Saturday, July 4, 2015
தொண்டனுக்காக வருந்தும் ஒரே தலைவன் வைகோ!
குமாரபாளையம் நகர செயலாளர் சிவகுமார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தொண்டரணி முசிறி ரவி அவர்கள் சொன்ன வுடன் தலைவர் வைகோ மிகவும் கவலைப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் முதல்வரை கைப்பேசியில் தொடர்பு கொண்டு தகுந்த சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்... பின்பு அவரது குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்து விரைவில் நலம் பெறுவார் எனவும் மனிதநேயத்துடன் பேசினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
தாயகத்தில் காலை ஜி ராமகிருஸ்ணன் வைகோ சந்தித்தனர்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை இன்று காலை சந்தித்து பேசினார். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத் தில் காலை 11 மணி முதல் 12 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
திரு. ஜி.ராமகிருஸ்ணன் மற்றும் திரு.ரங்கராஜன் அவர்களை ஜீவன் மற்றும் தென்றல் நிசார் ஆகியோர் வரவேற்று தாயகத்தினுள் அழைத்து சென்றனர். பின்னர் தலைவர்கள் பேசிகொண்டனர். அப்போது perfection என்றால் அது நீங்கள்தான் என்று தலைவர் வைகோவை பார்த்து மார்க்சிஸட் ரங்கராஜன் தெரிவித்துகொண்டார். அதே போல், என்ன ஞானம்... நீங்களே ராமானுஜர் தொடரை எடுக்கலாம் என திரு.சத்யா அவர்களை பார்த்து பாராட்டினார் திரு.ரங்கராஜன்.
பின்னர் செய்தியாளர்களை தலைவர்கள் சந்தித்தனர். அப்போது...
காங்கரசிலிருந்து மாறுபட்டது அல்ல பாஜக. இந்துத்வா வகுப்பு வாத சக்திகளை புகுத்துகிறது. ஊழல் போக்கு, நில அபகரிப்பு சட்டம் போன்ற பிரச்சினை களுக்காக பேசினோம். மத்திய மாநில அரசுகளை கண்டித்து மதிமுக மார்க்சிஸ்ட் இணைந்து செயல்படும். மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணைகிறோம். வைகுண்ட அணை தொடர்பாக மதிமுக எடுத்த முயற்சி யை பாராட்டுகிறோம். மத்திய, மாநில அரசுகளின் ஊழலுக்கு எதிராக கூட்டு குழு இயக்கம் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்களை சந்தித்து இதற்கு ஆதரவு கேட்டு வருகி றேன். முதலில் வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டேன். அவர் இந்த கருத்தில் உடன்பாடு இருப்பதாக கூறி ஆதரவு தெரிவித்துள்ளார். .சட்டமன்ற தேர்தல் பிரச்சினை இப்போது எழவில்லை என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மக்கள் பிரச்னைகள் முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் தலைவர்களை சந்தித்தோம். சந்திக்க முடியாத ஒரே முதல்வர் ஜெயல்லிதா தான். ஊழல் செய்து இலவசங்களை வழங்குகிறார்கள் மாநில அரசு. வன்முறைசம்பவங்கள். நாள்தோறும் படுகொலை கள். அதிமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள்.ஆர் கே நகரில் 55% வாக்குப்பதிவு தான் ஆனது. செப்.2ஆம் தேதி நடக்கும் வேலைநிறுத்தத்தில் MLF பங்கேற்கும். 20 தமிழர்கள் அக்கிரமமாக படுகொலை செய்யப்பட்டனர்.இதில் CBI விசாரணை தள்ளி போவது நியாயமற்றது.சந்திரபாபு நாயுடு அரசுக்ககு தமிழக அரசு துணை போகிறது. ஏர்போர்ட் வரை மெட்ரோ ரெயில் வந்தவுடன் நான் பயணிக்கிறேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.
பின்னர் தாயகத்துக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் துணை பொது செயலாளர் அண்ணன் சத்யா மற்றும் காஞ்சி , திருவள்ளூர், தர்மபுரி,வடசென்னை,மத்திய சென்னை மாவட்ட செயலாளர்களையும், தோழர் விஜய் அசோகன் அவர்களையும் அறிமுகபடுத்தி வைத்தார். தன் தொண்டனை வருகை தரும் மற்ற கட்சி தலைவர்களிடையே அறிமுகப் படுத்தும் அரசியல் நாகரீகத்தின் சிகரம் தமிழின முதல்வர் வைகோ என் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், வழக்கம் போல தலைவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார் தலைவர் வைகோ....
செய்தி, புகைபட சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
Friday, July 3, 2015
தமிழக அரசுக்கு பெரம்பலூர் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் "தே.தமிழருண் "கண்டனம்!
முல்லை பெரியாருக்கு விடுதலைபுலிகளால் ஆபத்து என கூறிய தமிழக அரசை கண்டித்து பெரம்பலூர் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் தே.தமிழருண் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இனத்திற்கு தமிழக அரசு எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது என்பதை உலகம் அறியும்... தமிழினத்தின் பாதுகாவலன் மேதகு பிரபாகரன் அவா்களும், அவா் இயக்கிய போா்ப்படை விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ் மண்ணில் இருந்த வரை ஒருப்பய தமிழனை சீண்ட முடியல.....
அப்படிப்பட்ட தலைவன் இயக்கிய அமைப்பால், தமிழக விவசாயிகளி்ன் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற முல்லைப் பொியாரு அணைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஆபத்து என்று தமிழக அரசு கூறுவது நகைப்புக்கு உள்ளாகிறது....
தமிழினத்தின் கடவுளாக பிரபாகரன் இருக்கிறாா்... தமிழினத்தின் காவல் தெய்வங்களாக அவாின் புலிப்படை இருந்திருக்கிறது....
தமிழக அரசே!
தமிழினத்திற்கு உங்களால் தான் அழிவு வரும்.... விடுதலைப்புலிகளால் அல்ல.... தமிழ் மக்களின் தலையாாியாக தலைவா் வைகோ இருக்கும் வரை எந்த பயலும் தமிழன அழிச்சி சுகம் காண முடியாது... விடுதலைப்புலிகளால் அணைக்கு ஆபத்து என்று கூறும் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை தலைவா் வைகோவின் வழி நின்று வன்மையாக கண்டிக்கிறேன் என தனது அறிக்கையில் தே.தமிழருண் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
ஜூலை 7 மதுரையில் முல்லைப் பெரியார் பிரச்சினையில் தமிழக அரசின் துரோகத்திற்கு ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! வைகோ அறிவிப்பு!
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகத் திகழும் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்; 1979 க்கு முன்னர் இருந்ததுபோல, 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கப்பட வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக அர்ப்பணிப்போடு போராடி வரும் இயக்கம் எங்களின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும். பென்னி குயிக் கட்டிய அணையை எப்படியும் உடைத்துத் தகர்க்க, கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்தது, நீதிக்குப் புறம்பானது, தென்தமிழ்நாட்டுக்குத் தீங்கானது என்று, பேரணி, உண்ணாவிரத அறப்போர்கள், பொதுக்கூட்டங்கள், நடைபயணங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திப் போராடி வருகிறோம்.
கேரள அரசியல் கட்சிகளால் அணைக்கு ஆபத்து இருக்கிறது என்பதால், கேரளக் காவல்துறையின் பாதுகாப்பை அணையில் இருந்து அகற்றி விட்டு, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என, அன்றைய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அவர்களிடம் நேரடியாக வாதிட்டவன் நான். முல்லைப் பெரியாறு அணையில் மத்திய அரசின் பாதுகாப்புப் படையைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது.
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, வழக்கம்போல தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.
இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலம் பேரிடியாகத் தமிழர்கள் தலையில் விழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் பொது நிறுவனங்களுக்கு, தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் முல்லைப்பெரியாறு போன்ற நீர்த்தேக்கங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று மத்திய அரசின் உள்துறை தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஈழத்தமிழர்களுக்குக் கேடு செய்யவும், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும், மத்திய அரசின் வெளிவிவகாரத் துறையும், உளவுத்துறையும் விடுதலைப்புலிகளின் மீது பொய்யான அபாண்டமான புகார்களைக் கூறி புலிகள் அமைப்புக்குத் தடையை நீட்டித்துக் கொண்டு வருகின்றது.
இந்தப் பின்னணியில் தற்போது தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து ஏற்படும் என்பதால், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைப் கோருவதாகத் தெரிவித்து இருப்பது அக்கிரமம் ஆகும்.
கேரள அரசும், கேரள அரசியல் கட்சிகளும் பென்னி குயிக் அணையை உடைக்கக் கழுகு போலக் காத்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக அரசே இப்படி உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்து இருப்பதால், கேரள அரசியல் கட்சிகளே அணையை உடைத்து விட்டு, நக்சலைட்டுகள் மீதும் தீவிரவாத அமைப்புகள் மீதும், ஏன் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதும் பழிசுமத்தி விட்டுத் தப்பித்துக் கொள்ளும் வழியைத் தமிழக அரசே ஏற்படுத்திக் கொடுப்பது மன்னிக்க முடியாத செயல் ஆகும்.
அறியாமல் செய்து விட்டோம் என்று கூறித் தப்பிக்க முடியாது. அண்ணா தி.மு.க. அரசின் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் கண்சாடை இன்றி, அணுவும் அசையாது என்பது அனைவரும் அறிந்த செய்தி ஆகும். வாயைத் திறந்து கொட்டாவி விடுவதற்கும் அஞ்சி நடுங்குகின்ற நிலையில்தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கின்றார்கள். நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்ற பிரமாண வாக்குமூலங்கள், அமைச்சர்கள் வெளியிடுகின்ற அறிக்கைகளின் ஒவ்வொரு எழுத்தும், முதல் அமைச்சரின் அனுமதியோடுதான் வழங்கப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று, தீர்ப்பு ஆயத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து நான் போராடி வருகிறேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நான் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான வழக்கு, இன்னமும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.
நாங்கள் விடுதலைப்புலிகளை என்றைக்கும் ஆதரிக்கின்ற இயக்கம் என்று பொடா நீதிமன்றத்திலேயே அறிவித்தவன் நான். முல்லைப்பெரியாறு அணைக்குக் கேடு விளைவிக்கும் விதத்தில், கேரளத்தின் சதிச்செயலுக்குத் துணைபோகும் விதத்தில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்த அண்ணா தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கின்ற வகையில், ஜூலை 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை மதுரை மாநகரில் எனது தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்ட அறப்போர் நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் உணர்வாளர்களும், கழகக் கண்மணிகளும் இந்த அறப்போரில் பங்கேற்க வேண்டுகிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
முல்லைப் பெரியாறில் மத்திய அரசின் வஞ்சகம்! வைகோ கண்டனம்!
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொள்ள, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அனுமதி வழங்கி இருக்கிறது. “முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, தாம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, “அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயரம் வரையிலும் உயர்த்திக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியம் செய்தது மட்டுமின்றி, புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணிகளை கேரள அரசு நடத்தவும் வஞ்சகமான முறையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மே மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், “முல்லைப் பெரியாறு அணை பகுதியின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நியமிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. “மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரை பணியமர்த்தத் தேவையில்லை எனவும், கேரள அரசு கோரினால் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை பணியில் ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு 1970 ஆம் ஆண்டு வரையில் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பின்னர் கேரள மாநில அரசு பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் கேரள அரசின் வஞ்சக சதித்திட்டம். இதனை முன்பு இருந்த மார்க்சிÞட் கம்யூனிÞட் கட்சி கூட்டணி அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் வெளிப்படையாகவே அறிவித்தார். உம்மன் சாண்டி தலைமையிலான தற்போதைய காங்கிரÞ கூட்டணி அரசின் திட்டமும் அதுதான். கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை தலைமைப் பொறியாளர் மகானுதேவன் கடந்த மே மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள விண்ணப்பத்தில், புதிய அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு பழைய அணையை ரூபாய் 663 கோடி செலவில் செயல் இழக்கச் செய்துவிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு உரிமை படைத்த முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கேரள அரசின் நோக்கம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
2006 ஆம் ஆண்டு நவம்பரில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் உளவுத்துறை (ஐ.பி.,) முல்லைப் பெரியாறு அணை மற்றும் நீர்மின் திட்ட பாதுகாப்பு தொடர்பான பதினோறு பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது. அதில் எட்டாவது பரிந்துரையில், “கேரள காவல்துறை, முல்லைப் பெரியாறில் இருந்து அகற்றப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற மத்திய காவல்துறை அல்லது தொழிலகப் பாதுகாப்புப் படையை அங்கு நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தது.
உளவுத்துறையின் இந்தப் பரிந்துரையின்படி, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்தாமல், கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது. கேரள அரசு கோரினால் மத்திய காவல்படை நிறுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தற்போது கூறியிருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய காவல்படை வேண்டும் என்று கேரள அரசு ஒருபோதும் கேட்கப்போவது இல்லை. ஏனெனில், தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். கேரள அரசின் இந்த வஞ்சகத் திட்டத்துக்கு துணை போகும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என வைகோ கூறியுள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
Thursday, July 2, 2015
கருமத்தம்பட்டி பேரூராட்சி அத்துமீறலை கண்டித்து மதிமுக மாபெரும் தர்ணா!
கோவைமாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சோமனூர-கரவளிமாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடிகால் வாய்க்காலை தன் சுயலாபத்திற்காக ஆக்கிரமித்து, சாலை போட்டு, அதன் மூலம் தான் போட்ட வீட்டுமனைகளை விற்க திட்டம் தீட்டியுள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சியை கண்டித்து சமூக ஆர்வலர்களின் மாபெரும் தர்ணா!!!
சோமனூர்-மாதப்பூர் பஞ்சாயத்து இராமாச்சியம் பாளையம் வாய்க்கால் அருகே 3.07.15 நாளை காலை10 மணி அளவில் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த அறப்போராட்டத்தை மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வைகோவின் வலது கரம் அண்ணன் திரு.வே.ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க மாநில பொது குழு உறுப்பினர் ஏ.கே.தங்கவேலு முன்னிலை வகிக்கிறார்.
ம.தி.மு.க சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சு.ஆனந்த குமார் அவர்கள், மற்றும் தா.மா.க மாநில பொது குழு உறுப்பினர் எஸ்.கே.பாலகுமார், சமூக ஆர்வலர் தம்பி.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய பங்காற்றுகின்றனர்.
எனவே நீதியை நிலைநாட்ட, வாய்க்கால் ஓரம் குடியிருக்கும் அப்பாவி மக்களை காத்திட... கழகத்தின் கண்மணிகளே, பொதுமக்களே!!! அனைவரும் வாரீர்!!! ஆதரவு தாரீர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார தாமதத்திற்கு 06.07.15 அன்று , நானே தூர் வாருவேன் என்று வைகோ அறிவித்ததால் அவசர கதியில், அரசு எந்திரம் செயல்பட துவங்கியது..... விவசாயிகள் மகிழ்ச்சி..... இன்றைய (01.07.15) தினகரன்,. தினத்தந்தி. தி இந்து, தினமணி, தினமலர். இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து செய்தித் தாள்களும் மிகவும் விரிவாகவே செய்தி வெளியிட்டுள்ளது
ஆக ஓன்று தெளிவாகிறது.... அரசாங்கம் செயல்படவில்லை.....
நீதி துறையின் மூலமே அரசை , "வேலை" வாங்க வேண்டி உள்ளது.....
மதிமுக இணையதள அணி - ஓமன்
21.06.2008 அன்று "ஈழத்தில் நடப்பது என்ன? சாட்சி ஆஐராகவில்லை!
21.06.2008 அன்று "ஈழத்தில் நடப்பது என்ன? " என்ற கருத்தரங்கில் இராஜா அண்ணாமலை மன்றத்தில் பேசியதற்காக அன்றைய அரசால் தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று அரசாங்க சாட்சி ஆஐராகவில்லை.
அதனால் இந்த வழக்கு வருகின்ற Jul 21 அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 1, 2015
திருவைகுண்டம் அணை தூர் வாரும் பணி போர்க்கால வேகத்தில் நடக்க வேண்டும் தீர்ப்பு ஆயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! வைகோ வாதத்தை ஏற்று, பசுமைத் தீர்ப்பு ஆயம் ஆணை!
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள அணையில், தூர் வாரக் கோரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடுத்த பொதுநல வழக்கு இன்று (1.7.2015) விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.
தீர்ப்பு ஆயத்தின் நீதியரசர் ஜோதிமணி அவர்கள், ‘Þடெர்லைட் வழக்கில் நீங்கள் மிகச் சிறப்பாக வாதாடியதாக நான் கேள்விப்பட்டேன். இப்பொழுது அந்த வழக்கு என்ன நிலையில் இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்றார் வைகோ. தொடர்ந்து, திருவைகுண்டம் அணையில் தூர் வாரக் கோரி வைகோ முன்வைத்த வாதம்:
நீதிபதி அவர்களே,
திருவைகுண்டம் அணை 1870 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. இதன் மூலம் 25,560 ஏக்கர் நஞ்சை நிலம் பாசன வசதி பெறுகின்றது. இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களை வாழ வைக்கின்றது. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்குகிறது. ஆனால், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இந்த அணையில் தூர் வாரப்படாமல் வேலிக்காத்தானும், அமலிச் செடியும் வளர்ந்து, மண்ணும் மணலும் குவிந்து, எட்டு அடி உயரம் தேங்கி நிற்க வேண்டிய தண்ணீர், இன்று ஒரு அடி உயரத்திற்கு மட்டுமே தேங்குகிறது. இதனால், ஆண்டுதோறும் 20 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறது.
முப்போகம் விவசாயம் செய்த விவசாயிகள், தற்போது ஒருபோக அறுவடையே செய்கின்றனர். எனவே, இந்த அணையில் உடடினயாகத் தூர் வாருவதற்குத் தீர்ப்பு ஆயம் ஆணையிட வேண்டும் என்று, ஏப்ரல் மாதம் வழக்கறிஞர் ஜோயல் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். மே மாதத்தில் மூன்று அமர்வுகள் நடைபெற்றபோது, பருவமழை தொடங்குவதற்கு முன்பே அணையில் தூர் வார தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் தூர் வாருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று தமிழக அரசு கூறியது. அதனால், ஜூன் 5 ஆம் தேதியன்று புது தில்லியில் நடைபெற்ற தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், மத்திய அரசு ஜூன் 10 ஆம் தேதிக்குள் தூர் வாருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்கத் தவறினால், ஜூன் 11 ஆம் தேதியன்று, தமிழக அரசு திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் நீங்கள் திட்டவட்டமான தீர்ப்புத் தந்தீர்கள்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டதாகவே கருதினார்கள். நீங்கள் ஆணையிட்டவாறே ஜூன் 10 ஆம் தேதி திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதை நான் பாராட்டுகிறேன்.
மறுநாள் ஜூன் 11 ஆம் தேதி தமிழக அரசு தூர் வாரும் பணிகளைத் தொடங்கும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு பணிகளைத் தொடங்கவே இல்லை.
11 நாள்கள் கழித்து ஜூன் 22 ஆம் தேதியன்று , வழக்கறிஞர் ஜோயல் அவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தீர்ப்பு ஆயத்தின் ஆணையைச் சுட்டிக்காட்டி தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும் என எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்தனர்.
‘தமிழ்நாடு அரசு ஆணையிட்ட பிறகே தூர் வாரும் பணிகளைத் தொடங்குவோம்’ என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். ஜூன் 28 ஆம் தேதியன்று, நான் திருவைகுண்டம் சென்று, விவசாயிகளை உடன் அழைத்துக் கொண்டு அணையைப் பார்வையிட்டேன்.
‘தமிழக அரசு பணிகளைத் தொடங்குவதாகத் தெரியவில்லை என்பதாலும், பருவமழை தீவிரம் அடைந்து விட்டால், மழையையும், வெள்ளத்தையும் காரணமாகக் காட்டி தமிழக அரசு தூர் வாரும் பணிகளைச் செய்யாது என்பதையும் கருதி, ஜூலை ஐந்தாம் தேதிக்குள் தூர் வாரும் பணியைத் தமிழக அரசு தொடங்காவிடில், வீட்டுக்கு ஒரு விவசாயி எனப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு, கடப்பாறை, மண்வெட்டி, இரும்புச் சட்டி, அரிவாள் கருவிகளோடும் ஜேசிபி பொக்லைன் போன்ற இயந்திரங்களோடும், பொதுமக்களாகிய நாங்களே அணையைத் தூர் வாருவோம்; காவல் துறைக்கோ அடக்குமுறைக்கோ நாங்கள் பின்வாங்க மாட்டோம்’ என்று அறிவித்தேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தேன்.
நீங்கள் ஜூன் 5 ஆம் தேதி தந்த தீர்ப்பு ஆய ஆணையில், பருவமழை தொடங்குவதற்குமுன், தூர் வாரும் பணி வேகமாகச் செய்ய வேண்டும்; ஒருநாள் கூடத் தாமதிக்கக் கூடாது என்றதுடன், இதுகுறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ஜூலை ஒன்றாம் தேதியாகிய இன்று தீர்ப்பு ஆயத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று, அழுத்தந் திருத்தமாக ஆணை தந்தீர்கள்.
ஒருபக்கத்தில் நான் அறிவித்த போராட்டம்; மற்றொருபுறத்தில் உங்கள் தீர்ப்பு.
இந்தப் பின்னணியில்தான் நேற்று மதியம், தமிழக அரசுக்குப் புதிய ஞானோதயம் ஏற்பட்டு இருக்கின்றது. டெண்டர் ஏற்பாடு கூடச் செய்யாமல், தூர் வாரும் வேலைக்குப் பூசை போட்டுத் தொடங்கி விட்டதாகக் கூறி உள்ளனர்.
நீதிபதி அவர்களே, இது தீர்ப்பு ஆயத்தையும், மக்களையும் ஏமாற்றுகின்ற கண் துடைப்பு வேலையாக இருக்கக் கூடும். எனவே, போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் வேலையைத் தமிழக அரசின் பொதுப்பணித் துறை வேகமாகச் செய்ய வேண்டும்; மழை வெள்ளத்தைக் காரணம் காட்டித் தாமதிக்கக் கூடாது; மழையும் வெள்ளமும் ஏற்பட்டாலும் அதற்கு மத்தியிலும் தூர் வாரும் பணிகளைச் செய்வதற்கு உரிய நவீன இயந்திரங்களும் கருவிகளும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திச் செய்யலாம்.
இந்தப் பொதுநல வழக்கில் விவசாயிகளுக்காக ஜோயல் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் நடராசன் அவர்கள், இந்தப் பிரச்சினை குறித்து நல்ல ஆதாரங்களை இம்மன்றத்தில் தந்து இருக்கின்றார். மற்றொரு செய்தி யாதெனில், இந்தத் திருவைகுண்டம் அணை மீது ஒரு பாலம் கட்டப்பட்டு, 1941 மார்ச் 15 இல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது. அதைத் திறந்து வைத்தவர் அப்பொழுது திருநெல்வேலி ஜில்லா போர்டுத் தலைவராக இருந்த என்னுடைய பாட்டனார் கோபால நாயக்கர் ஆவார்.
இந்தத் தீர்ப்பு ஆயம் வழங்கி இருக்கின்ற ஆணை, தூத்துக்குடி மாவட்டப் பாசன விவசாயிகளுக்கு அருட்கொடை ஆகும். விவசாயிகளும், பொதுமக்களும் தீர்ப்பு ஆயத்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். திருவைகுண்டத்தில் நடைபெறும் தூர் வாரும் பணி குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை இந்தத் தீர்ப்பு ஆயத்தில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்யுமாறும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் தாங்கள் ஆணை பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் என்று வைகோ வாதாடினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அப்துல் சலீம், ‘இந்த வேலையைத் தொடங்குவதில் பல்வேறு நடைமுறைகள் இருப்பதால், உடனே தொடங்க முடியவில்லை. இந்தப் பணியைச் செய்து முடிக்க ஓராண்டுக் காலம் ஆகும்’ என்று கூறினார். ஆனால், நீதிபதி அதனை ஏற்கவில்லை. அவ்வளவு தாமதம் செய்யக்கூடாது. உடனடியாக முடிக்க வேண்டும் என்றார்.
உடனே வைகோ, சில மணி நேரத்தில் பூசை போட முடிந்த சர்க்கார், இருபது நாள்களாக ஏன் செயல்படவில்லை? என்று கேட்டார்.
அதன்பின்னர் நீதிபதி அவர்கள், தமிழகத்தின் அணைக்கட்டுகள், குளங்களில் தூர் வாரும் பணி நடக்காமல் இருப்பது வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பைத் தருகிறது என்பதால், தமிழ்நாடடில் உள்ள அத்தனை நீர்த்தேக்கங்கள், நீர்நிலைகளிலும் உடடினயாகத் தூர் வாரும் பணிகளைத் தமிழக அரசுமேற்கொள்ள வேண்டும் என்றும், அப்படிச் செய்யப்படும வேலைகள் குறித்து, தீர்ப்பு ஆயத்திற்கு அறிக்கை தர வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.
மேலும், இந்தப் பிரச்சினையில் பொதுமக்கள் நலனுக்காக வைகோ மிகவும் அக்கறையோடு செயல்பட்டு இருக்கின்றார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே அவரது பாட்டனார் அணைப் பாலத்தைத் திறந்து வைத்து இருக்கின்றார்’ என்பதையும் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டி உள்ளார்.
இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பாக வழக்கறிஞர் சங்கமித்திரை ஆஜரானார். வைகோ அவர்களுடன் ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ஜோயல், வழக்கறிஞர் செந்தில்செல்வன், வழக்கறிஞர் தங்கவேலு, ஆகியோர் பங்கேற்றனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
Subscribe to:
Posts (Atom)


















































