தொன்மைத் தமிழ் மொழியின் மாண்பினைக் காக்கவும், தமிழர்களின் நெடிய நாகரிகம், பண்பாட்டில் அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுக்கவும், 1937 ஆம் ஆண்டு முதல் இந்தித் திணிப்பை எதிர்த்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பட்டுக்கோட்டை
அழகிரிசாமி உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கடுமையாகப் போராடினர். 1965 இல் மூண்டெழுந்த மொழிப்போரில் இலட்சக்கணக்கான மாணவர்கள் போலீசுக்கும் இராணுவத்துக்கும் அஞ்சாது வீதிகளில் இறங்கிப் போராடினர். எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தனர். கணக்கற்றோர் அடக்குமுறைக்குப்
பலியானார்கள். 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்திக்குத் தமிழகத்தில் இடம் இல்லை; தமிழும் ஆங்கிலமும் மட்டுமே’ என சட்டமன்றத்தில்
பிரகடனம் செய்தார்.
இந்நிலையில், 2015-16 ஆம் கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பக்கம் 329 (ஆங்கில வழிக் கல்வி பக்கம் 306) இல் இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பதில்களுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர். ‘இந்தி’ என்ற பதிலைத் தேர்வு செய்யுமாறு ஆசிரியர்கள் கூறி உள்ளனர். இது மிகத் தவறான வழிகாட்டுதல் ஆகும்.
இந்தக் கேள்வி தேசிய ஒருமைப்பாடு என்ற பாடப்பிரிவின் கீழ் வருகிறது. ஆனால் இப்பாடத்தில் எந்த இடத்திலும் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பாடத்தின் இறுதியில் மேற்கண்டவாறு கேள்வி கேட்டு மாணவர்களைக் குழப்பி உள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்தியாவின் தேசிய மொழி என்று எந்த மொழியும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியும், ஆங்கிலமும் அரசு இந்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே. இந்தியாவிலேயே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டது தமிழ்நாடு மட்டும்தான். பிற மாநிலங்களால் இந்தித் திணிப்பைத் தடுக்க முடியாமல் போனது. இன்று அம்மாநிலங்கள் தங்கள் சொந்த மொழிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.
இந்தியாவில் இந்தி மட்டுமே பேசப்படுகிறது என்ற மாயை, உலகம் முழுவதும் இந்திய அரசால் பரப்பப்பட்டு வருகிறது. இந்திய அரசின் இந்தப் பொய்ப் பரப்புரையை தமிழ்நாடு மட்டுமே இன்றுவரை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தமிழக மாணவர்களை நம்ப வைக்கின்ற விதத்தில், மேற்கண்ட கேள்வி இடம் பெற்று இருக்கின்றது.
இது மிகவும் கண்டனத்திற்கு உரியது. தமிழக அரசு உடனடியாக இந்தக் கேள்வியை நீக்க வேண்டும்; தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த தகவல்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி – ஓமன்
No comments:
Post a Comment