Monday, July 27, 2015

அன்னை தமிழகத்தை அலை திரளாக அகிலமெங்கிலும் பரப்பிய அணுவை துளையிட்ட அப்துல் கலாமிற்கு கண்ணீரில் எழுதிய இரங்கற்பா!

இந்தியரை உலக உச்சாணியில் ஏற்றி வைத்து, இப்போது ஏங்க வைத்த ஏவுகணை நாயகனே உலக மக்களின் கன்ணீரிற்கு நாயகனாகிவிட்டீரே!


பட்டித்தொட்டியில் பிறந்து பாமரனாய் வீட்டில் வளர்ந்து பாகுபாடின்றி பகுத்துணர்ந்து பல கண்டங்களை கண்டதனால்தான் காவியமானீரோ?


கனவு காணுங்கள் என்று சொல்லி கொடுத்த மேதை இப்போது மேகங்களில் மறைந்து விட்டார். அவர் சொன்ன அந்த கனவிலாவது அவரை காணுவோமோ?


2020 என்று சொல்லி வல்லரசாவதற்கு முன்னரே இந்த வல்லாதிக்க ஆட்சியை கண்டு மனம் பொறுக்காமால் நீவிர் மெளனித்தது ஏனோ?


உமது திட்டங்களை இந்தியம் நிறைவேற்றுமா என்று ஏக்கத்துடனே எங்களை ஏங்க வைத்துவிட்டு ஏகலவனிடம் ஏணி படியேறி சென்றது ஏனோ?


சிறு பிள்ளை முதல் படுக்கை பாட்டி வரை உமது பெயரை உச்சரிக்க வைத்துவிட்டு, எங்கள் நாவிற்கு ஓய்வு கொடுக்க நீர் ஓய்வெடுத்தீரோ?


அன்பிற்கு இலக்கணமாய், அகிலத்தையும் ஆட்கொண்டு, எங்கள் இதயத்தை ஆக்கிரமித்து, அநாதையாய் எங்களை ஆர்ப்பரிக்க விட்டதேனோ?


அணுவை கொண்டு ஏழு கடலை தாண்டி ஏவுகணை செதுக்கிய நீவிர் சிலாங்கிலே சினம் கொண்டு ஏவுகணைகளை ஏங்க வைத்தது ஏனோ?


குழந்தைகளிடத்தில் இறைவனை கண்டு அவர்களை ஊக்கப்படுத்திய உன்னதமான நீவிர், அக்குழந்தைகளுக்காக இன்னொரு முறை வருவீரோ?


வல்லாதிக்க நாடுகளை கொலைநடுங்க வைத்து போக்ரான்-II மூலம் மூலை முடுக்கெல்லாம் செலுத்தமுடியும் எந்று நீவே ஏவுகணையானீரோ?


உலகமே உமை கண்டு வியக்கும்படி நீவிர் உருவாக்கிய உம்மை, உலக மக்களையெல்லாம் உறங்காமல் உளர வைத்ததேனோ?


அணுவை செதுக்கி சிறை பிடித்து, சிற்பமாக்கி, சீனாவை சினங்கொள்ள வைத்தவரே, எங்கள் சிந்தனைகளை சிதறவைத்ததேனோ?


மாணவர்கள் மல்லாந்து படுக்க, கனவுகளை கண்ணயராமல் காண, கற்று கொடுத்த கோமானே, எங்களை கையொடிந்த பறவைகளாக்கியதேனோ?


கற்று தந்த பாடங்கள் கலாம் பெயரை சொல்லும் போது காலம் காலமாய் கையெடுத்து கும்பிட என்னை கவிஞராய் உமக்கு கவிபாட வைத்தீரோ?


அகிலமே உம்மை போற்ற, எங்களை பொற்குவியலில் அடைத்து விட்டு, வெண்குகையில் நீவிர் தஞ்சமடைந்து தவிப்பதற்கு என்ன காரணமோ?


உலகமே உற்றுப்பார்த்த உன்னதர் உம்மை அணுவின் பெயரால் அகிலமே போற்ற ஆறடி ஆழத்தில் அமைதியாய் ஒய்வெடுக்க ஆயத்தமானீரோ?


கடல் பரந்த தேசமெங்கும் உமது கொள்கை பரவட்டும், இந்தியாவின் இறைமையை போற்றட்டும், தமிழராய் எங்களை தலை நிமிர செய்யட்டும்,


தமிழால், தமிழரால், தமிழுக்காக உமது புகழ் பெருகட்டும். உலகமே உமது நாமத்தை போற்றட்டும். புகழ்பெற்ற உம் ஆன்மா இறைவன் புகழில் சேரட்டும்.


மறுமலர்ச்சி மைக்கேல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment