முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொள்ள, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அனுமதி வழங்கி இருக்கிறது. “முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, தாம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு, “அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயரம் வரையிலும் உயர்த்திக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியம் செய்தது மட்டுமின்றி, புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணிகளை கேரள அரசு நடத்தவும் வஞ்சகமான முறையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மே மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், “முல்லைப் பெரியாறு அணை பகுதியின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நியமிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. “மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரை பணியமர்த்தத் தேவையில்லை எனவும், கேரள அரசு கோரினால் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை பணியில் ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு 1970 ஆம் ஆண்டு வரையில் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பின்னர் கேரள மாநில அரசு பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் கேரள அரசின் வஞ்சக சதித்திட்டம். இதனை முன்பு இருந்த மார்க்சிÞட் கம்யூனிÞட் கட்சி கூட்டணி அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் வெளிப்படையாகவே அறிவித்தார். உம்மன் சாண்டி தலைமையிலான தற்போதைய காங்கிரÞ கூட்டணி அரசின் திட்டமும் அதுதான். கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை தலைமைப் பொறியாளர் மகானுதேவன் கடந்த மே மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள விண்ணப்பத்தில், புதிய அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு பழைய அணையை ரூபாய் 663 கோடி செலவில் செயல் இழக்கச் செய்துவிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு உரிமை படைத்த முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கேரள அரசின் நோக்கம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
2006 ஆம் ஆண்டு நவம்பரில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் உளவுத்துறை (ஐ.பி.,) முல்லைப் பெரியாறு அணை மற்றும் நீர்மின் திட்ட பாதுகாப்பு தொடர்பான பதினோறு பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது. அதில் எட்டாவது பரிந்துரையில், “கேரள காவல்துறை, முல்லைப் பெரியாறில் இருந்து அகற்றப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற மத்திய காவல்துறை அல்லது தொழிலகப் பாதுகாப்புப் படையை அங்கு நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தது.
உளவுத்துறையின் இந்தப் பரிந்துரையின்படி, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்தாமல், கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது. கேரள அரசு கோரினால் மத்திய காவல்படை நிறுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தற்போது கூறியிருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய காவல்படை வேண்டும் என்று கேரள அரசு ஒருபோதும் கேட்கப்போவது இல்லை. ஏனெனில், தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். கேரள அரசின் இந்த வஞ்சகத் திட்டத்துக்கு துணை போகும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என வைகோ கூறியுள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment