தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (27.08.2021 ) காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப் பேரவை விதி 110 இன் கீழ் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ 317.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார்.
நாடு இழந்து, வீடு இழந்து, உறவுகளை இழந்து, அனைத்தையும் இழந்து அநாதைகளாய், அகதிகளாய் முகாம்களில் தங்கள் வாழ்நாளை கடத்திக்கொண்டு இருக்கின்ற ஈழத் தமிழ் உறவுகளுக்கு மனிதநேய அடிப்படையில் பல்வேறு உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல், அவர்களது பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொறியியல் படிப்பு பயில்வதற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும் இவ்வாறே கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். முதுநிலை பட்டப் படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில், பாலிடெக்னிக் படிப்பிற்கு 2,500 ரூபாய், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு 3,000 ரூபாய், இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு 5,000 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை பாலிடெக்னிக் படிப்பிற்கு 10,000, இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பிற்கு 12,000 ரூபாய், இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20,000 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி இனி வழங்கப்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பத்துக் கோடி ரூபாய் செலவில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அங்குள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 சுயஉதவிக் குழுக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயுடன், மேலும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையை மாற்றி, குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1500 ரூபா, இதரப் பெரியவர்களுக்கு 1000 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என இனி உயர்த்தி வழங்கப்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடும்பத்திற்கு 5 சமையல் எரிவாயு உருளைக்கு தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ அரிசி இனி விலை இல்லாமல் வழங்கப்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், தமிழ்நாடு அரசு குடும்பம் ஒன்றுக்கு அதற்காக அளித்த தொகை 1790ஐ, 3473 என உயர்த்தி வழங்கப்படும்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 1296 ரூபாய் மதிப்பில், சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் பாத்திரங்கள் வழங்கப்படும்.
இத்துடன் முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளி பதிவில் உள்ள அகதிகளுக்கும் உதவிகளை வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்கவும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத்துறைச் செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்பட்டு, இலங்கைத் தமிழ் அகதிகளுக்குத் தேவையான உடனடி நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு இலங்கைத் தமிழ் அகதிகளான நம் உறவுகளுக்கு தாய் உள்ளத்தோடு தேவையான பல்வேறு உதவிகளை கடமை உணர்ச்சியோடு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு நிறைவேற்றி உள்ளது.
கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால் என்று அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் முன்பு குறிப்பிட்டார். அந்தத் தமிழ் ஈழ உறவுகளின் கண்ணீரைத் துடைக்கும் மனிதநேயப் பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முகாம்களில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள இயலாத நிலையில், அகதிகளில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளும் நாளேடுகளில் அவ்வப்போது வெளிவந்துகொண்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையிலும் கவனம் செலுத்தி, முகாம்களில் தமிழ் ஈழ அகதிகள் நிம்மதியாக வாழ்ந்திடவும், இலங்கை செல்ல விரும்பும் ஒருசிலருக்கு அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.08.2021
No comments:
Post a Comment