இந்திய அரசியலை உலுக்கிக் கொண்டு இருக்கும் பிரச்சினையான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து, இந்திய நாடாளுமன்றம் நியமித்துள்ள நாடாளுமன்றக் கூட்டுக்குழு, பொதுமக்கள் கருத்து அறியும் கூட்டம் இன்று (23.7.2015) புது தில்லியில் மேற்கு வங்க மாநில அரசு அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ ஆற்றிய உரை:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விளைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
உழவர் உழாது கையை மடக்கி இருப்பார்களானால், விரும்பப்படும் உணவும் துறந்தோம் என்பார்க்குத் துறவு நிலையும் இல்லையாகும். இந்த உன்னதமான கருத்தைத் திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்.
நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். உதட்டு அளவில் அல்ல, விவசாய வேலைகள் அனைத்தையும் செய்யத் தெரிந்தவன். துயரத்தில் நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் நிலையை நேரில் அறிந்தவன். அவர்களின் பிரதிநிதியாகத்தான் இங்கு வந்து பேசுகிறேன்.
நிலம் கையகப்படுத்துதல் மசோதா குறித்து, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் மக்கள் கருத்து அறியும் இந்த முக்கியமான கூட்டத்தில், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சகோதரி மேதா பட்கர் அவர்களும், இந்தியாவின் பல பகுதிகளில் இருநது விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு இருக்கின்றார்கள். நீண்ட தொலைவில் உள்ள தமிழ்நாட்டில் இருந்தும் கைக்காசைச் செலவழித்துச் சிரமப்பட்டு இந்தக் கூட்டத்திற்கு வந்து இருக்கின்றார்கள்.
கோடானுகோடி மக்களின் பிரச்சினையைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சார்பில் இந்த 30 எம்.பி.க்கள் இந்தக் குழுவிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஆனால் அவர்களுள் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இங்கே வந்து இருக்கின்றார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது. நாடாளுமன்ற அலுவல்களைக் காரணம் காட்டிச் சமாதானம் கூற முடியாது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற அக்கறை அவர்களுக்கு இல்லை. ஆனால் இந்தியா முழுமையும் உள்ள மக்களும் ஏடுகளும் இந்தக் குழுவின் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் அனுபவித்து வரும் நிலங்களை அரசாங்கமே கையகப்படுத்திப் பெருந்தொழில் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கின்ற மோசமான இந்தத் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு முன்வைத்தது. அதனைச் செயல்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முனைந்துள்ளது. இதற்காகக் குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் மூன்று முறை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, மீண்டும் அவசரச் சட்டப் பிரகடனம் செய்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து, நாடெங்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் போராடுகிறார்கள். இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தலைநகர் தில்லியில் மேதா பட்கர் அம்மையார் ஏற்பாடு செய்த பேரணியில் இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஆயிரம் விவசாயிகளோடு நானும் கலந்து கொண்டேன்.
இங்கே தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் லெனின், மீத்தேன் திட்டத்தைப் பற்றிக் கூறினார். காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு குஜராத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்தது. அதை எதிர்த்துத் தமிழகத்தில் நாங்கள் கடுமையாகப் போராடினோம். மீத்தேன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அண்ணா தி.மு.க. அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் குறித்த காலத்தில் பணிகளைத் தொடங்கவில்லை என்று ஒப்பந்தத்தை ரத்துச் செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆனால் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாகச் சொல்லவில்லை. குறுக்குவழியில் மறைமுகமாக, ஓஎன்ஜிசி நிறுவனத்தைக் கொண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 35 இடங்களில் எரிவாயு எடுக்கத் திட்டமிட்டு இருக்கின்றது.
காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காகத் தோண்டப்படும் பாதாளக் குழிகளில் ஆர்சனிக் உட்பட 635 ரசாயன வேதியியல் பொருட்கள் உள்ளே செலுத்தப்படும். அதனால் நிலத்திற்கு உள்ளே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுக் கட்டடங்கள் சேதம் ஆகும். விவசாய நிலங்கள் தூர்ந்து போகும். கடல் உப்புநீர் விளைநிலங்களின் நிலத்திற்கு அடியில் புகுந்து விடும்.
இதனால் காவிரி தீர விவசாயம் பாதிக்கப்படும். மக்கள் வறுமையில் தள்ளப்படுவர். அவர்களது ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் காவிரி தீர நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கின்ற சதித்திட்டம் ஆகும்.
நேற்று பகல் 12 மணிக்கு நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தேன். ‘நிலம் கையகப்படுத்தும் திட்டத்தால் நாட்டுக்குப் பெருங்கேடு ஏற்படும்; உங்கள் அரசுக்கும் நல்லதல்ல; எனவே நீங்கள் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டபோது, என் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகப் பிரதமர் கூறினார்.
மாநிலங்கள்அவையில் பெரும்பான்மை இல்லாததால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை இந்த அரசு நிறைவேற்றுமானால், அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வெடிக்கும். கோடானுகோடி விவசாயிகளை நாங்கள் திரட்டுவோம்.
திட்டமிடப்பட்டுள்ள மசோதாவில் ஓரிரு மாற்றங்களைச் செய்வோம் என்பதையும் ஏற்க மாட்டோம். ஒட்டுமொத்தமாக இந்த மசோதாவைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ உரை ஆற்றினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment