Tuesday, June 28, 2022

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 28.06.2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதுபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு::

தீர்மானம் எண். 1: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு நடத்தி அண்ணா அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநாடு நடத்த இயலாத சூழலில், வரும் செப்டம்பர் 15 இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114ஆவது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாள் விழாவை கழகக் கொடியேற்றியும், பேரறிஞர் அண்ணா திருஉருவப் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 2: இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் ஜூலை மாதம் 25 ஆம் தேதி பதவியேற்க வேண்டும்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஜூன் 9 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4033 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து, புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநில ஆளுநருமான திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் 21.06.2022 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அவர்கள் டெல்லியில் கூட்டிய கூட்டத்தில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு யஷ்வந்த் சின்கா அவர்களை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்கட்சிகளின் சார்பில் நிறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திரு யஷ்வந்த் சின்கா அவர்கள் ஜூன் 27 ஆம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க திரு யஷ்வந்த் சின்கா அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண். 3: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவின் தீர்மானத்தின்படி, கழக உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் நடத்த வேண்டிய சூழலில் உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர் படிவங்களை உரிய தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 4: காவிரிநீர் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பு மற்றும் காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்தத் தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக மாநில அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் தீட்டியுள்ள கர்நாடக அரசு, நடப்பு 2022-23 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில், மேகேதாட்டு அணைக் கட்டுமானத்திற்கு ரூ.1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநில சட்டமன்றத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின்படி, தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது.

ஆனால் கர்நாடக மாநில அரசு, மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று கொக்கரிக்கிறது. இந்நிலையில்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஜூன் 17 ஆம் நாள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் மேட்டூர் அணை, கல்லணை ஆகிய காவிரி பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தனர். கல்லணையில் காவிரி படுகைப் பகுதிகளைப் பார்வையிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், டெல்லியில் நடைபெறும் ஆணையத்தின் கூட்டத்தில் மேகேதாட்டு அணை பற்றி விவாதிப்போம். அதற்கு ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். உடனடியாக ஜூன் 18 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கர்நாடகா மாநிலத்திற்குச் சார்பாக நடந்துகொள்வதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு கர்நாடக மாநிலத்தின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு டில்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தைச் சந்தித்தது.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகம் மேகேதாட்டு அணை கட்டக் கூடாது என்றும் வலியுறுத்தி கோரிக்கை மனுவும் ஒன்றிய அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் அணை கட்ட முடியாது என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறி உள்ளார்,

இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று மதிமுக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 5: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், இராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான ‘அக்னி பாதை’ திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இந்திய இராணுவத்தில் 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்த இராணுவ வீரர்களாக பணிபுரிய சேர்க்கப்படுவார்கள். 4 ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடிந்ததும் ரூ.11 இலட்சம் முதல் 12 இலட்சம் வரையிலான தொகையுடன் ஓய்வூதியம் இன்றி வெளியேற்றப்படுவர்.

தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தி, பின்னர் தூக்கி வீசுவதைப் போல, இந்திய இராணுவத்திலும் இளம் வீரர்களை ஒப்பந்தப் பணியாளர்களாகச் சேர்த்து, 4 ஆண்டுகளில் தூக்கி எறிவது மிக மோசமான திட்டமாகும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னி பாதை’ திட்டத்தை எதிர்த்து பீகார், ஜார்கண்ட், உ.பி., இராஜஸ்தான், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எரிதழல் ஏந்தி போராட்டக் களத்தில் குதித்து உள்ளனர். தமிழ்நாட்டிலும் அமைதி வழி அறப்போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நாட்டு இளைஞர்களின் கொந்தளிப்பைப் புறந்தள்ளிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, அறிவிக்கப்பட்ட ‘அக்னி பாதை’ திட்டத்தின்படி, ஜூலை மாதத்தில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

‘இந்திய இராணுவத்தை காவிமயமாக்கு’ என்று ஆர்.எஸ்.எஸ். முழங்கி வருவதற்குச் செயல் வடிவம் கொடுக்க பா.ஜ.க. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது. சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட் படையாக, காவிப் படையாக இந்திய இராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், ‘அக்னி பாதை’ திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 6: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகளிலும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமித்து வைக்க, அணுஉலைக்கு அப்பால் (Away From Reactor -AFR) சேமிப்புக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கோட்போலே செய்தியாளர்களிடம் கூறியதாக நாளேடுகளில் தகவல் வெளியாகி இருக்கிறது. (இந்து தமிழ் திசை ஜூன் 17, 2022)

கூடங்குளம்அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகம் அமைவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக 2019 ஜூலை 10 ஆம் நாள், நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இரத்து செய்யப்பட்டது.

பிரதமர் அலுவலக மற்றும் அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கூடங்குளத்தில் வெளியாகும் அணுக்கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அந்த வளாகத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்து, பின்னர் மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அணுஉலைக்கு அப்பால் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பது அபாயகரமான விளைவுகளை உருவாக்கும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 18, 2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கூடங்குளத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு அமைப்பதை கைவிட வேண்டும் என்றும், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது கூடங்குளம் அணுஉலை வளாகத்தினுள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம் அமைக்க இந்திய அணுசக்திக் கழகம் திட்டமிட்டு வருவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் கூறி உள்ளார்.

கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 7: கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பருத்தி நூல் விலை ஒரு கிலோ ரூ. 125 ஆகும். நூல் விலை தாறுமாறாக உயர்ந்து தற்போது ரூ. 480 ஆக ஏற்றம் கண்டுள்ளது. நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளித் தொழில் முடங்கி உள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே ஒன்றிய அரசு பருத்திப் பதுக்கலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை இரத்து செய்து, உள்நாட்டு உற்பதிக்குப் பயன்படுத்த வேண்டும். நூல் இறக்குமதிக்கான வரியை இரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள் மே 16, 17, 2022 இல் இரு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் நூல்விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். கடந்த மே 19, 2022 அன்று ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலைத் தொடர்புகொண்டு, நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருப்பூர் பின்னாடைத் தொழில் மற்றும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கின்றன, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகி இருக்கிறது என்பதைத் தெரிவித்து நூல் விலை உயர்வைத் தடுக்கக் கோரினார்.

ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாராமுகம் காரணமாக நூல் விலையேற்றத்தால் ஜவுளித் தொழில் முற்றிலும் நிலைகுலைந்து வருகிறது. நூல் விலை உயர்வைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நூல் விலையை குறைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 8: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன்-20 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 90.7 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் மாணவர்களும், கணிதப் பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

10 ஆம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தை எழுதிய 5.16 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிபெறவில்லை.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இதனை முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருப்பின் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக நடத்தப்படும் 1466 பள்ளிகளில், ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அப்பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்காமல், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், நலத்துறை தாசில்தார் மேலாண்மையில் இயங்கி வருகின்றன.

இப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் மற்ற அரசுப் பள்ளிகளைவிட பல விழுக்காடு புள்ளிகள் குறைவாக உள்ளன. இதற்குக் காரணம், பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் மலைப்பகுதிகளில் செயல்படும் பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை சரிவர இல்லை என்று தெரிகிறது.

இதுபோன்ற தனிப் பள்ளிகள் சிறப்பு கவனம், தனி நிதி ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடுகளை உறுதி செய்யும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டிருந்தாலும், அவை சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு, பின்தங்கிய குழந்தைகளுக்கு பயன்தராத நிலை இருப்பது வேதனைக்குரியது. எனவே தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண். 9: மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி சார்பில், கழக கொள்கைவிளக்க பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.06.2022

No comments:

Post a Comment