Thursday, June 30, 2022

தீஸ்தா செதல்வாத் கைது! வைகோ MP கடும் கண்டனம்!

மனித உரிமைப் போராளியும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizens for Justice and Peace- CJP) எனும் தன்னார்வ அமைப்பின் நிறுவனருமான வழக்கறிஞர் தீஸ்தா செதல்வாத், குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

2002 குஜராத் படுகொலைகளின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் காங்கிரசு எம்.பி. இஷான் ஜாப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற இந்துத்துவ மதவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்தியவர்தான் தீஸ்தா செதல்வாத்.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத வெறியாட்டத்தை நடத்திய இந்துத்துவ வெறியர்கள் 117 பேர் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா எனுமிடத்தில் நடந்த முஸ்லிம் படுகொலை வழக்கில் குஜராத்தின் அன்றைய மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 26 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கும் அவரது கடும் உழைப்பும் முக்கியமானவை.
குஜராத் படுகொலைகள் குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வர் மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்தது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாத் இருவரும் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேரை சிறப்பு விசாரணை குழு விடுவித்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக வழக்கறிஞர் தீஸ்தா செதல்வாத், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, தீஸ்தா செதல்வாத், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்த தீஸ்தா செதல்வாத் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டு குஜராத் மாநில சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பீமாகோரேகான் வழக்கில் மனித உரிமைப்போராளிகளான கவிஞர் வரவரராவ், வழக்கறிஞர் சுதாபரத்வாஜ், கவுதம் நவ்லாகா, வெர்னான் கான்சால்வஸ், அருண் பஃரைரா, சொமா சென், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே, ரோனா வில்சன், பேராசிரியர் ஹனிபாபு உள்ளிட்ட 16 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை மூலம் பொய் வழக்கு புனையப்பட்டு, மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி 84 வயதில் சிறைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் இழந்தார்.
இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் வெறுப்பு அரசியலை கருத்தியல் ரீதியாக எதிர்க்கும் சிந்தனையாளர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுப்போர், தலித், பழங்குடி மக்களுக்காக பாடுபடுவோரை பொய் வழக்கில் கைது செய்து, தேசத்துரோகச் சட்டத்தை ஏவுவதும்,ஊபா சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதும் பாசிச பாஜக ஆட்சியில் தொடர்வது கடும் கண்டனத்துக்குரியது.
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் பெண் போராளி தீஸ்தா செதல்வாத் மீதான பொய் வழக்கை ரத்து செய்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் .
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.06.2022

Tuesday, June 28, 2022

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 28.06.2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதுபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு::

தீர்மானம் எண். 1: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு நடத்தி அண்ணா அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநாடு நடத்த இயலாத சூழலில், வரும் செப்டம்பர் 15 இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114ஆவது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாள் விழாவை கழகக் கொடியேற்றியும், பேரறிஞர் அண்ணா திருஉருவப் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 2: இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் ஜூலை மாதம் 25 ஆம் தேதி பதவியேற்க வேண்டும்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஜூன் 9 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4033 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநில ஆளுநருமான திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் 21.06.2022 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அவர்கள் டெல்லியில் கூட்டிய கூட்டத்தில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு யஷ்வந்த் சின்கா அவர்களை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்கட்சிகளின் சார்பில் நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திரு யஷ்வந்த் சின்கா அவர்கள் ஜூன் 27 ஆம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க திரு யஷ்வந்த் சின்கா அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண். 3: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவின் தீர்மானத்தின்படி, கழக உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் நடத்த வேண்டிய சூழலில் உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர் படிவங்களை உரிய தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 4: காவிரிநீர் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்தத் தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக மாநில அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் தீட்டியுள்ள கர்நாடக அரசு, நடப்பு 2022-23 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில், மேகேதாட்டு அணைக் கட்டுமானத்திற்கு ரூ.1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநில சட்டமன்றத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின்படி, தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது.

ஆனால் கர்நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று கொக்கரிக்கிறது. இந்நிலையில்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17 ஆம் நாள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் மேட்டூர் அணை, கல்லணை ஆகிய காவிரி பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தனர். கல்லணையில் காவிரி படுகைப் பகுதிகளைப் பார்வையிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், டெல்லியில் நடைபெறும் ஆணையத்தின் கூட்டத்தில் மேகேதாட்டு அணை பற்றி விவாதிப்போம். அதற்கு ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். உடனடியாக ஜூன் 18 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கர்நாடகா மாநிலத்திற்குச் சார்பாக நடந்துகொள்வதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு கர்நாடக மாநிலத்தின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு டில்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தைச் சந்தித்தது.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகம் மேகேதாட்டு அணை கட்டக் கூடாது என்றும் வலியுறுத்தி கோரிக்கை மனுவும் ஒன்றிய அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் அணை கட்ட முடியாது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறி உள்ளார்,

இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று மதிமுக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 5: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், இராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான ‘அக்னி பாதை’ திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இந்திய இராணுவத்தில் 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்த இராணுவ வீரர்களாக பணிபுரிய சேர்க்கப்படுவார்கள். 4 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடிந்ததும் ரூ.11 இலட்சம் முதல் 12 இலட்சம் வரையிலான தொகையுடன் ஓய்வூதியம் இன்றி வெளியேற்றப்படுவர்.

தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தி, பின்னர் தூக்கி வீசுவதைப் போல, இந்திய இராணுவத்திலும் இளம் வீரர்களை ஒப்பந்தப் பணியாளர்களாகச் சேர்த்து, 4 ஆண்டுகளில் தூக்கி எறிவது மிக மோசமான திட்டமாகும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னி பாதை’ திட்டத்தை எதிர்த்து பீகார், ஜார்கண்ட், உ.பி., இராஜஸ்தான், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எரிதழல் ஏந்தி போராட்டக் களத்தில் குதித்து உள்ளனர். தமிழ்நாட்டிலும் அமைதி வழி அறப்போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நாட்டு இளைஞர்களின் கொந்தளிப்பைப் புறந்தள்ளிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, அறிவிக்கப்பட்ட ‘அக்னி பாதை’ திட்டத்தின்படி, ஜூலை மாதத்தில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

‘இந்திய இராணுவத்தை காவிமயமாக்கு’ என்று ஆர்.எஸ்.எஸ். முழங்கி வருவதற்குச் செயல் வடிவம் கொடுக்க பா.ஜ.க. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது. சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட் படையாக, காவிப் படையாக இந்திய இராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், ‘அக்னி பாதை’ திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 6: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகளிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமித்து வைக்க, அணுஉலைக்கு அப்பால் (Away From Reactor -AFR) சேமிப்புக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கோட்போலே செய்தியாளர்களிடம் கூறியதாக நாளேடுகளில் தகவல் வெளியாகி இருக்கிறது. (இந்து தமிழ் திசை ஜூன் 17, 2022)

கூடங்குளம்அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகம் அமைவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக 2019 ஜூலை 10 ஆம் நாள், நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இரத்து செய்யப்பட்டது.

பிரதமர் அலுவலக மற்றும் அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கூடங்குளத்தில் வெளியாகும் அணுக்கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அந்த வளாகத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்து, பின்னர் மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அணுஉலைக்கு அப்பால் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது அபாயகரமான விளைவுகளை உருவாக்கும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 18, 2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கூடங்குளத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு அமைப்பதை கைவிட வேண்டும் என்றும், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது கூடங்குளம் அணுஉலை வளாகத்தினுள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம் அமைக்க இந்திய அணுசக்திக் கழகம் திட்டமிட்டு வருவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கூறி உள்ளார்.

கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 7: கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பருத்தி நூல் விலை ஒரு கிலோ ரூ. 125 ஆகும். நூல் விலை தாறுமாறாக உயர்ந்து தற்போது ரூ. 480 ஆக ஏற்றம் கண்டுள்ளது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளித் தொழில் முடங்கி உள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே ஒன்றிய அரசு பருத்திப் பதுக்கலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை இரத்து செய்து, உள்நாட்டு உற்பதிக்குப் பயன்படுத்த வேண்டும். நூல் இறக்குமதிக்கான வரியை இரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள் மே 16, 17, 2022 இல் இரு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் நூல்விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். கடந்த மே 19, 2022 அன்று ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலைத் தொடர்புகொண்டு, நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருப்பூர் பின்னாடைத் தொழில் மற்றும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கின்றன, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகி இருக்கிறது என்பதைத் தெரிவித்து நூல் விலை உயர்வைத் தடுக்கக் கோரினார்.

ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாராமுகம் காரணமாக நூல் விலையேற்றத்தால் ஜவுளித் தொழில் முற்றிலும் நிலைகுலைந்து வருகிறது. நூல் விலை உயர்வைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நூல் விலையை குறைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 8: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன்-20 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 90.7 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் மாணவர்களும், கணிதப் பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

10 ஆம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தை எழுதிய 5.16 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிபெறவில்லை.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இதனை முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருப்பின் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக நடத்தப்படும் 1466 பள்ளிகளில், ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அப்பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்காமல், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், நலத்துறை தாசில்தார் மேலாண்மையில் இயங்கி வருகின்றன.

இப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் மற்ற அரசுப் பள்ளிகளைவிட பல விழுக்காடு புள்ளிகள் குறைவாக உள்ளன. இதற்குக் காரணம், பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் மலைப்பகுதிகளில் செயல்படும் பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை சரிவர இல்லை என்று தெரிகிறது.

இதுபோன்ற தனிப் பள்ளிகள் சிறப்பு கவனம், தனி நிதி ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடுகளை உறுதி செய்யும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டிருந்தாலும், அவை சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு, பின்தங்கிய குழந்தைகளுக்கு பயன்தராத நிலை இருப்பது வேதனைக்குரியது. எனவே தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 9: மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி சார்பில், கழக கொள்கைவிளக்க பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.06.2022

Monday, June 27, 2022

கூடங்குளத்தில்: அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிடுக. வைகோ MP அறிக்கை!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகளிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமித்து வைக்க, அணுஉலைக்கு அப்பால் (Away From Reactor -AFR) சேமிப்புக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கோட்போலே செய்தியாளர்களிடம் கூறியதாக நாளேடுகளில் தகவல் வெளியாகி இருக்கிறது. (இந்து தமிழ் திசை ஜூன் 17, 2022)


கூடங்குளம்அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகம் அமைவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக 2019 ஜூலை 10 ஆம் நாள், நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இரத்து செய்யப்பட்டது.

பிரதமர் அலுவலக மற்றும் அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கூடங்குளத்தில் வெளியாகும் அணுக்கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அந்த வளாகத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்து, பின்னர் மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அணுஉலைக்கு அப்பால் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது அபாயகரமான விளைவுகளை உருவாக்கும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 18, 2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கூடங்குளத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு அமைப்பதை கைவிட வேண்டும் என்றும், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது கூடங்குளம் அணுஉலை வளாகத்தினுள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம் அமைக்க இந்திய அணுசக்திக் கழகம் திட்டமிட்டு வருவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கூறி உள்ளார்.

கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.06.2022

Saturday, June 18, 2022

எஸ்.கே. ஹல்தர், காவிரி ஆணையத்தின் தலைவரா? கர்நாடக அரசின் பிரதிநிதியா? வைகோ MP கேள்வி!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்; அக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. மேகேதாட்டு அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழநாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்து இருக்கின்றது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு இடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், மேட்டூர் அணை மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளை கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்தனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் எஸ்.கே.ஹல்தர், ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். அவர், மறைமுகமாக அல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அறிவுறுத்தலின்பேரில், நேரடியாகவே கர்நாடகத்திற்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது.

காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 16.2.2018 இல் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றில், காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு தமிழ்நாட்டின் இசைவைப் பெற வேண்டும் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி என்பது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரியில் 177.25 டி.எம்.சி. நீர் கர்நாடகம் திறந்துவிடப்படுவதை உறுதி செய்வது மட்டும்தான். அதற்கும்கூட அதிகாரம் எதுவும் அற்ற, பல் இல்லாத ஆணையம் இது என்பதை, நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம்.

காவிரி நீரைத் தடுத்து மேகே தாட்டுவில், ரூபாய் 9 ஆயிரம் கோடியில் 67.14 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டினால், அதன்பிறகு, தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர் கூடக் கிடைக்காது. அதோடு 400 மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் செயல்படுத்த கர்நாடகம் முனைந்துள்ளது.

கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரில் இருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக பரந்து விரிந்து கொண்டே போகின்றது. ஆனால் தமிழ்நாடு கடந்த 48 ஆண்டுகளில் மொத்தம் 15.87 இலட்சம் ஹெக்டேர் அளவு சாகுபடிப் பரப்பை இழந்து விட்டது. கர்நாடகம் மாநிலம் பல்வேறு புதிய புதிய பாசனத் திட்டங்களுக்குக் காவிரி நீரைக்கொண்டு போகின்றது என்பதை மறுக்க முடியாது.

மேகேதாட்டு அணை குறித்து விவாதிப்போம் என்று, காவிரிப் படுகைக்கு வந்து எஸ்.கே.ஹல்தர் கூறி இருப்பது கடும் கண்டத்திற்கு உரியது.

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.06.2022

Friday, June 17, 2022

அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெறுக! வைகோ MP அறிக்கை!

இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சரவை, ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்து உள்ளது.

இதன்படி, 17.5 வயது முதல் 21 வயது உடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; தற்போதைய கல்வித் தகுதி, உடற் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும்; புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர்; இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்ற வேண்டும்; அதன்பிறகு, ரூ.11 இலட்சம் முதல் 12 இலட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள். 25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள்; 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். இதுதான், அக்னி பாதைத் திட்டம்.
இந்தப் புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்தியப் படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதியச் செலவுகளைத் தடுப்பதுதான் என்று, இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது, நியாயம் அற்ற தேர்வு முறை; இந்தியப் படையில் ஒதுக்கீடு பெற்று இருக்கின்ற பல்வேறு பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என முன்னாள் இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக, பிகார், அரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிகாரில் இரயிலுக்குத் தீ வைத்துள்ளனர்.
நாட்டில், வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியப் படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர்.
இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, இராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.
அதுமட்டும் அல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசின் இன்னொரு உள்நோக்கம் இதில் ஒளிந்து இருக்கின்றது. “இந்திய இராணுவத்தைக் காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் செயல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமே ‘அக்னி பாதை’ என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.
அதாவது, 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்வுச் சான்று இதழ் தரப்படும் என்கிறார்கள். ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இதுதான் உள்நோக்கம்.
இந்தத் திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘அக்னி பாதை’ திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
17.06.2022

Thursday, June 16, 2022

புதுச்சேரி மின்சரத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சி! வைகோ MP கண்டனம்!

புதுச்சேரியின் மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, புதுச்சேரி அரசுக்குப் பல நெருக்கடிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொடுத்து வருகிறது. மின்சாரத் துறை என்பது ஒத்திசைவுப் பட்டியலின் (CONCURRENCE LIST)கீழ் வருவதால், மாநில அரசுகளுக்கு இந்தத் துறையில் முழுமையான அதிகாரம் உள்ளது.
இந்தச் சூழலில்தான், மாண்புமிகு நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முன்வந்தபோது, அதனை ஏற்க மறுத்து அந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்தி அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு புதுச்சேரி சட்டமன்றத்தில் 22.07.2020 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.
அதன் பின்னரும், யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் பகிர்வு நிறுவனங்கள் (DISCOMS) தனியார் மயமாக்கப்படும் என்று 2020 மே திங்களில் அறிவித்து அதற்கான முதல்கட்டப் பணிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. DISCOMS நிறுவனங்களை மீட்டெடுக்க, “ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” திட்டத்தின்கீழ் நிதி உதவி அளிக்க அந்நிறுவனங்களைத் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு விதிக்கிறது.
அரசின் தவறான இந்த நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி அரசில் மின்துறைக்கு 285 ஏக்கர் நிலம் உள்ளது; ஐந்து இலட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்; 3,500 அரசு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டுள்ளனர்; 35,000 குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது. கார்ப்பரேட்டுகளிடம் மின்சாரத் துறையை விடுவது என்பது பொது மக்களுக்கு மாபெரும் கேட்டினையே விளைவிக்கும். இதன்மூலம் தாறுமாறாக மின்கட்டணம் உயரும்; வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும்; தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும். எனவே, ஒன்றிய அரசும் புதுச்சேரி மாநில அரசும் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசின் முறைகேடான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து மின்துறைப் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார் மய / கார்ப்பரேசன் மய / எதிர்ப்புப் போராட்டக் குழு மக்களை அணிதிரட்டி அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
மின்துறையைத் தனியார் மயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
16.06.2022

Tuesday, June 14, 2022

51 ஆம் திருமண நாளை அன்பு சூழ கொண்டாடிய வைகோ MP!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமது பிறந்தநாள், திருமண நாள் எதையும் கொண்டாடியதில்லை. ஆனால் தமிழர் திருநாளான பொங்கல் விழா,அண்ணா பெரியார் பிறந்தநாள், மதிமுக உதய நாள், மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா போன்றவற்றை கொண்டாடுவார்.

தலைவர் வைகோ அவர்கள் திருமண வாழ்க்கை 50 ஆண்டுகள் பொன்விழா கடந்து 51 ஆவது ஆண்டு இன்று தொடங்குகிறது.

தொண்டர்கள், அன்பு உள்ளம் கொண்டவர்களின் மறுக்க இயலாத கொண்டாட்டமாக இன்று 14-06-2022 தலைவர் வைகோ அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

தொண்டர்கள் கொண்டு வந்த மாலையினை ஏற்று, கேக்கினை வெட்டி உண்டு மகிழ்ந்தனர் தலைவரும் இணையரும்.

தலைவரின் சுமைதாங்கியாக இருக்கிறார், என்று தலைவர் எப்போதும் சொல்லும் அவரது துணைவியார் ரேணுகாதேவி வைகோ அவர்களும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட இயற்கையை வேண்டுகிறோம்.

கோவை மறந்த விடுதலைப்போர் வரலாற்று மீட்பு மாநாட்டில் வைகோ உரை!

கோவையில் மே 17 இயக்கத்தின் சார்பாக, 222 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற "கோவை மறந்த விடுதலைப்போர் வரலாற்று மீட்பு" மாநாட்டில், தலைவர் வைகோ எம்.பி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மதிமுக தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 25.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.06.2022

சனாதன தருமத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழக ஆளுநர் ரவி! வைகோ கடும் கண்டனம்!

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்துள்ளார்.
அவரது உரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர்.
ஒரே பரமேசுவரன், ஒரே கடவுள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதை தான் நமது மார்க்கம் கூறுகிறது.
இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது.
கிமு 2ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை.
சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது.
ஒரே பரமேசுவரா என சனாதன தர்மம் சொல்கிறது. அந்த பரமேசுவரன் தான் உலகத்தை படைக்கிறார், நம் வேற்றுமையில் வாழ்கிறார் என கூறப்படுகிறது.
பாரதம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போதே நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” என அத்வைத தத்துவங்கள் கூறுகின்றன.
மற்ற நாடுகளைப் போல ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் ராணுவம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை போல ஆன்மீகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும்.
சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார், பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால், அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமை”.
ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப்பிடித்து பெருமை பொங்க பேசியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல.
ஆளுநர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்.
உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.06.2022

Sunday, June 12, 2022

மக்களுக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் உறவுப் பாலமாக அமைந்த சந்திப்பு!

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு பெருந்தன்மையுடன் என்னை சந்தித்தார்.
சட்டமன்றத் தேர்தலின் போது நான் பரப்புரை மேற்கொண்ட இடங்களில், மக்கள் பிரச்சனைகளுக்காக அமையப் போகின்ற அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி திமுக உறவுப் பாலமாக இருந்து செயல்படும் என நான் தெரிவித்தேன்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்கின்ற இடங்களில், பொதுமக்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
அவ்வாறு பெறப்படும் மனுக்களை துறைவாரியாகப் பிரித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் சென்று அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகிறேன்.
அப்படி நான் வழங்கும் மனுக்களின் அவசியம் உணர்ந்து உடனடியாக தீர்வு கிடைக்கிறது. அதற்கு தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை சகோதரர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 40 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட பழமையான கோவில்களில் அனைத்துத் தரப்பு மக்கள் வழிபட இயலாத நிலை உள்ளது. இந்தக் கோயிலில் அறக்கட்டளை என்னும் பெயரில் தனிநபரின் அத்துமீறல் தொடர்கிறது.
இதைத் தடுத்திடக் கோரி பொதுமக்கள் தந்த கோரிக்கை மனுவை அளிப்பதற்காக, அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களிடம் வெள்ளிக்கிழமை (10.06.2022) நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தேன்.
நான் கேட்ட மாத்திரத்தில் இது பொதுமக்கள் பிரச்சனை நீங்கள் என்னைத் தேடி வர வேண்டாம். நான் உங்களைத் தேடி உங்கள் இல்லத்திற்கு வருகிறேன் என்று கூறி, (11.06.2022) நேற்று காலை குறித்த நேரத்தில் அமைச்சர் அவர்கள் அண்ணாநகர் இல்லம் வந்து, இரண்டு மாவட்டத்தில் உள்ள கிராம கோவில் பிரச்சனைகள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார்.
(1) விருதுநகர் மாவட்டம்.
நான் கடந்த மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், வாழைக்குளம் கிராமம், அருள்மிகு ராக்காச்சி அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக சுற்றுவட்டார கிராம நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் வந்து என்னிடம் கோரிக்கை மனுவினை தந்தனர்.
இந்தக் கோயில் அப்பகுதியைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் வழிபடும் பொதுவான கோவிலாகும்.
2019 - ஆம் ஆண்டு கோவிலை பராமரிப்பு செய்து தருவதாகக் கூறி, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இதனால், சுதந்திரமாக பொதுமக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட இடையூறு இருப்பதாகவும், இது சம்பந்தமாக நீதிமன்றத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும்,காவல் நிலையத்திலும் முறையிட்டும் எங்களுக்கான நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை என்றும்தெரிவித்து இருந்தனர்.
நான் இதற்கான தீர்வு கிடைப்பதற்கு என்னால் இயன்ற முயற்சிகளை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்து இருந்தேன்.
அதன்படி துறை ஆணையாளர் திரு. ஜே. குமரகுருபரன் இ.ஆ.ப. அவர்களை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசு சிறப்பு வழக்கறிஞர் சுப்பாராஜ் அவர்களின் மூலம் தொடர்பு கொண்டு, மதுரை இணை ஆணையர் அவர்களின் கவனத்திற்கும் இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில் 24.05.2022 அன்று உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் விசாரணை வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்நிலையில் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் இப்பிரச்சனை குறித்து தாங்களும் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டேன்.
இதனை கவனமாகக் கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள், நான் இது சம்பந்தமாக ஆணையாளர் அவர்களிடம் பேசுகிறேன் என்றார்.
தொடர்ந்து நான் விருதுநகர் மாவட்ட சுற்றுப்பயணத்திற்குச் செல்லும் போது கோவிலுக்குச் சென்று ஆய்வு செய்கிறேன் எனவும் கூறினார்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் துரிதமான நடவடிக்கை எடுத்து, அனைத்துத் தரப்பு மக்களும் எவ்வித இடையூறும் இன்றி கோவிலில் வழிபாடு நடத்திட ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புலிப்பாறைப்பட்டி அருள்மிகு ராக்காச்சி அம்மன் கோவில் வழிபாட்டு கிராம நிர்வாகிகள் மாரியப்பன், ராதாகிருஷ்ணன், சமுத்திரக்கனி, ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
(2) திருவள்ளூர் மாவட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சாளுக்கிய மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, வட ஸ்ரீரங்கம் என அழைக்கப்படும், தேவதானம் ஸ்ரீரங்கநாதர் மற்றும் காணியம்பாக்கம் கிராமம் ஸ்ரீபிரசன்ன ஈஸ்வரர் ஆகிய இரண்டு திருக்கோயில்கள் தொடர்பான பிரச்சனை.
இந்த திருக்கோயிலுக்கு பல ஏக்கர் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது.
இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடத்தப்படாமல் இருப்பதாகவும் தேவகானம், காணியம்பாக்கம், வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களின் கருத்துக்களை கேட்டு திருக்கோயில்களுக்கு புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
இக்கோயில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழகத்தின் தீவிரத்தொண்டர் வைகோதாசன் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் அண்ணன் பூவை மு.பாபு வாயிலாக என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இப்பிரச்சனை குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் எடுத்துக்கூறினேன். ஏற்கனவே, 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே .பி .கே சேகர் அவர்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக கேள்வி கேட்டு பேசியதையும் அமைச்சருக்கு நினைவூட்டினேன்.
மேலும், இந்தப் பழமையான கோயில் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கடந்த மே 4-ஆம் தேதி தலைவர் வைகோ அவர்களின் உத்தரவின்படி மறுமலர்ச்சி திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மாவட்டச் செயலாளர் பூவை மு.பாபு அவர்களின் முன்னிலையில் அனைத்து ஊர் பொது மக்களையும் ஒருங்கிணைத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் எடுத்துரைத்தேன்.
நான் விவரித்ததை கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், அந்தநிமிடமே துறை உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
இந்த இரண்டு மாவட்ட கிராம பொது மக்களின் கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆட்சியில், அறநிலையத் துறை சார்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நேரில் வந்து உறுதியளித்த அண்ணன் மாண்புமிகு அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்களின் பெருந்தன்மையான நடவடிக்கை என் மனதில் பெரும் மகிழ்வைத் தந்தது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அமைச்சர் உடனான இந்தச் சந்திப்பின்போது திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பூவை. மு.பாபு, வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சுஜீவன், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் டி. சி.இராசேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் ஜி ஆர் பி ஞானம், இராம.அழகேசன், டில்லிபாபு, பாபா ஜெகன், மாவட்ட துணைச் செயலாளர் தனஞ்செயன், ஊராட்சி மன்றத் தலைவர் கைலாசம், வைகோ தாசன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீசன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி ,டெல்லி, பிரபாகர் முரளி, பலராமன் சுதர்சனம், கிரி அருள்செல்வம், தேவ ராஜி, பிஜேபி ரவி, சவுத்திரி, ரமேஷ், ரகு, சந்திரசேகர், கோபி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.06.2022.