக் கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்ட் ஜுன்ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இடம் பெற்றுள்ளனர். 

முதல்வரின் இந்த முயற்சி, அரசியல் வரலாற்றில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதற்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

50 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் கலைஞர் அவர்களால் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 23.04.2020 அன்று, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு என மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதனையும் திருத்தி அமைத்து, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களை, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவராகவும், வேறு சில உறுப்பினர்களையும் நியமித்து இருப்பதையும் இக்கூட்டம் வரவேற்கின்றது.

தீர்மானம் 6: திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஏற்ப, ஆகஸ்டு 9 ஆம் தேதி தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த பத்து ஆண்டுக் காலத்தில், தமிழ்நாட்டின் நிதி நெருக்கடி, கடன்சுமை அதிகரிப்புக்கு அ.இ.அ.தி.மு.க. அரசின் நிதி நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என்பதையும், வருவாய் பற்றாக்குறை, கடன் உயர்வு ஆகியவற்றிற்கு திட்டமிடலில் பலவீனம் என்பதும் வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்பட்டு இருக்கின்றது.

2012-13 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில், இந்திய மாநிலங்களில் 3ஆவது நிலையில் இருந்த தமிழ்நாடு, 2018-19  காலகட்டத்தில் 11 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.

இந்திய அரசின் 14 ஆவது நிதிக்குழு வழிகாட்டுதலின்படி, மாநிலத்திற்கான கடன் உச்ச வரம்பு, ஒட்டுமொத்த பொருள் ஆக்கத்தில் (ளுழுனுஞ) 25 விழுக்காட்டிற்கு கீழேதான் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் விகிதம் 26.69 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் மாநிலத்தின் கடன், 5 இலட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது.

அ.இ.அ.தி.மு.க. அரசின் நிர்வாக திறமை இன்மையால், ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, ஒன்றிய அரசின் தணிக்கை அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரி வருவாயைப் பெருக்கவும், வரிகள் அல்லாத வருமானங்களை உயர்த்தவும் உரிய திட்டமிடுதல் இல்லை. இதனால் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறையால் வருவாய் பற்றாக்குறையின் அளவு உயர்ந்துகொண்டே இருந்ததால் மேலும் மேலும் கடன் பெற்றே அரசு நிர்வாகம் நடைபெற்று இருக்கின்றது.

ஒன்றிய பா.ஜ.க. அரசும், தமிழ்நாட்டிற்குக் கிடைத்து வந்த வரி விகிதத்தை 2.20 விழுக்காட்டில் இருந்து, 1.28 விழுக்காடாகக் குறைத்து விட்டது. தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை 20,033 கோடி ரூபாயை, இதுவரையில் ஒன்றிய அரசு வழங்கவில்லை.

இடைக்கால வரவு செலவு அறிக்கையின்படி, தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 இலட்சம் கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் 2 கோடியே 6 இலட்சத்து 24 ஆயிரத்து 238 குடும்பங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது 2 இலட்சத்து 64 ஆயிரத்து 926 கோடி ரூபாய் கடன் இருக்கின்றது.

தமிழ்நாட்டின் நிதிநிலை அதலபாதாளத்தில் இருப்பதையே வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது.

பத்து ஆண்டுக் காலம் பாழ்பட்டுப்போன தமிழ்நாட்டை உய்விக்கும் வகையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

எனும் குறள்நெறிக் காட்டும் வகையில் செயல்பட்டு சாதனைச் சரித்திரம் படைப்பதற்கு மதிமுக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 7: காவிரி ஆற்று நீர் பங்கீட்டுச் சிக்கலில் பிப்ரவரி 5, 2007 இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், பிப்ரவரி 16, 2018 இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றை அலட்சியம் செய்த கர்நாடக மாநிலம், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டுவதில் முனைப்பாக இருக்கின்றது.

ஏப்ரல் 14, 2021 டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில், மேகேதாட்டுப் பகுதியில் அணை கட்டுமானப் பணிகளுக்கு பொருட்கள் குவிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியானது. இதனையடுத்து, சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்மண்டல அமர்வு, தாமே முன்வந்து கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு தடை விதித்தது. அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்திட ஒரு குழுவையும் அமைத்தது. மேலும் ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல், மேகேதாட்டு தடுப்பு அணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டு இருப்பதை ஏற்க முடியாது என உத்தரவிட்டது.

உடனே கர்நாடக மாநில அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய இத்தீர்ப்பை ரத்து செய்யுமாறு டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையகத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே.கோயல் அவர்கள் தமிழக அரசிடம் விளக்கம் கோராமல், கர்நாடகம் வைத்த கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் ஆணையை ரத்து செய்து ஜூன் 18, 2021 இல் தீர்ப்பு அளித்தது.

இதன் பின்னணியில்தான் கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்த எடியூரப்பா, மேகேதாட்டு அணை கட்ட தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் அனுமதி அளித்து விட்டதாக கூறிக்கொண்டு, அணை கட்டுமானப் பணிகளை தொடங்குவோம் என்று அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்து ஒன்றிய அரசின் அனுமதி பெற வலியுறுத்தினர் எடியூரப்பா.

இந்நிலையில், தமிழக முதல்வர்பொறுப்பு ஏற்றவுடன், ஜூன் 17, 2021 இல் டெல்லி சென்ற திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

பின்னர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 6, 2021 இல் டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, கர்நாடக மாநிலத்தின் அணை கட்டும் முயற்சிக்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 12, 2021 இல் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்துக் கடசிக் கூட்டத்தைக் கூட்டி, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்ட்ட முடிவின்படி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்துக் கட்சிக் குழு ஜூலை 16 ஆம் நாள் டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்து, அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அளித்து, மேகேதாட்டு பகுதியில் அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும்; அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு பெரும் கேடு விளையும் என்பதையும் சுட்டிக் காட்டியது.

இக்குழுவில் கழகப் பொதுச்செயலாளர் திரு வைகோ எம்.பி. அவர்களும் சென்று தமிழ்நாட்டின் எதிர்ப்பை எடுத்து இயம்பினார்.

இதனிடையே, கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதால், பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. அரசின் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவர் ஆகஸ்டு 5 ஆம் நாள், மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்; யார் தடுத்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை;அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று கொக்கரித்து இருக்கின்றார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அரசு அமைப்புச் சட்ட நெறிமுறைகள், நீர்பங்கீட்டுச் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்று அறைகூவல் விடுத்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கர்நாடகத்திற்குத் துணைபோகக் கூடாது என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 8: மக்கள்ஆட்சிக் கோட்பாடுகள், நாடாளுமன்ற மரபுகள், அரசு அமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தையும் தகர்த்து, பாசிசப் பாதையில் பயணிக்கும் பா.ஜ.க. அரசு, தனி மனித உரிமையையும் அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையையும் தட்டிப்பறித்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. (NSO) என்ற நிறுவனத்தின், பெகாசஸ் உளவு மென்பொருளைப் பெற்று , அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், ஊடகங்களிச் செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் உளவு பார்க்கும் மோசமான செயலில் 2017 ஆம் ஆண்டில் இருந்து பா.ஜ.க. அரசு ஈடுபட்டு இருந்த தகவல்கள் பன்னாட்டு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. அலைபேசிகள் ஒட்டுக்கேட்பு, மின்னஞ்சல்களில் ஊடுருவல் போன்றவற்றை பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வந்திருக்கின்றது.

இந்துத்துவக் கருத்தியலை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களை எதிர்ப்போர், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரது மின்னஞ்சல்களில் ஊடுருவி, பெகாசஸ் மென்பொருள் மூலம் கருத்துகளைத் திணித்து, பிரதமர் மோடியை கொல்லத் திட்டமிட்டார்கள் என்று பொய் வழக்குப் புனைந்து சிறையில் தள்ளி கொடுமை புரிந்து வருகின்றது.

பெகாசஸ் உளவு குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் பா.ஜ.க. அரசு, நாடாளுமன்ற கூட்டத் தொடரையே செயல் இழக்கச் செய்து விட்டது. 

உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான உளவு வேலையில் ஈடுபட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சமூக செயல்பாட்டாளர்களான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம்நவ்லகா, வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, கவிஞர் வரவரராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ளே, எல்கார் பரிசத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுதிர்தாவ்லே, சுரேந்தர்  கட்லிங், மகேஷ் ரௌட், சோமா சென், ரொனாவில்சன் உள்ளிட்ட 16 பேர் மீதும் தேசிய விசாரணை முகமை (NIA) தொடர்ந்துள்ள ஊபா சட்டப் பிரிவு வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 84 வயது முதியவரும் சமூக செயல்பாட்டாளருமான மனித உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி பாதிரியார் பீமா காரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக் கொடுமையில் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தீர்மானம் 9: பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து மக்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜூலை 19, 2021 இல் எழுத்துப்பூர்வமாக ஒன்றிய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஸ்வர் தெலி பதில் அளித்தார். அதில், “பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை 88 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொருள் ஆக்க வரி வசூல் ரூ.3.35 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பொருள் ஆக்க வரி வசூல் ரூ. 1.78 இலட்சம் கோடியாகத்தான் இருந்தது” என்று தெரிவித்து இருக்கின்றார்.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் காரணமாகக் கூறி, கடந்த ஆண்டு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை ரூ.19.98 லிருந்து ரூ.32.90 ஆகவும், டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ. 15.83 லிருந்து ரூ.31.80 ஆகவும் பா.ஜ.க. அரசு உயர்த்தியது.

இதனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.103.82 ஆகவும், டீசல் விலை ரூ.96.47 ஆகவும் உயர்ந்துவிட்டது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வந்தாலும் பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு முன்வரவில்லை.

ஜூலை 2 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 77.51 டாலராக இருந்தது. தற்போது 69.32 டாலராக சரிந்துவிட்டது. ஆனாலும் ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 76 முறையும், டீசல் விலை 73 முறையும் உயர்த்தப்பட்டு உள்ளன.

விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக  உயர்த்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்து, விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றது.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான வரி ரூ. 3 குறைத்து இருப்பதற்கு இக்கூட்டம் பாராட்டுத் தெரிவிக்கின்றது.

தீர்மானம் 10: மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் பா.ஜ.க. அரசு கடல்மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன்வரைவை அறிமுகம் செய்து இருக்கின்றது. மீன் பிடித் தொழிலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் இச்சட்ட முன்வரைவு, இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறுக்கின்றது. 

நிலப்பரப்பில் இருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என வகுக்கப்படுகின்றது.

இதில் பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்கக்கூடாது; கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப் படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்; மீன்பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப் பொருந்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, வணிகக் கப்பல் சட்டம் 1958 இன் கீழ் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே மீன்பிடி உரிமங்கள் கொடுக்கப்படும்.

இதன்படி பதிவு செய்ய வேண்டுமானால், கப்பலில் வேலை செய்யும் மாலுமி கட்டுமரத்திலும்கூட இருக்க வேண்டும்; கட்டுமரம், படகு இயக்க ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும்; தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும்.

இவை எதுவும் பாரம்பரிய மீன்பிடிக் கட்டுமரங்களில் இருந்ததும் இல்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. ஆனால் புதிய சட்ட முன்வரைவில் இவை இடம் பெற்று இருக்கின்றன.

12 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழமான நல்ல மீன்கள் நிறைந்துள்ள பகுதியில் அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

உள்ளூர் பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது. 

தடையை மீறிச் செல்லும் மீனவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள். மீன்வளத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கலன்களை ஆய்வு செய்ய இந்த முன்வரைவு அதிகாரம் அளிக்கின்றது.

இச்சட்டத்தை மீறும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கவும், 5 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கவும் விதிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தை பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற கடல்மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன் வரைவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக வலியுறுத்துகின்றது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.08.2021

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு! வைகோ MP இரங்கல்!

சைவமும், தமிழும் இரு கண்கள் என்று போற்றிய மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மகா சன்னிதானம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆராத் துயரமும் கொண்டேன்.

1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின் இளையவராக 27.5.1975 இல் பொறுப்பு ஏற்ற அருணகிரிநாதர் 14.03.1980 அன்று மதுரை ஆதீனமாகப் பொறுப்பு ஏற்றார்.

அருணகிரிநாதர்  அவர்கள், சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் தமிழகத்தில் மட்டும் அல்லாது, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஹாங்காங், ரஷ்யா ஆகிய அயல் நாடுகளிலும் சைவ சித்தாந்தத்தின் சிறப்புகளையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்.

1981 ஆம் ஆண்டில் தென்காசி மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் காரணமாக மதக் கலவரம் வெடித்துக் கிளம்பும் சூழ்நிலையை அறிந்து, அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அனைத்து மக்களையும் சந்தித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் அருணகிரிநாதர். மீனாட்சிபுரத்தில் உள்ள ஆதி திராவிட மக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அந்த விருந்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி  போன்றவர்களும் கலந்துகொண்டது வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நிகழ்வு ஆகும்.

1981, 1982 ஆம் ஆண்டுகளில், குமரி மாவட்டம் - மண்டைக்காடு பகுதியில் இந்து - கிறிஸ்தவர்களிடையே மதக் கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட கலவரமான அந்தக் காலத்தில் நான்கு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து, அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சமாதானம் செய்து வைத்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை ஆதீனத்தின் சார்பில் உணவும், உடையும் மருந்துப் பொருள்களும் வழங்கிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்தான் மதுரை ஆதீனம்.

1983 ஆம் ஆண்டில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வெட்டிக்  கொல்லப்பட்டபோதும், அங்குள்ள சிவாலயங்கள் இடித்து நொறுக்கப்பட்டபோதும் அதனைக் கண்டித்து மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தார். 

என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டு இருந்தார்.அவ்வப்போது அலைபேசியில் அழைத்துப் பேசுவார். எண்பதுகளில் தொடங்கி, அவருடன் பல நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கின்றேன். 

“மொழிப்போராட்டத்திலும், தமிழர் நலன் காக்கும் போராட்டங்களிலும் முனைப்புடன் ஈடுபட்டு வரும் வைகோ அவர்களை விட்டுவிட்டுத் தமிழக வரலாற்றை எழுத முடியாது” என்றும், “என்னுடைய வழிகாட்டியாக இந்தி எதிர்ப்பு காலம் தொட்டு வைகோ விளங்குகிறார்” என்றும் பல மேடைகளில் என்னைப் பாராட்டியும், என் மீது அளவு கடந்த அன்பு செலுத்தியும் வாழ்ந்த மதுரை ஆதீனகர்த்தர் மறைந்தது தமிழ் மக்களுக்கும், சைவப் பற்றாளர்களுக்கும் பேரிழப்பு ஆகும்.

அளவற்ற அவரது அரும்பணிக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் வீர வணக்கத்தையும், புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.08.2021

Friday, August 13, 2021

நிதிநிலை அறிக்கை : பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்! வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம். வைகோ அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து இருக்கின்றார். 10 ஆண்டுக் கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, கடன் சுமை, நிதி நிர்வாக சீர்கேடுகள் அனைத்தையும் சீரமைக்கும் பெரும் பொறுப்பு, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

கடந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள ரூ.58962.68 கோடி வருவாய் பற்றாக்குறைக்கு வழி தேடியாக வேண்டும். நிதிப் பற்றாக்குறை 92529.43 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இத்தகைய நெருக்கடியான நிலைமையில், தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கையில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருப்பது வரவேற்கத் தக்கது. இதனால் அதனால் ஏற்படும் 1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பைத் தாங்கிக் கொள்ள முன்வந்திருக்கும் அரசுக்குப் பாராட்டுகள்.

வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு, 77.88 விழுக்காடு ஒதுக்கீடு செய்து இருப்பதும், மருத்துவம் மற்றும் குடும்ப நலன் துறைக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக ரூ.3070 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதும் வரவேற்கத்தக்கது.

கொரோனா பேரிடர் இன்னும் நீடிக்கும் நிலையில், இத்துறைக்கு 18933.20 கோடி ரூபாயும், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் துறைக்கு 1046.09 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டு இருப்பது தி.மு.க. அரசின் மக்கள் மீதான நலனை உணர்த்துகின்றது.

உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட ரூ.1937.57 கோடி கூடுதல் ஆகும்.

நீர்வளத்துறைக்கு ரூ.6607.17 கோடி ஒதுக்கி, தமிழ்நாடு நீர்வளத் தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் உருவாகவும், ரூ.610 கோடி செலவில் உலக வங்கி உதவியுடன் நீர் நிலைகளைச்  சீரமைத்துப் புதுப்பிக்கவும், மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை போன்ற அணைகளின் நீர்த்தேக்கக் கொள்ளளவை  உயர்த்தவும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், இந்த அரசின் நீர் மேலாண்மை மீதான அக்கறையைக் காட்டுகின்றது.

தமிழ்நாட்டின் தொழிற்புரட்சிக்கு வித்திடும் வகையில் ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், புதிதாக 9 மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளும், 4 இடங்களில் தகவல் தொழிலநுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்பதும் பாராட்டுக்கு உரியது.

திருவள்ளூர் மாவட்டம் மாநல்லுரில் மின் ஊர்திகள் பூங்கா, காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா, தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருட்கள் பூங்கா, மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் உணவுப் பூங்கா, சென்னையில் நந்தம்பாக்கம், காவனூரில் நிதிநுட்ப நகரங்கள் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகின்றன. இதனால் தொழிற்துறை வளர்ச்சி பெறும்; வேலைவாய்ப்புகள் பெருகும்.

சென்னை - குமரி 8 வழிச் சாலையால், தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும்; பயணிகள் போக்குவரத்து மேம்படும்; நேரம் சேமிக்கப்படும்; ஊர்தி மோதல்கள் குறையும்; பாதுகாப்பான பயணமாக அமையும்.   

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது மெய் அல்ல என்பதைத் தெரிவித்து இருக்கும் நிதி அமைச்சர், 2500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையில் கொள்முதல் செய்துதான் சமாளிக்கப்பட்டு வருவதை வெளிப்படையாகக் கூறி இருக்கின்றார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் 17980 மெகாவாட் மின்சாரம் ஆக்கும் திறனைக் கூடுதலாக பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஸ்டாலின் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் வேளாண் இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்கு ரூ.19872.77 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை குடிசைகள் அற்ற மாநிலமாக ஆக்குவதற்குத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதும், 79,395 மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்கவும், 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை காணப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

நகர்ப்புற வளர்ச்சிக்கான பல திட்டங்கள் வரவு - செலவுத் திட்ட அறிக்கையில் வெளிப்பட்டுள்ளன.

பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்துவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. மகளிருக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதம் அளித்து இருப்பதும், அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணத்தை  உறுதி செய்து இருப்பதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் ஆகும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் வரி பங்கீட்டில் பாரபட்சம், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை வழங்காமல் இருப்பது போன்றவற்றை எதிர்கொள்ள, கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், மாநிலத்தின் உரிமைக் கொடியை திமுக அரசு உயர்த்திப் பிடிக்கின்றது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மின்னணு கொள்முதல், அனைத்துத் துறைகளிலும் முழுமையாகக் கணினி மயம் போன்ற அறிவிப்புகள் மூலம், ஊழல் அற்ற நேர்மையான திறன் மிகுந்த அரசு நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்து இருக்கின்றார்.

மொத்தத்தில் பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கின்றது. வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.08.2021

நெய்வேலி பேருந்து நிலையத்திற்குஜம்புலிங்க முதலியார் பெயரைச் சூட்டுக! வைகோ MP வேண்டுகோள்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள திருக்கண்டலேஸ்வரம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார் தி.மா.ஜம்புலிங்க முதலியார். வேளாண்மை தொழிலிலும், ஜவுளி வர்த்தகத்திலும் ஈடுபட்டு பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார். தென்னாற்காடு மாவட்டத்தின் மாவட்டக்குழு தலைவர், கடலூர் நகர மன்றத் தலைவர், நெல்லிக்குப்பம் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று, சீரிய மக்கள் தொண்டு ஆற்றினார். சென்னை பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டார்.

மக்கள் சேவையில் சிறந்தோங்கிய ஜம்புலிங்க முதலியார் அவர்கள் நெய்வேலியில் இருந்த தனது விவசாய நிலத்தில் தண்ணீருக்காக புதிய கிணறு தோண்டும்போது, கறுப்புநிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அப்போதைய பிரிட்டிஷ் அரசின் புவியியல் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். பின்னர் அவரே தனது சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு பூமிக்கடியில் நிலக்கரி படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.

நாடு விடுதலை பெற்றவுடன், அன்றைய முதலமைச்சர் இராஜாஜி அவர்களைச் சந்தித்து நெய்வேலி நிலக்கரி படிமங்கள் புதையுண்டு இருப்பதை எடுத்துக் கூறினார். அதன்பின்னர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்வர் ஆனவுடன் அவரையும் சந்தித்து நிலக்கரி கனிமவளம் நிறைந்து கிடப்பதை விளக்கினார்.

பெருந்தலைவர் காமராஜர் வழிகாட்டுதலுடன் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களையும் சந்தித்து, நிலக்கரி கனிமவளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார். ஆனால் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கூறி நிலக்கரி திட்டத்தைச் செயல்படுத்தத் தயங்கியது.

அப்போது திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் தனக்குச் சொந்தமான 620 ஏக்கர் நிலத்தை முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் தமிழ்நாடு அரசுக்குக் கொடையாக வழங்கினார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 2500 கோடி ரூபாய்க்கு மேலாகும்.

பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதற்கும், நாட்டின் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும் என்.எல்.சி. நிறுவனம் உருவாக அடித்தளமிட்டவர் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்கள்.

இன்று பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மிகச் சிறந்த ‘நவரத்னா’ தகுதி பெற்று வளர்ந்திருக்கிறது.

கொடைவள்ளல் ஜம்புலிங்க முதலியார் அவர்களுக்கு நெய்வேலி நகரியத்தில் சிலை அமைத்து பெருமைப்படுத்தி இருக்கிறது நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம்.

மேலும் அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், நெய்வேலி மந்தாரகுப்பத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.08.2021

Wednesday, August 11, 2021

ராமச்சந்திர ஆதித்தனார் 87 ஆவது பிறந்த நாளில் வைகோ MP மலர் தூவி அஞ்சலி?

மாலைமுரசு நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாலை முரசு அலுவலகத்தில் இன்று 11-08-2021 அன்று அவரது திருவுருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

உடன் மாவட்டச் செயலாளர் சு.ஜீவன்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சைதை சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார், அண்ணாநகர் அழகேசன், ஜிஆர்டி ஞானம், முகவை சங்கர், விக்டர் எபினேசர் ஆகியோர் உடனிருந்தனர்.

கெயில் எரிகாற்று குழாய் திட்டம்: பத்தாண்டு கால போராட்டத்தை தமிழ்நாடு முதல்வர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - வைகோ கோரிக்கை!

கடந்த 2011ம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் கெயில் நிறுவனம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள மதிப்புமிக்க விவசாய நிலங்கள் வழியாக எரிகாற்று குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் திட்டத்தை எதிர்க்கவில்லை. சாலையோரமாக எரிவாயு குழாய்களைப் பதித்து, விவசாய நிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மாபெரும் இயக்கத்தை நடத்தி வந்தார்கள்.
போராடிய விவசாயிகளை ஜெயலலிதா அம்மையார் அவருடைய ஆட்சியில் நியாயமாக மிக கடுமையாக அடக்கி ஒடுக்கினார்.
கடந்த 14.02.2013 அன்று ஈரோடு மாவட்டம் - சென்னிமலை அருகே எரிகாற்று குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் நான் நேரடியாக இறங்கி போராடி திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உறுதுணையாக இருந்தேன்.
அதையடுத்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களுடைய வழிகாட்டுதலில் 17.02.2013 ஈரோடு ஏஇடி பள்ளியில் மிகப் பெரிய கோரிக்கை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கெடுத்துக் கொண்டன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தற்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் என ஆதரவைத் தெரிவித்தார்.
அதன் பின்பு அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவோடு பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு, சேலத்தில் கெயில் நிறுவன திட்ட அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.
நடைபெற்ற தொடர் போராட்டங்களாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்திற்கு சென்றதாலும் சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலாளர் தலைமையில் கருத்து கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் 06.03.2013 முதல் 08.03.2013 வரை சென்னையில் 7 மாவட்ட விவசாயிகளிடம் தலைமைச் செயலாளர் கருத்து கேட்டார்.
25.03.2013 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கெயில் திட்டம் சாலையோரமாக மட்டுமே அமைக்கப்படும், விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகளின் வாழ்வாதாரமே மிக முக்கியம் என அரசின் முடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தரிவித்தார்.
கெயில் நிறுவனம் நீதிமன்றத்திற்குச் சென்று, திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான தீர்ப்புகளை பெற்றது.
ஆனாலும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தவரை நிறுவனத்திற்கு எந்த வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. அவரது மறைவிற்குப் பின்பு அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14.2.2020 அன்று மேற்படி திட்டத்தை செயல்படுத்துவதற்கு கெயில் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, ஏழு மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தார்.
அதன் பின்பு 11.3.2020 அன்று அன்றைய தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திட்டத்தை செயல்படுத்துவதற்கு காவல்துறை, வருவாய்த்துறை ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பரப்புரையிலும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், பரப்புரையிலும் , 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும், பரப்புரைகளிலும் இத்திட்டம் சாலையோரமாக நிறைவேற்ற ஆவன செய்யப்படும் எனத் தெளிவுபட தெரிவிக்கப்பட்டது. அது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியை வைத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியில் கெயில் நிறுவனம் திட்டப் பணிகளை செயல்படுத்த தொடங்கிய போது, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து போராடி தடுத்து நிறுத்தினார்கள்.
தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெற்று, தளபதி மு.க.°டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, எட்டு வழி சாலை திட்டம் ரத்து, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி ரத்து என விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது
இந்நிலையில் 7 மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முந்தைய அரசு கொடுத்த அனுமதி உத்தரவை ரத்து செய்து, கெயில் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும். இன்றுவரை போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.08.2021

Tuesday, August 10, 2021

உயர்நிலைக்குழு - மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம். மதிமுக தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  வருகிற *14.08.2021 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில்* நடைபெறும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.08.2021

Monday, August 9, 2021

தலைமைக் கழக அறிவிப்பு. மதிமுக மதுரை தெற்கு மாவட்டக் கழகப்பொறுப்பாளர் நியமனம்!

மதுரை தெற்கு மாவட்டம் - சேடபட்டி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. கே.பி.ஜெயராமன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மதுரை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக (முகவரி: பி. கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர் (அஞ்சல்) - 625 527, பேரையூர் (வட்டம்), மதுரை மாவட்டம்; அலைபேசி எண். 9047807076) நியமிக்கப்படுகிறார்.

மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள மதுரை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு. கே.பி. ஜெயராமன் அவர்களுடன் மாவட்டக் கழக நிர்வாகிகள் இணைந்து பணியாற்றுவார்கள்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
09.08.2021

Friday, August 6, 2021

கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சிக்கும், கைத்தறித் தொழிலாளர்களின் நலன் காக்கவும், அரசு செய்தது என்ன?

வைகோ கேள்விகளுக்கு, அமைச்சர் விளக்கம்!

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள்,இந்தியாவில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. நாளை இந்திய கைத்தறி நெசவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. நெசவாளர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வைகோ வாழ்த்துகள்.  

கேள்வி எண் 182 (05.08.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, துணிநூல் மற்றும் நெசவுத் துறை (கூநஒவடைநள) அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டங்கள், எந்த அளவில் செயல்படுத்தப்படுகின்றன?

2. அந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதா? கடந்த மூன்று ஆண்டு, புள்ளி விவரங்களைத் தருக;

3. அவ்வாறு குறைந்து இருப்பின், அதற்கான காரணங்கள் என்ன? குறிப்பாகத் தமிழ்நாடு குறித்த விவரங்கள் தேவை;

4. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் யாவை?

துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் விளக்கம்

1 முதல் 4 கேள்விகளுக்கான விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கின்றேன்;

1. தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (National Handloom Development Programme- NHDP) பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்ட கைத்தறிகள் மற்றும் உதிரி உறுப்புகளை வாங்குவதற்கு, தகுதி உள்ள கைத்தறி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகின்றது; வடிவமைப்பில் புதுமைகளைப் புகுத்துவதற்கும், பல்வேறு வகையான தரங்களில் கைத்தறித் துணிகளை ஆக்குவதற்கும், கட்டமைப்பு வளர்ச்சிக்கும், இந்தியாவிற்கு உள்ளேயும், அயல்நாடுகளிலும், கைத்தறித் துணிகளைச் சந்தைப்படுத்துவதற்கும், முத்ரா திட்டத்தின் கீழ் சலுகையுடன் கூடிய நிதி உதவி அளிக்கப்படுகின்றது; தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள், நாடு முழுமைக்கும் பொருந்தும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், (2018-2021) தேசிய கைத்தறி வளர்ச்சி முகமையின் சார்பில், மானிய உதவிகளுக்காகச் செலவிடப்பட்ட 347.65 கோடி உள்பட, 353.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.  வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநில அரசுகள் வகுத்துத் தருகின்ற திட்டங்களின் அடிப்படையில்தான், வளர்ச்சியை எட்ட முடியும்.  வங்கிகளின் உள்கடன் மதிப்பீட்டு அளவுகோலின்படி, முத்ரா திட்டத்தின்  கீழ், கடன் வழங்கப்படுகின்றது. கைத்தறித் துணிகளை விற்பதற்கான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, கடந்த ஓராண்டில் கொரோனா தொற்று ஏற்படுத்திய முடக்கத்தால், அனைத்துத் துறைகளும் பாதிப்பு அடைந்ததுபோல், கைத்தறித் துணிகளுக்கான கச்சாப் பொருட்கள் தட்டுப்பாடு, சந்தை நடவடிக்கைளிலும் கடுமையான முடக்கம் ஏற்பட்டது.

உறுப்பினர் கேட்டுள்ள  காலகட்டத்தில், தமிழ்நாட்டிலும், இதர மாநிலங்கள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளில் கைத்தறி வளர்ச்சிப் பணிகள் குறித்த புள்ளிவிவரங்கள்:

தமிழ்நாட்டில், 21 சந்தை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன; இந்திய அளவில் 324;

தமிழ்நாட்டில், 1438 கைத்தறி நெசவாளர்கள், தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பெற்றுள்ளனர்; இந்திய அளவில் 9924;

தமிழ்நாட்டில், 1955 கைத்தறி நெசவாளர்களுக்கு, தரம் உயர்த்தப்பட்ட புதிய கைத்தறிகள், உதிரி உறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன; இந்திய அளவில் 9924;

கைத்தறி விளக்கு அலகுகள் (Lightning Units) தமிழ்நாட்டில் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை; இந்திய அளவில் 2597;

கைத்தறித் தொழிற்கூடங்களைக் கட்டுவதற்கு, தமிழ்நாட்டில் 118 பேருக்கும், இந்திய அளவில் 1139 பேருக்கும் நிதி உதவிகள்;

தமிழ்நாட்டில் 41,568 பேருக்கும், இந்திய அளவில் 25,193 பேருக்கும், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் உதவிகள்;

ஒட்டுமொத்தத் தொகை: தமிழ்நாட்டுககு 207.23 கோடி; இந்திய அளவில் 159.92 கோடி.

கைத்தறி நெசவுத் துறை, ஒருங்கிணைக்கப்படவில்லை; அது கிராமப்புறங்களில், மரபு வழியாகத் தொடர்ந்து வருகின்றது. கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு பிரச்சினைகள், தடைகளை எதிர்கொள்வதற்கும், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சகம், கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

1. கைத்தறி நெசவுத் துணிகளை, அரசின் பல்வேறு துறைகளுக்குக்கு விற்பதற்கு ஏதுவாக, அரசு மின்சந்தை (Government e-market Place -  GeM) அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுமையும், 1.50 இலட்சம் கைத்தறி நெசவாளர்கள், இணையவழிச் சந்தையில் இணைந்துள்ளனர்.

2. கைத்தறி நெசவை மேம்படுத்துவதற்காகவும், துணிகளைச் சந்தைப்படுத்தி, நல்ல வருமானம் ஈட்டுவதற்காகவும், பல்வேறு மாநிலங்களில் 125 கைத்தறி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

3. முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கான சலுகைக் கடன் (Concessiona Credit), ஒரு நெசவாளருக்கு, 20 விழுக்காடு அல்லது ஆகக்கூடுதலாக ரூ 10000 மானியத்துடன் தரப்படுகின்றது.  7 விழுக்காடு வட்டிச் சலுகையுடன், மூன்று ஆண்டுகளுக்கு, கடன் பொறுப்பு உறுதி உண்டு.

4. தில்லி, மும்பை, வாரணாசி, அகமதாபாத், ஜெய்பூர், புவனேஸ்வர் மற்றும் குவாஹத்தி நெசவாளர் பணி மையங்களில், தேசிய தொழில் நுட்ப வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியுடன் (NIFT),  வடிவமைப்பு வள மையங்கள் (Design Resource Centres) ஏற்படுத்தப்பட்டுள்ளன. கைத்தறி நெசவில், வடிவமைப்பு சார்ந்த புதுமைகள், கைத்தறி நெசவாளர், ஏற்றுமதியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு உதவியாக, மாதிரிகள் மற்றும் தரமேம்பாட்டு வடிவமைப்பு களஞ்சியங்கள் (Design Reositories), ஏற்படுத்தப்பட்டுள்ளன.

5. கைத்தறித் துணிகளை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக, கைத்தறித் துணிகள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம், பல்வேறு பன்னாட்டுக் கண்காட்சிகளை, இணையம் வழியாக ஏற்பாடு செய்து வருகின்றது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 12 கண்காட்சிகள், இணையம் வழியாக நடத்தப்பட்டன.

கச்சாப் பொருள்கள் வாங்குவதற்கும், சாயம் ஏற்றுதல், துணிகளில் அச்சு, விற்பனை வளாகங்கள் அமைத்தல், வடிவமைப்புக் கல்வி, மதிப்புக் கூட்டுதலுக்கும், பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொள்கைத் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளின்படி, ஒன்றிய அரசு, மாநில அரசுகள், கைத்தறி வளர்ச்சி முகமைகளின் உதவியுடன்,  கைத்தறி வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. அந்தத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை, ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் கண்காணித்து வருகின்றன.

இவ்வாறு, அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
06.08.2021