ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரண்களுள் ஒன்றுதான் செய்தி ஊடகத்துறை ஆகும். பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான நரேந்திர மோடி அரசு, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கின்ற விதத்தில், கருத்து உரிமையை நசுக்கிடப் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக முனைந்து செயல்படுகிறது. எனவேதான், ‘நெருக்கடி நிலையின் நிழல் படரக் கூடும்’ என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்....கே. அத்வானி அவர்களே அபாய அறிவிப்புச் செய்தார்.
உலகம் முழுமையும் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ள சன் தொலைக்காட்சிக் குழுமத்தை முடக்குகின்ற அக்கிரமமான வேலையில் மத்திய அரசு ஈடுபடுகின்றது. ‘மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, சன் தொலைக்காட்சிக்குப் பாதுகாப்பு அனுமதி (Security Clearance) வழங்கிட உள்துறை அமைச்சகம் மறுத்து இருப்பது, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல’ இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்த பின்னரும், மத்திய அரசு சன் குழுமத் தொலைக்காட்சிகளை முடக்க முற்படுவது பாசிச, எதேச்சதிகார நடவடிக்கை ஆகும். அது மட்டும் அல்லாமல், எஃப் எம் ரேடியோ ஏலத்தில் இருந்து சன் குழுமத்தை விலக்கி வைப்பதும், மோடி அரசின் கொடுங்கோல் தர்பாருக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.
இத்தகைய போக்குக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.
‘சன் டி.வி.க்குத்தானே பாதிப்பு; நமக்கென்ன?’ என்ற எண்ணம் அரசியல் நோக்கத்தில் ஏற்படுமானால், எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி ஒவ்வொன்றாக நசுக்கி மோடி அரசு கபளீகரம் செய்து விடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த சர்வாதிகாரப் போக்கினை முளையிலேயே கிள்ளி எறியாவிடில், அது விஷ விருட்சமாக வளர்ந்து விடும் என்பதனை திருவள்ளுவரின்,
இளைதுஆக முள்மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து எனும் குறட்பா தெளிவுபடுத்துகிறது.
ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் நரேந்திர மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் என தனது கண்டனத்தை மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி – ஓமன்
No comments:
Post a Comment