ஒன்றிய பா.ஜ.க. அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளை காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் கடந்த 2020 நவம்பர் 26 முதல் இன்றைய நாள் வரையில் 277 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள்.
இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கொந்தளிப்பை அலட்சிப்படுத்தி வருகிறது.
விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், வேளாண் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களும் இந்தியாவில் வேளாண் தொழிலையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து:க கொடுக்க வழி வகை செய்கிறது.
வேளாண்துறை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் பெரு நிறுவனங்களிடம் போய்விடும் அபாயம் உருவாகி உள்ளது.
வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இச்சட்டங்கள் உறுதிப்படுத்தவில்லை.
வேளாண் விளை பொருள் சந்தை முழுக்க முழுக்க பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்களின் பிடியில் சென்றுவிடும்.
மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் பகைச் சட்டங்களும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது ஆகும்.
இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்டு 28 ஆம் நாள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் பகைச் சட்டங்களை இரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதில் வெற்றி கிட்டும் வரை போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பக்கம் தி.மு.க. அரசு நிற்கும் என்பதற்கு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் சான்றாக இருக்கிறது.
இதனிடையே அரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தொகுதியான கர்னலில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது அரியாணா காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட கொடூர தாக்குதலால் விவசாயிகள் இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அடக்குமுறை மூலம் விவசாயிகளை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காணுகிற அரியாணா அரசுக்கும், அலட்சியப்படுத்துதல் மூலம் இத்தகைய அறப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்று நினைக்கின்ற நரேந்திர மோடி அரசுக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.08.2021
No comments:
Post a Comment