Sunday, June 12, 2022

மக்களுக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் உறவுப் பாலமாக அமைந்த சந்திப்பு!

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு பெருந்தன்மையுடன் என்னை சந்தித்தார்.
சட்டமன்றத் தேர்தலின் போது நான் பரப்புரை மேற்கொண்ட இடங்களில், மக்கள் பிரச்சனைகளுக்காக அமையப் போகின்ற அரசின் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி திமுக உறவுப் பாலமாக இருந்து செயல்படும் என நான் தெரிவித்தேன்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்கின்ற இடங்களில், பொதுமக்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
அவ்வாறு பெறப்படும் மனுக்களை துறைவாரியாகப் பிரித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் சென்று அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகிறேன்.
அப்படி நான் வழங்கும் மனுக்களின் அவசியம் உணர்ந்து உடனடியாக தீர்வு கிடைக்கிறது. அதற்கு தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை சகோதரர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 40 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட பழமையான கோவில்களில் அனைத்துத் தரப்பு மக்கள் வழிபட இயலாத நிலை உள்ளது. இந்தக் கோயிலில் அறக்கட்டளை என்னும் பெயரில் தனிநபரின் அத்துமீறல் தொடர்கிறது.
இதைத் தடுத்திடக் கோரி பொதுமக்கள் தந்த கோரிக்கை மனுவை அளிப்பதற்காக, அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களிடம் வெள்ளிக்கிழமை (10.06.2022) நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தேன்.
நான் கேட்ட மாத்திரத்தில் இது பொதுமக்கள் பிரச்சனை நீங்கள் என்னைத் தேடி வர வேண்டாம். நான் உங்களைத் தேடி உங்கள் இல்லத்திற்கு வருகிறேன் என்று கூறி, (11.06.2022) நேற்று காலை குறித்த நேரத்தில் அமைச்சர் அவர்கள் அண்ணாநகர் இல்லம் வந்து, இரண்டு மாவட்டத்தில் உள்ள கிராம கோவில் பிரச்சனைகள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார்.
(1) விருதுநகர் மாவட்டம்.
நான் கடந்த மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், வாழைக்குளம் கிராமம், அருள்மிகு ராக்காச்சி அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக சுற்றுவட்டார கிராம நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் வந்து என்னிடம் கோரிக்கை மனுவினை தந்தனர்.
இந்தக் கோயில் அப்பகுதியைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் வழிபடும் பொதுவான கோவிலாகும்.
2019 - ஆம் ஆண்டு கோவிலை பராமரிப்பு செய்து தருவதாகக் கூறி, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இதனால், சுதந்திரமாக பொதுமக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட இடையூறு இருப்பதாகவும், இது சம்பந்தமாக நீதிமன்றத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும்,காவல் நிலையத்திலும் முறையிட்டும் எங்களுக்கான நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை என்றும்தெரிவித்து இருந்தனர்.
நான் இதற்கான தீர்வு கிடைப்பதற்கு என்னால் இயன்ற முயற்சிகளை செய்து தருகிறேன் என்று உறுதி அளித்து இருந்தேன்.
அதன்படி துறை ஆணையாளர் திரு. ஜே. குமரகுருபரன் இ.ஆ.ப. அவர்களை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசு சிறப்பு வழக்கறிஞர் சுப்பாராஜ் அவர்களின் மூலம் தொடர்பு கொண்டு, மதுரை இணை ஆணையர் அவர்களின் கவனத்திற்கும் இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில் 24.05.2022 அன்று உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் விசாரணை வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்நிலையில் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் இப்பிரச்சனை குறித்து தாங்களும் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டேன்.
இதனை கவனமாகக் கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள், நான் இது சம்பந்தமாக ஆணையாளர் அவர்களிடம் பேசுகிறேன் என்றார்.
தொடர்ந்து நான் விருதுநகர் மாவட்ட சுற்றுப்பயணத்திற்குச் செல்லும் போது கோவிலுக்குச் சென்று ஆய்வு செய்கிறேன் எனவும் கூறினார்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் துரிதமான நடவடிக்கை எடுத்து, அனைத்துத் தரப்பு மக்களும் எவ்வித இடையூறும் இன்றி கோவிலில் வழிபாடு நடத்திட ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புலிப்பாறைப்பட்டி அருள்மிகு ராக்காச்சி அம்மன் கோவில் வழிபாட்டு கிராம நிர்வாகிகள் மாரியப்பன், ராதாகிருஷ்ணன், சமுத்திரக்கனி, ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
(2) திருவள்ளூர் மாவட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சாளுக்கிய மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, வட ஸ்ரீரங்கம் என அழைக்கப்படும், தேவதானம் ஸ்ரீரங்கநாதர் மற்றும் காணியம்பாக்கம் கிராமம் ஸ்ரீபிரசன்ன ஈஸ்வரர் ஆகிய இரண்டு திருக்கோயில்கள் தொடர்பான பிரச்சனை.
இந்த திருக்கோயிலுக்கு பல ஏக்கர் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது.
இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடத்தப்படாமல் இருப்பதாகவும் தேவகானம், காணியம்பாக்கம், வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்களின் கருத்துக்களை கேட்டு திருக்கோயில்களுக்கு புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
இக்கோயில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழகத்தின் தீவிரத்தொண்டர் வைகோதாசன் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் அண்ணன் பூவை மு.பாபு வாயிலாக என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இப்பிரச்சனை குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் எடுத்துக்கூறினேன். ஏற்கனவே, 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே .பி .கே சேகர் அவர்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக கேள்வி கேட்டு பேசியதையும் அமைச்சருக்கு நினைவூட்டினேன்.
மேலும், இந்தப் பழமையான கோயில் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கடந்த மே 4-ஆம் தேதி தலைவர் வைகோ அவர்களின் உத்தரவின்படி மறுமலர்ச்சி திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மாவட்டச் செயலாளர் பூவை மு.பாபு அவர்களின் முன்னிலையில் அனைத்து ஊர் பொது மக்களையும் ஒருங்கிணைத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் எடுத்துரைத்தேன்.
நான் விவரித்ததை கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், அந்தநிமிடமே துறை உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
இந்த இரண்டு மாவட்ட கிராம பொது மக்களின் கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆட்சியில், அறநிலையத் துறை சார்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நேரில் வந்து உறுதியளித்த அண்ணன் மாண்புமிகு அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்களின் பெருந்தன்மையான நடவடிக்கை என் மனதில் பெரும் மகிழ்வைத் தந்தது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அமைச்சர் உடனான இந்தச் சந்திப்பின்போது திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பூவை. மு.பாபு, வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சுஜீவன், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் டி. சி.இராசேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் ஜி ஆர் பி ஞானம், இராம.அழகேசன், டில்லிபாபு, பாபா ஜெகன், மாவட்ட துணைச் செயலாளர் தனஞ்செயன், ஊராட்சி மன்றத் தலைவர் கைலாசம், வைகோ தாசன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீசன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி ,டெல்லி, பிரபாகர் முரளி, பலராமன் சுதர்சனம், கிரி அருள்செல்வம், தேவ ராஜி, பிஜேபி ரவி, சவுத்திரி, ரமேஷ், ரகு, சந்திரசேகர், கோபி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.06.2022.

No comments:

Post a Comment