Sunday, November 13, 2016

புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தித் திணிப்புக்கு வைகோ கண்டனம்!

நாட்டில் கறுப்புப் பண ஆதிக்கத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு, துணிச்சலான வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தேன். சாதாரண மக்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் கடந்த மூன்று நாட்களாக தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை மாற்ற இயலாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோடானு கோடி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிகள் திணறிக்கொண்டு இருக்கின்றன. மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் இதில் தீவிர கவனம் செலுத்தி முறையாக திட்டமிட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக, இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய 500, 2000 ரூபாய் தாள்கள் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டு, தேவநாகரி வடிவ இந்தி எண் பொறிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் தாள்களில், பணத்தின் மதிப்பான இரண்டாயிரத்தின் ரோமன் எண், தாளின் வலது கீழ்பகுதியில் அமைந்துள்ளது. இடது பக்கத்தில் தேவநாகரி எண் இடம் பெற்றுள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு மற்றும் விளம்பர சொற்றொடர் இந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதை மாற்றி, அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்று இருக்கும் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் ரூபாய் மதிப்பு மற்றும் தூய்மை இந்தியா சொற்றொடர் பொறிக்கப்பட வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி அச்சிடும் ரூபாய் தாள்களில் பன்னாட்டு வழக்கில் உள்ள எண்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்ட விதி 343 கூறுகிறது. அரசியல் சட்ட விதி 343 பிரி 1 இல் உரிய திருத்தங்கள் செய்தால் மட்டுமே புதிய ரூபாய் தாள்களில் இந்தி எண்ணை பயன்படுத்த முடியும். ஆனால் மோடி அரசு, புதிய ரூபாய் தாள்களில் இந்தி எண்ணைப் பொறித்து இருப்பது அரசியல் சட்டத்தையே மதிக்கா செயல் ஆகும். இது நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும்.

மத்திய பா.ஜ.க. அரசு கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு இந்தி, சமசுகிருத மொழித் திணிப்பை தீவிரப்படுத்தினால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் துணைக் கண்டம் இந்தியா என்பதற்கு பொருள் இல்லாமல் போய்விடும்.

கறுப்புப் பணம் ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையின் நோக்கம், புதிய ரூபாய் தாள்களில் இந்தி, சமÞகிருத மொழித் திணிப்பில் போய் முடிந்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள புதிய ரூபாய் தாள்களில் பழைய முறைப்படி ரூபாய் மதிப்பு எண்ணை அச்சிட வேண்டும் அல்லது அனைத்துத் தேசிய இனங்களின் மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment