இந்திய விடுதலைக்கு போராடிய, ஈடு இணையற்ற தியாகத் தலைவரான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் புதல்வர் வாலேஸ்வரன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். செல்வ செழிப்பில் வாழ்ந்த சிதம்பரம் பிள்ளை, ஆங்கில ஆட்சியை அகற்றுவதற்காக வீரம் செறிந்த போராட்டம் நடத்தினார். தலைசிறந்த வழக்கறிஞரான வ.உ.சி. தொழிலாளர்கள் உரிமைக்காக போராடியதோடு, அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தில் அவர்களுடைய பசியைப் போக்குவதற்காக தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவழித்தார்.
திருநெல்வேலி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இரட்டை ஆயுள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் சித்ரவதைகளை அனுபவித்தார். மாடுகளை இழுக்கும் செக்கை மனிதனான இவர் இழுத்தார். பின்னர் கேரளத்தில் கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். சப் கலெக்டர் ஆஸ்துறை மணியாட்சி இரயில்வே நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அறிந்தபோது, அந்த வீரச்செயலை பாராட்டினார். சிறையில் இருந்து வெளிவந்தபோது வறுமை வாட்டியது. ஏழ்மையின் பிடியில் அவர் துன்புற்ற நாட்களில் பிறந்தவர்தான் வாலேஸ்வரன்.
அவர் சிறைக்குச் சென்றதால் அவர் வழக்கறிஞர் சன்னத்து பறிக்கப்பட்டது. வெள்ளக்காரத்துறை வாலேஸ் தூத்துக்குடியில் நீதிபதியாக இருந்தபோது அவருடன் வ.உ.சி. கொண்டிருந்த நட்பினால், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற நீதியரசர் வாலேஸ், சிதம்பரம் பிள்ளையின் சன்னத்தைத் திரும்ப வழங்க ஆணையிட்டு மீண்டும் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள வாய்ப்பளித்தார்.
அந்த நன்றியை மறக்காமல்தான் தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார். தந்தையைப் போலவே வாலேஸ்வரன் எளிமையும், நேர்மையும், வாய்மையும், அஞ்சாமையும் மிக்க உயர் பண்பாளர் ஆவார்.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற வ.உ.சி பிறந்தநாள் விழாவில் நான் சிறப்புரை ஆற்றினேன். அந்த நிகழ்ச்சியில் வாலேஸ்வரன் அவர்களும் பங்கேற்றார்கள். அவர் பேசும் போது, “என் தந்தையைப் பற்றி பலரும் அறியாத அறிய செய்திகளை வைகோ கூறினார். அவர் கலந்து கொள்வதால்தான் நானும் இங்கு வந்தேன்” என்று கூறினார்.
2005 ஆம் ஆண்டு நெல்லையில் வ.உ.சி. மணிமண்டபம் திறக்கப்பட்டபோது, தமிழக முதலமைச்சர் அவர்கள் வாலேஸ்வரன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைத்தும், மேடைக்குச் செல்லாமல் அந்த விழாவிற்கு வருவதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்த தங்குமிடம், கார் வசதியை ஏற்க மறுத்து, எனது நண்பர் குட்டி(எ)சண்முகசிதம்பரம் அவர்களின் இல்லத்தில் தங்கினார். ஒருமுறை ஒரு விழாவில் அவருக்கு வெள்ளியால் செய்த நினைவுப்பரிசு தரப்பட்டபோது அதனை அவர் ஏற்கவில்லை.
செக்கிழுத்த செம்மலின் புகழை நிலைநாட்ட அவர் எழுதி அச்சுக்கு வராத நூல்களை எல்லாம் அச்சில் ஏற்றி கொண்டு வந்த வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்கள் மீது வாலேஸ்வரன் மிகுந்த பற்று கொண்டவர் ஆனார். அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்க்கைத் துணைவியார் அலமேலு அம்மையார் அவர்களுக்கும், அவரது இரண்டு புதல்வர்களுக்கும், புதல்விக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரங்கல் அறிக்கை விடுத்த வைகோ அவர்கள், 26 ஆம் தேதி காலை 9 மணி அளவில் மடிப்பாக்கத்தில் அவரது மகன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வாலேஸ்வரனின் சடலத்துக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment