Friday, August 13, 2021

நிதிநிலை அறிக்கை : பொற்கால ஆட்சிக்கான திறவுகோல்! வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம். வைகோ அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து இருக்கின்றார். 10 ஆண்டுக் கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, கடன் சுமை, நிதி நிர்வாக சீர்கேடுகள் அனைத்தையும் சீரமைக்கும் பெரும் பொறுப்பு, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.

கடந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள ரூ.58962.68 கோடி வருவாய் பற்றாக்குறைக்கு வழி தேடியாக வேண்டும். நிதிப் பற்றாக்குறை 92529.43 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இத்தகைய நெருக்கடியான நிலைமையில், தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கையில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருப்பது வரவேற்கத் தக்கது. இதனால் அதனால் ஏற்படும் 1160 கோடி ரூபாய் வருவாய் இழப்பைத் தாங்கிக் கொள்ள முன்வந்திருக்கும் அரசுக்குப் பாராட்டுகள்.

வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு, 77.88 விழுக்காடு ஒதுக்கீடு செய்து இருப்பதும், மருத்துவம் மற்றும் குடும்ப நலன் துறைக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக ரூ.3070 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதும் வரவேற்கத்தக்கது.

கொரோனா பேரிடர் இன்னும் நீடிக்கும் நிலையில், இத்துறைக்கு 18933.20 கோடி ரூபாயும், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் துறைக்கு 1046.09 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டு இருப்பது தி.மு.க. அரசின் மக்கள் மீதான நலனை உணர்த்துகின்றது.

உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட ரூ.1937.57 கோடி கூடுதல் ஆகும்.

நீர்வளத்துறைக்கு ரூ.6607.17 கோடி ஒதுக்கி, தமிழ்நாடு நீர்வளத் தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் உருவாகவும், ரூ.610 கோடி செலவில் உலக வங்கி உதவியுடன் நீர் நிலைகளைச்  சீரமைத்துப் புதுப்பிக்கவும், மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை போன்ற அணைகளின் நீர்த்தேக்கக் கொள்ளளவை  உயர்த்தவும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், இந்த அரசின் நீர் மேலாண்மை மீதான அக்கறையைக் காட்டுகின்றது.

தமிழ்நாட்டின் தொழிற்புரட்சிக்கு வித்திடும் வகையில் ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், புதிதாக 9 மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளும், 4 இடங்களில் தகவல் தொழிலநுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்பதும் பாராட்டுக்கு உரியது.

திருவள்ளூர் மாவட்டம் மாநல்லுரில் மின் ஊர்திகள் பூங்கா, காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா, தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருட்கள் பூங்கா, மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் உணவுப் பூங்கா, சென்னையில் நந்தம்பாக்கம், காவனூரில் நிதிநுட்ப நகரங்கள் போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சி தருகின்றன. இதனால் தொழிற்துறை வளர்ச்சி பெறும்; வேலைவாய்ப்புகள் பெருகும்.

சென்னை - குமரி 8 வழிச் சாலையால், தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும்; பயணிகள் போக்குவரத்து மேம்படும்; நேரம் சேமிக்கப்படும்; ஊர்தி மோதல்கள் குறையும்; பாதுகாப்பான பயணமாக அமையும்.   

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது மெய் அல்ல என்பதைத் தெரிவித்து இருக்கும் நிதி அமைச்சர், 2500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையில் கொள்முதல் செய்துதான் சமாளிக்கப்பட்டு வருவதை வெளிப்படையாகக் கூறி இருக்கின்றார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் 17980 மெகாவாட் மின்சாரம் ஆக்கும் திறனைக் கூடுதலாக பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஸ்டாலின் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் வேளாண் இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்கு ரூ.19872.77 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை குடிசைகள் அற்ற மாநிலமாக ஆக்குவதற்குத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதும், 79,395 மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்கவும், 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை காணப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

நகர்ப்புற வளர்ச்சிக்கான பல திட்டங்கள் வரவு - செலவுத் திட்ட அறிக்கையில் வெளிப்பட்டுள்ளன.

பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்துவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. மகளிருக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதம் அளித்து இருப்பதும், அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணத்தை  உறுதி செய்து இருப்பதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் ஆகும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் வரி பங்கீட்டில் பாரபட்சம், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை வழங்காமல் இருப்பது போன்றவற்றை எதிர்கொள்ள, கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், மாநிலத்தின் உரிமைக் கொடியை திமுக அரசு உயர்த்திப் பிடிக்கின்றது.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மின்னணு கொள்முதல், அனைத்துத் துறைகளிலும் முழுமையாகக் கணினி மயம் போன்ற அறிவிப்புகள் மூலம், ஊழல் அற்ற நேர்மையான திறன் மிகுந்த அரசு நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்து இருக்கின்றார்.

மொத்தத்தில் பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கின்றது. வரவேற்கின்றோம்; பாராட்டுகின்றோம். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.08.2021

No comments:

Post a Comment