Tuesday, November 15, 2016

தமிழகத்தில் சேல் கேஸ் எடுக்க மாட்டோம் என கொள்கை முடிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்!

தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நீதியரசர் ஜோதிமணி, சுற்றுச் சூழல் நிபுணர் ராவ் அவர்கள் அமர்வில், சேல் கேஸ் பாறைப்படிம எரிவாயு வழக்கு இன்று (15.11.2016) விசாரணைக்கு வந்தது.

வைகோ முன்வைத்த வாதம்:
தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயப் பகுதிகளில் மீத்தேன் மற்றும் சேல் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனம் எடுக்க முற்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தலைக்கு மேல் மீது கத்தியாகத் தொங்கிக் கொண்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டில் மீத்தேன் எரிவாயு, சேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டதாக, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த நவம்பர் 10 ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீதிபதி ஜோதிமணி: ஆம்: நானும் அதை ஊடகங்களில் பார்த்தேன்.

வைகோ: அமைச்சரின் கருத்தை உண்மை என்று நம்ப முடியாது.

ஏனெனில் முன்பு எண்ணுரில் நடைபெற்ற அரசு விழாவில், ‘மீத்தேன் சேல் கேஸ் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று கூறிய அமைச்சர், கமலாலயத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, ‘தமிழ்நாட்டில் அத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது’ என்று கூறினார்.

இன்றைய தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ‘மீத்தேன் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது’ என்று முதல் அமைச்சர் அறிவித்தார்.

ஆனால் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இப்பிரச்சினை குறித்துத் தெரிவிக்கையில், ‘குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தாததால், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது’ என்று கூறினார்.

பின்னர், வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘மீத்தேன் திட்டத்தை நாங்கள் கைவிடவில்லை’ என்று சொன்னார்.

2008 இல் மீத்தேனுக்கு வாங்கிய சுற்றுச்சூழல் அனுமதியில் மாற்றம் செய்து, சேல் எரிவாயுவிற்கும் அனுமதி கேட்டதை எதிர்த்து, இந்தத் தீர்ப்பு ஆயத்தில் நான் வாதிட்டபோது, மாண்புமிகு நீதிபதி அவர்கள், இந்த மாற்றத்தை அனுமதிக்க முடியாது; சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிதாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினீர்கள்.

அதனால்தான், மத்திய அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம், ஓஎன்ஜிசி மூலமாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் குத்தாலத்தில் சேல் கேசுக்காக எட்டுக் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி கேட்டு, 2016 ஜனவரி மாதம் 16 ஆம் தேதி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.

அது மட்டும் அல்ல; பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் ‘தமிழ்நாட்டிலும் சேல் கேஸ் எடுக்கப்படும்’ என்றும் அறிவித்து இருக்கின்ற ஆவணத்தை இந்தத் தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்து இருக்கின்றேன்.

எனவே, மத்திய அரசு, சேல் கேஸ் எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டது என்பதைக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்; சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தைத் திரும்பப் பெற வேண்டும்; அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்தைத் தடுக்க முடியும்.

இதுகுறித்த தங்கள் நிலைப்பாட்டை, மத்திய அரசாங்கத்தின் பெட்ரோலியத் துறை அமைச்சகம், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் தங்கள் நிலைப்பாட்டை அடுத்த அமர்வில் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்யும்படித் தீர்ப்பு ஆயம் ஆணையிட வேண்டுகிறேன்.

நீதியரசர் ஜோதிமணி: தற்போது சேல் கேசுக்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில், நாங்கள் ஒரு தடை ஆணை பிறப்பிக்க முடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நீங்கள் மீண்டும் தீர்ப்பு ஆயத்தை அணுகலாம். எனினும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம், தங்கள் நிலைப்பாட்டை அடுத்த அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும்

வைகோ: சேல் கேஸ் பிரச்சினை குறித்துத் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்து இருக்கின்ற அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன், ‘ஒப்பந்தக்காரர்களை மிரட்டிப் பணம் பறிப்பவர்’ என்று அபாண்டமான அக்கிரமமான பொய்யான அவதூறைக் கூறி உள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனம் தாக்கல் செய்து இருக்கின்ற பிரமாண வாக்குமூலத்தில் கூறி இருக்கின்றது.

பி.ஆர். பாண்டியன் அவர்கள் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் மட்டும் அல்ல, காவிரி டெல்டா பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரின் மகன். எந்தக் கட்சியையும் சாராதவர். புது தில்லியில் விவசாயிகளைத் திரட்டி, வாட்டுகின்ற பனியிலும் குளிரிலும் 37 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தவர். குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் சந்தித்துக் கோரிக்கை வைத்தவர். மிகவும் நாணயமான, நேர்மையான மனிதர். தொடர்ந்து விவசாயிகளுக்காகப் போராடி வருகின்றார்.

அவரைப் பற்றி இப்படி அவதூறு கூறிய ஓஎன்ஜிசி நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்; அந்த அவதூறு வாசகங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

நீதியரசர் ஜோதிமணி: உங்கள் எதிர்ப்பை நாங்கள் பதிவு செய்கின்றோம் என்று கூறி வழக்கை நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் ஜி.தேவதாஸ், வழக்கறிஞர் கோ.நன்மாறன், செந்தில்செல்வன், சுப்பிரமணி, பாஸ்கர், வினோத்குமார், தென்காசி சங்கரன் ஆகியோர் ஆஜரானார்கள் என மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment