Wednesday, July 1, 2015

திருவைகுண்டம் அணை தூர் வாரும் பணி போர்க்கால வேகத்தில் நடக்க வேண்டும் தீர்ப்பு ஆயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! வைகோ வாதத்தை ஏற்று, பசுமைத் தீர்ப்பு ஆயம் ஆணை!

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள அணையில், தூர் வாரக் கோரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடுத்த பொதுநல வழக்கு இன்று (1.7.2015) விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.
தீர்ப்பு ஆயத்தின் நீதியரசர் ஜோதிமணி அவர்கள், ‘Þடெர்லைட் வழக்கில் நீங்கள் மிகச் சிறப்பாக வாதாடியதாக நான் கேள்விப்பட்டேன். இப்பொழுது அந்த வழக்கு என்ன நிலையில் இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்றார் வைகோ. தொடர்ந்து, திருவைகுண்டம் அணையில் தூர் வாரக் கோரி வைகோ முன்வைத்த வாதம்:

நீதிபதி அவர்களே,
திருவைகுண்டம் அணை 1870 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. இதன் மூலம் 25,560 ஏக்கர் நஞ்சை நிலம் பாசன வசதி பெறுகின்றது. இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களை வாழ வைக்கின்றது. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்குகிறது. ஆனால், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக இந்த அணையில் தூர் வாரப்படாமல் வேலிக்காத்தானும், அமலிச் செடியும் வளர்ந்து, மண்ணும் மணலும் குவிந்து, எட்டு அடி உயரம் தேங்கி நிற்க வேண்டிய தண்ணீர், இன்று ஒரு அடி உயரத்திற்கு மட்டுமே தேங்குகிறது. இதனால், ஆண்டுதோறும் 20 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறது.

முப்போகம் விவசாயம் செய்த விவசாயிகள், தற்போது ஒருபோக அறுவடையே செய்கின்றனர். எனவே, இந்த அணையில் உடடினயாகத் தூர் வாருவதற்குத் தீர்ப்பு ஆயம் ஆணையிட வேண்டும் என்று, ஏப்ரல் மாதம் வழக்கறிஞர் ஜோயல் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். மே மாதத்தில் மூன்று அமர்வுகள் நடைபெற்றபோது, பருவமழை தொடங்குவதற்கு முன்பே அணையில் தூர் வார தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் தூர் வாருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று தமிழக அரசு கூறியது. அதனால், ஜூன் 5 ஆம் தேதியன்று புது தில்லியில் நடைபெற்ற தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், மத்திய அரசு ஜூன் 10 ஆம் தேதிக்குள் தூர் வாருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்கத் தவறினால், ஜூன் 11 ஆம் தேதியன்று, தமிழக அரசு திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் நீங்கள் திட்டவட்டமான தீர்ப்புத் தந்தீர்கள்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டதாகவே கருதினார்கள். நீங்கள் ஆணையிட்டவாறே ஜூன் 10 ஆம் தேதி திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதை நான் பாராட்டுகிறேன்.
மறுநாள் ஜூன் 11 ஆம் தேதி தமிழக அரசு தூர் வாரும் பணிகளைத் தொடங்கும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு பணிகளைத் தொடங்கவே இல்லை.

11 நாள்கள் கழித்து ஜூன் 22 ஆம் தேதியன்று , வழக்கறிஞர் ஜோயல் அவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தீர்ப்பு ஆயத்தின் ஆணையைச் சுட்டிக்காட்டி தூர் வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும் என எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்தனர்.

‘தமிழ்நாடு அரசு ஆணையிட்ட பிறகே தூர் வாரும் பணிகளைத் தொடங்குவோம்’ என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். ஜூன் 28 ஆம் தேதியன்று, நான் திருவைகுண்டம் சென்று, விவசாயிகளை உடன் அழைத்துக் கொண்டு அணையைப் பார்வையிட்டேன்.


‘தமிழக அரசு பணிகளைத் தொடங்குவதாகத் தெரியவில்லை என்பதாலும், பருவமழை தீவிரம் அடைந்து விட்டால், மழையையும், வெள்ளத்தையும் காரணமாகக் காட்டி தமிழக அரசு தூர் வாரும் பணிகளைச் செய்யாது என்பதையும் கருதி, ஜூலை ஐந்தாம் தேதிக்குள் தூர் வாரும் பணியைத் தமிழக அரசு தொடங்காவிடில், வீட்டுக்கு ஒரு விவசாயி எனப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு, கடப்பாறை, மண்வெட்டி, இரும்புச் சட்டி, அரிவாள் கருவிகளோடும் ஜேசிபி பொக்லைன் போன்ற இயந்திரங்களோடும், பொதுமக்களாகிய நாங்களே அணையைத் தூர் வாருவோம்; காவல் துறைக்கோ அடக்குமுறைக்கோ நாங்கள் பின்வாங்க மாட்டோம்’ என்று அறிவித்தேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தேன்.

நீங்கள் ஜூன் 5 ஆம் தேதி தந்த தீர்ப்பு ஆய ஆணையில், பருவமழை தொடங்குவதற்குமுன், தூர் வாரும் பணி வேகமாகச் செய்ய வேண்டும்; ஒருநாள் கூடத் தாமதிக்கக் கூடாது என்றதுடன், இதுகுறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ஜூலை ஒன்றாம் தேதியாகிய இன்று தீர்ப்பு ஆயத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று, அழுத்தந் திருத்தமாக ஆணை தந்தீர்கள்.

ஒருபக்கத்தில் நான் அறிவித்த போராட்டம்; மற்றொருபுறத்தில் உங்கள் தீர்ப்பு. 
இந்தப் பின்னணியில்தான் நேற்று மதியம், தமிழக அரசுக்குப் புதிய ஞானோதயம் ஏற்பட்டு இருக்கின்றது. டெண்டர் ஏற்பாடு கூடச் செய்யாமல், தூர் வாரும் வேலைக்குப் பூசை போட்டுத் தொடங்கி விட்டதாகக் கூறி உள்ளனர்.

நீதிபதி அவர்களே, இது தீர்ப்பு ஆயத்தையும், மக்களையும் ஏமாற்றுகின்ற கண் துடைப்பு வேலையாக இருக்கக் கூடும். எனவே, போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் வேலையைத் தமிழக அரசின் பொதுப்பணித் துறை வேகமாகச் செய்ய வேண்டும்; மழை வெள்ளத்தைக் காரணம் காட்டித் தாமதிக்கக் கூடாது; மழையும் வெள்ளமும் ஏற்பட்டாலும் அதற்கு மத்தியிலும் தூர் வாரும் பணிகளைச் செய்வதற்கு உரிய நவீன இயந்திரங்களும் கருவிகளும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திச் செய்யலாம்.

இந்தப் பொதுநல வழக்கில் விவசாயிகளுக்காக ஜோயல் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் நடராசன் அவர்கள், இந்தப் பிரச்சினை குறித்து நல்ல ஆதாரங்களை இம்மன்றத்தில் தந்து இருக்கின்றார். மற்றொரு செய்தி யாதெனில், இந்தத் திருவைகுண்டம் அணை மீது ஒரு பாலம் கட்டப்பட்டு, 1941 மார்ச் 15 இல் வெள்ளையர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது. அதைத் திறந்து வைத்தவர் அப்பொழுது திருநெல்வேலி ஜில்லா போர்டுத் தலைவராக இருந்த என்னுடைய பாட்டனார் கோபால நாயக்கர் ஆவார்.

இந்தத் தீர்ப்பு ஆயம் வழங்கி இருக்கின்ற ஆணை, தூத்துக்குடி மாவட்டப் பாசன விவசாயிகளுக்கு அருட்கொடை ஆகும். விவசாயிகளும், பொதுமக்களும் தீர்ப்பு ஆயத்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். திருவைகுண்டத்தில் நடைபெறும் தூர் வாரும் பணி குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை இந்தத் தீர்ப்பு ஆயத்தில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்யுமாறும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் தாங்கள் ஆணை பிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் என்று வைகோ வாதாடினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அப்துல் சலீம், ‘இந்த வேலையைத் தொடங்குவதில் பல்வேறு நடைமுறைகள் இருப்பதால், உடனே தொடங்க முடியவில்லை. இந்தப் பணியைச் செய்து முடிக்க ஓராண்டுக் காலம் ஆகும்’ என்று கூறினார். ஆனால், நீதிபதி அதனை ஏற்கவில்லை. அவ்வளவு தாமதம் செய்யக்கூடாது. உடனடியாக முடிக்க வேண்டும் என்றார்.
உடனே வைகோ, சில மணி நேரத்தில் பூசை போட முடிந்த சர்க்கார், இருபது நாள்களாக ஏன் செயல்படவில்லை? என்று கேட்டார்.

அதன்பின்னர் நீதிபதி அவர்கள், தமிழகத்தின் அணைக்கட்டுகள், குளங்களில் தூர் வாரும் பணி நடக்காமல் இருப்பது வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பைத் தருகிறது என்பதால், தமிழ்நாடடில் உள்ள அத்தனை நீர்த்தேக்கங்கள், நீர்நிலைகளிலும் உடடினயாகத் தூர் வாரும் பணிகளைத் தமிழக அரசுமேற்கொள்ள வேண்டும் என்றும், அப்படிச் செய்யப்படும வேலைகள் குறித்து, தீர்ப்பு ஆயத்திற்கு அறிக்கை தர வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.

மேலும், இந்தப் பிரச்சினையில் பொதுமக்கள் நலனுக்காக வைகோ மிகவும் அக்கறையோடு செயல்பட்டு இருக்கின்றார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே அவரது பாட்டனார் அணைப் பாலத்தைத் திறந்து வைத்து இருக்கின்றார்’ என்பதையும் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டி உள்ளார்.

இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பாக வழக்கறிஞர் சங்கமித்திரை ஆஜரானார். வைகோ அவர்களுடன் ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ஜோயல், வழக்கறிஞர் செந்தில்செல்வன், வழக்கறிஞர் தங்கவேலு, ஆகியோர் பங்கேற்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment