Saturday, August 14, 2021

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  இன்று 14.08.2021 சனிக்கிழமை காலை, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்ற 16ஆவது சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவை நல்கி வெற்றி பெறச் செய்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றோம்.

திராவிட இயக்கத்தின் ஆணி வேரான நீதிக்கட்சி, சென்னை மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி தொடங்கிய நூறாவது ஆண்டில், 2021 மே 7 ஆம் நாள் தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பேருவகை கொள்கின்றது.

தீர்மானம் 2: சட்டமன்றத் தேர்தலில் வாகை சூடிய நமது சட்டமன்ற உறுப்பினர்களான வாசுதேவநல்லூர் தொகுதி டாக்டர் தி.சதன்திருமலைக்குமார், மதுரை தெற்கு தொகுதி புதூர் மு.பூமிநாதன், அரியலூர் தொகுதி வழக்கறிஞர் கு.சின்னப்பா, சாத்தூர் தொகுதி டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோருக்கு இக்கூட்டம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 3: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா துயர் சூழ்ந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முனைந்து மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளும், செயல் திட்டங்களும் மக்களின் உயிர் காப்பதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகின்றது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், அரசு மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகின்றது.

தீர்மானம் 4: திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மே 7, 2021 அன்று முதல்வர் பொறுப்பு ஏற்றவுடனேயே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து முக்கிய ஆணைகளில் முதல் கையொப்பம் இட்டார்.

1) அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா உதவித் தொகையாக ரூ.4000 வழங்குதல். 

2) பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு (16.5.2021 முதல்) 

3) மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம்

4) மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற ‘உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கம்.

5) கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின்மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கும்.

முதல்வர் பொறுப்பு ஏற்ற முதல் நாளிலேயே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்த ஐந்து அரசு ஆணைகளும் நூறு நாட்களில் செயலாக்கம் பெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதற்கு மதிமுக சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவிக்கின்றது.

தீர்மானம் 5: தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை அளிக்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.

இக்குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார மதி உரைஞர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக் கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்ட் ஜுன்ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இடம் பெற்றுள்ளனர். 

முதல்வரின் இந்த முயற்சி, அரசியல் வரலாற்றில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதற்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

50 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் கலைஞர் அவர்களால் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 23.04.2020 அன்று, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு என மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதனையும் திருத்தி அமைத்து, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களை, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவராகவும், வேறு சில உறுப்பினர்களையும் நியமித்து இருப்பதையும் இக்கூட்டம் வரவேற்கின்றது.

தீர்மானம் 6: திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஏற்ப, ஆகஸ்டு 9 ஆம் தேதி தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த பத்து ஆண்டுக் காலத்தில், தமிழ்நாட்டின் நிதி நெருக்கடி, கடன்சுமை அதிகரிப்புக்கு அ.இ.அ.தி.மு.க. அரசின் நிதி நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என்பதையும், வருவாய் பற்றாக்குறை, கடன் உயர்வு ஆகியவற்றிற்கு திட்டமிடலில் பலவீனம் என்பதும் வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்பட்டு இருக்கின்றது.

2012-13 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில், இந்திய மாநிலங்களில் 3ஆவது நிலையில் இருந்த தமிழ்நாடு, 2018-19  காலகட்டத்தில் 11 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.

இந்திய அரசின் 14 ஆவது நிதிக்குழு வழிகாட்டுதலின்படி, மாநிலத்திற்கான கடன் உச்ச வரம்பு, ஒட்டுமொத்த பொருள் ஆக்கத்தில் (ளுழுனுஞ) 25 விழுக்காட்டிற்கு கீழேதான் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் விகிதம் 26.69 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் மாநிலத்தின் கடன், 5 இலட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது.

அ.இ.அ.தி.மு.க. அரசின் நிர்வாக திறமை இன்மையால், ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருவூலத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, ஒன்றிய அரசின் தணிக்கை அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரி வருவாயைப் பெருக்கவும், வரிகள் அல்லாத வருமானங்களை உயர்த்தவும் உரிய திட்டமிடுதல் இல்லை. இதனால் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறையால் வருவாய் பற்றாக்குறையின் அளவு உயர்ந்துகொண்டே இருந்ததால் மேலும் மேலும் கடன் பெற்றே அரசு நிர்வாகம் நடைபெற்று இருக்கின்றது.

ஒன்றிய பா.ஜ.க. அரசும், தமிழ்நாட்டிற்குக் கிடைத்து வந்த வரி விகிதத்தை 2.20 விழுக்காட்டில் இருந்து, 1.28 விழுக்காடாகக் குறைத்து விட்டது. தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை 20,033 கோடி ரூபாயை, இதுவரையில் ஒன்றிய அரசு வழங்கவில்லை.

இடைக்கால வரவு செலவு அறிக்கையின்படி, தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 இலட்சம் கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் 2 கோடியே 6 இலட்சத்து 24 ஆயிரத்து 238 குடும்பங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது 2 இலட்சத்து 64 ஆயிரத்து 926 கோடி ரூபாய் கடன் இருக்கின்றது.

தமிழ்நாட்டின் நிதிநிலை அதலபாதாளத்தில் இருப்பதையே வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது.

பத்து ஆண்டுக் காலம் பாழ்பட்டுப்போன தமிழ்நாட்டை உய்விக்கும் வகையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

எனும் குறள்நெறிக் காட்டும் வகையில் செயல்பட்டு சாதனைச் சரித்திரம் படைப்பதற்கு மதிமுக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 7: காவிரி ஆற்று நீர் பங்கீட்டுச் சிக்கலில் பிப்ரவரி 5, 2007 இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், பிப்ரவரி 16, 2018 இல் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றை அலட்சியம் செய்த கர்நாடக மாநிலம், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டுவதில் முனைப்பாக இருக்கின்றது.

ஏப்ரல் 14, 2021 டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில், மேகேதாட்டுப் பகுதியில் அணை கட்டுமானப் பணிகளுக்கு பொருட்கள் குவிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியானது. இதனையடுத்து, சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்மண்டல அமர்வு, தாமே முன்வந்து கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு தடை விதித்தது. அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்திட ஒரு குழுவையும் அமைத்தது. மேலும் ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல், மேகேதாட்டு தடுப்பு அணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டு இருப்பதை ஏற்க முடியாது என உத்தரவிட்டது.

உடனே கர்நாடக மாநில அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய இத்தீர்ப்பை ரத்து செய்யுமாறு டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையகத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே.கோயல் அவர்கள் தமிழக அரசிடம் விளக்கம் கோராமல், கர்நாடகம் வைத்த கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் ஆணையை ரத்து செய்து ஜூன் 18, 2021 இல் தீர்ப்பு அளித்தது.

இதன் பின்னணியில்தான் கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்த எடியூரப்பா, மேகேதாட்டு அணை கட்ட தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் அனுமதி அளித்து விட்டதாக கூறிக்கொண்டு, அணை கட்டுமானப் பணிகளை தொடங்குவோம் என்று அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்து ஒன்றிய அரசின் அனுமதி பெற வலியுறுத்தினர் எடியூரப்பா.

இந்நிலையில், தமிழக முதல்வர்பொறுப்பு ஏற்றவுடன், ஜூன் 17, 2021 இல் டெல்லி சென்ற திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

பின்னர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 6, 2021 இல் டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, கர்நாடக மாநிலத்தின் அணை கட்டும் முயற்சிக்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 12, 2021 இல் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்துக் கடசிக் கூட்டத்தைக் கூட்டி, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார். அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்ட்ட முடிவின்படி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்துக் கட்சிக் குழு ஜூலை 16 ஆம் நாள் டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்து, அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அளித்து, மேகேதாட்டு பகுதியில் அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும்; அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு பெரும் கேடு விளையும் என்பதையும் சுட்டிக் காட்டியது.

இக்குழுவில் கழகப் பொதுச்செயலாளர் திரு வைகோ எம்.பி. அவர்களும் சென்று தமிழ்நாட்டின் எதிர்ப்பை எடுத்து இயம்பினார்.

இதனிடையே, கர்நாடக மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதால், பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. அரசின் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவர் ஆகஸ்டு 5 ஆம் நாள், மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம்; யார் தடுத்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை;அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று கொக்கரித்து இருக்கின்றார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அரசு அமைப்புச் சட்ட நெறிமுறைகள், நீர்பங்கீட்டுச் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்று அறைகூவல் விடுத்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கர்நாடகத்திற்குத் துணைபோகக் கூடாது என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 8: மக்கள்ஆட்சிக் கோட்பாடுகள், நாடாளுமன்ற மரபுகள், அரசு அமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தையும் தகர்த்து, பாசிசப் பாதையில் பயணிக்கும் பா.ஜ.க. அரசு, தனி மனித உரிமையையும் அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையையும் தட்டிப்பறித்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. (NSO) என்ற நிறுவனத்தின், பெகாசஸ் உளவு மென்பொருளைப் பெற்று , அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், ஊடகங்களிச் செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் உளவு பார்க்கும் மோசமான செயலில் 2017 ஆம் ஆண்டில் இருந்து பா.ஜ.க. அரசு ஈடுபட்டு இருந்த தகவல்கள் பன்னாட்டு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. அலைபேசிகள் ஒட்டுக்கேட்பு, மின்னஞ்சல்களில் ஊடுருவல் போன்றவற்றை பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வந்திருக்கின்றது.

இந்துத்துவக் கருத்தியலை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களை எதிர்ப்போர், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரது மின்னஞ்சல்களில் ஊடுருவி, பெகாசஸ் மென்பொருள் மூலம் கருத்துகளைத் திணித்து, பிரதமர் மோடியை கொல்லத் திட்டமிட்டார்கள் என்று பொய் வழக்குப் புனைந்து சிறையில் தள்ளி கொடுமை புரிந்து வருகின்றது.

பெகாசஸ் உளவு குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் பா.ஜ.க. அரசு, நாடாளுமன்ற கூட்டத் தொடரையே செயல் இழக்கச் செய்து விட்டது. 

உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான உளவு வேலையில் ஈடுபட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சமூக செயல்பாட்டாளர்களான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம்நவ்லகா, வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, கவிஞர் வரவரராவ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ளே, எல்கார் பரிசத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுதிர்தாவ்லே, சுரேந்தர்  கட்லிங், மகேஷ் ரௌட், சோமா சென், ரொனாவில்சன் உள்ளிட்ட 16 பேர் மீதும் தேசிய விசாரணை முகமை (NIA) தொடர்ந்துள்ள ஊபா சட்டப் பிரிவு வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 84 வயது முதியவரும் சமூக செயல்பாட்டாளருமான மனித உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி பாதிரியார் பீமா காரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக் கொடுமையில் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தீர்மானம் 9: பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து மக்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜூலை 19, 2021 இல் எழுத்துப்பூர்வமாக ஒன்றிய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஸ்வர் தெலி பதில் அளித்தார். அதில், “பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை 88 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொருள் ஆக்க வரி வசூல் ரூ.3.35 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பொருள் ஆக்க வரி வசூல் ரூ. 1.78 இலட்சம் கோடியாகத்தான் இருந்தது” என்று தெரிவித்து இருக்கின்றார்.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் காரணமாகக் கூறி, கடந்த ஆண்டு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை ரூ.19.98 லிருந்து ரூ.32.90 ஆகவும், டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ. 15.83 லிருந்து ரூ.31.80 ஆகவும் பா.ஜ.க. அரசு உயர்த்தியது.

இதனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.103.82 ஆகவும், டீசல் விலை ரூ.96.47 ஆகவும் உயர்ந்துவிட்டது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வந்தாலும் பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு முன்வரவில்லை.

ஜூலை 2 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 77.51 டாலராக இருந்தது. தற்போது 69.32 டாலராக சரிந்துவிட்டது. ஆனாலும் ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 76 முறையும், டீசல் விலை 73 முறையும் உயர்த்தப்பட்டு உள்ளன.

விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக  உயர்த்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்து, விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றது.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான வரி ரூ. 3 குறைத்து இருப்பதற்கு இக்கூட்டம் பாராட்டுத் தெரிவிக்கின்றது.

தீர்மானம் 10: மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் பா.ஜ.க. அரசு கடல்மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன்வரைவை அறிமுகம் செய்து இருக்கின்றது. மீன் பிடித் தொழிலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் இச்சட்ட முன்வரைவு, இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறுக்கின்றது. 

நிலப்பரப்பில் இருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என வகுக்கப்படுகின்றது.

இதில் பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்கக்கூடாது; கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப் படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்; மீன்பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப் பொருந்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, வணிகக் கப்பல் சட்டம் 1958 இன் கீழ் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே மீன்பிடி உரிமங்கள் கொடுக்கப்படும்.

இதன்படி பதிவு செய்ய வேண்டுமானால், கப்பலில் வேலை செய்யும் மாலுமி கட்டுமரத்திலும்கூட இருக்க வேண்டும்; கட்டுமரம், படகு இயக்க ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும்; தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும்.

இவை எதுவும் பாரம்பரிய மீன்பிடிக் கட்டுமரங்களில் இருந்ததும் இல்லை. அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. ஆனால் புதிய சட்ட முன்வரைவில் இவை இடம் பெற்று இருக்கின்றன.

12 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழமான நல்ல மீன்கள் நிறைந்துள்ள பகுதியில் அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

உள்ளூர் பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது. 

தடையை மீறிச் செல்லும் மீனவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள். மீன்வளத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கலன்களை ஆய்வு செய்ய இந்த முன்வரைவு அதிகாரம் அளிக்கின்றது.

இச்சட்டத்தை மீறும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கவும், 5 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கவும் விதிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தை பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற கடல்மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன் வரைவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக வலியுறுத்துகின்றது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.08.2021

No comments:

Post a Comment