Sunday, June 12, 2022

கர்நாடக அரசின் வஞ்சக திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு துணை போக கூடாது!துரை வைகோ!

காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனையில் நடுவர் மன்றம் பிப்ரவரி-5,2007 இல் அளித்த இறுதி தீர்ப்பு, உச்சநீதிமன்றம் பிப்ரவரி16,2018 வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை அலட்சியப்படுத்தி

வரும் கர்நாடக மாநில அரசு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று துடிக்கிறது.
கடந்த மார்ச்சு மாதம் கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் படுவதாக அறிவித்தார்.
இதனை அடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மார்ச்சு-21 ஆம் தேதி மேகேதாட்டுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும்,ஒன்றிய அரசு மேகேதாட்டு அணைக் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஜூன் 17 ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசின் வரைவுத் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக
அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்டக் கூடாது என்று காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலும்,உச்சநீதிமன்ற உத்தரவிலும் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைத் திட்டம் பற்றி ஆராய்வது உச்சநீதிமன்றத் தீர்ப்பை காலில் போட்டு் மிதிப்பதாகும்.
கர்நாடக அரசின் வஞ்சக திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு துணை போக கூடாது .
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
12.06.2022

No comments:

Post a Comment