20 அப்பாவித் தமிழர்கள் ஆந்திர மாநிலத்தின் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மேல்நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களும், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாநில ஆலோசகர் ஹென்றி திபேன் அவர்களும் கூட்டாக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அனுப்பியுள்ள அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் பின்வருமாறு...
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த இருபது அப்பாவித் தமிழர்களை ஆந்திர மாநிலக் காவல்துறையினர் பலாத்காரமாக ஆந்திரத்தின் சேசாசல வனப் பகுதிக்குக் கொண்டு சென்று கொடிய சித்ரவதைகளுக்கு ஆளாக்கி, கோரமாகச் சுட்டு படுகொலை செய்தனர்.
இந்தப் படுகொலைகளை நிரூபிக்கும் மூன்று சாட்சிகள் தந்த சாட்சியத்தின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்படுகொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அறிவித்தது. ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாக தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
எனவே, இந்தக் கடுமையான பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொள்ள சூலை 15-ஆம் தேதி (15.07.2015 புதன்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னை, எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க வேண்டுகிறோம். தவிர்க்க இயலாத அலுவல்களால் தாங்கள் கலந்து கொள்ள இயலாத நிலையில் தங்கள் இயக்கத்தின் பிரதிநிதியை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
வைகோ - பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.கழகம்.
ஹென்றி திபேன் - மாநில ஆலோசகர், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்.
கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment