Friday, December 2, 2016

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம், வைகோ வாழ்த்து!

பல்வேறு காரணங்களால் ஊனம் ஏற்பட்டு, சமுதாயத்தின் எல்லா நிலையிலும் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிற மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3.

நீர், நிலம், காற்று நஞ்சாகி சுற்றுச்சூழல் மாசுபட்டாலும் பிறவி ஊனம் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கத் தவறும் அரசுகளும் இதற்குக் காரணமாக இருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உலக பொது மன்றம் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அவர்களை அக்கறையுடன் கையாளாமல், பாராமுகத்துடன் இருப்பதால், வாழ்க்கையின் எல்லா நிலையிலும் எதிர்நீச்சல் போட்டு போராடும் போர்க்களமாகவே உள்ளது மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை. மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டப்படிப் போராடிப் பெற்ற மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு இன்னும் கானல் நீராகவே உள்ளது.

நிலவிலும், வான் மண்டலத்திலும் சாகசங்கள் புரியும் நாம், மாற்றுத் திறனாளிகளை மனித நேயத்துடன் கையாள்வதில் மிகவும் பின்தங்கி உள்ளோம்.

உலக ஊனமுற்றோர் தின விளையாட்டுப் போட்டியை டிசம்பர் 1 ஆம் தேதி, அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக முழுவதுமிருந்து 2000 மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் சென்னை வந்த நிலையில், மழையின் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக டிசம்பர் 1 ஆம் தேதி, காலை 10 மணி அளவில் தமிழக அரசு அறிவித்தது அவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களுடைய பயணத்தை முன்னெச்சரிக்கையாக அறிவித்து நிறுத்தி இருக்கலாம்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பெரிய வடக்கம் பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாரியப்பன் தங்கவேலு, பிரேசிலின் ரியோ டி ஜெனிராவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், டி-42 பிரிவில் ஆண்களுக்கான உயரம் தாண்டுலில் 1.89 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தார்.

விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கின்ற மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து பயிற்சிகள் வழங்கி ஊக்கப்படுத்தினால் இன்னம் எண்ணற்ற பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைக்கும்.

மெரினா கடற்கரை சாலையில், விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு அருகில் 2009 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை அலுவலகத்தை தமிழக அரசு உடனடியாகத் திறக்க வேண்டும்.

2016 ஏப்ரல் மாதத்திற்குப் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற மனவளர்ச்சி குன்றியோருக்கான மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, தாமதம் இன்றி திருமண உதவித்தொகை வழங்கி அரசு வேலை வாய்ப்பு, இலவச வீடுகள் வழங்க வேண்டும்.

தேசிய சுயவேலை வாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கட்ட வேண்டிய 5 சதவிகித பங்குத் தொகையை, மத்திய மாநில அரசுகள் பொறுப்பு ஏற்றுக் கட்டி சுயதொழில் செய்திட ஊக்குவிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தை தமிழக அரசு உடனடியாக அமைத்திட வேண்டும். சட்டபூர்வமான மாநில மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் தலைமையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், 15 சட்டமன்ற உறுப்பினர்கள், 57 துறைசார்ந்த அரசு செயலாளர்கள், உடல் ஊனமுற்றோர் பிரதிநிதி மனவளம் குன்றியோர் பிதிநிதி, காது கேளாதோர் பிரதிநிதி, கண் பார்வையற்ற பிரதிநிதி உள்ளிட்ட குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடி உலக வங்கி நிதி, மத்திய / மாநில அரசுகளின் நிதி, சட்டமன்ற உறுப்பினர்கள் 5 இலட்சம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 இலட்சம் என்று அனைத்து நிதிகளும், திட்டங்களும் முறையாக பயனாளிகளுக்குச் சென்று சேர்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய ஒருங்கிணைப்புக் குழு 2008 க்குப் பின் கூட்டப்படவில்லை என்பதிலிருந்தே மாற்றுத் திறனாளிகளை மாற்றந்தாய் மனப்பான்மையோடு அரசு அணுகுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Nothing to us without us (நாங்கள் இல்லாமல் எங்களுக்கு எதுவும் இல்லை) என்பது மாற்றுத் திறனாளிகளின் தாரக மந்திரம். எனவே அவர்களைக் கொண்டே அவர்களது தேவைகளை நிறைவுசெய்திட வேண்டும்.

துயரச் சிலுவைகளைத் தூக்கிச் சுமக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னும் இளைப்பாறுதல் கிடைக்கவில்லை. அவர்களும், சக மனிதர்களைப் போன்று அனைத்து உரிமைகளும் பெறும் வரை மறுமலர்ச்சி தி.மு.க.தோள் கொடுத்து குரல் கொடுக்கும்.

உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் தொடங்கி, கட்சி அடையாளம் இல்லாமல் உடல் ஊனமுற்றோர் சிகிச்சை முகாம்களை ஐந்துமுறை சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில், சிவகாசியில் நடத்தினேன். உலகப் புகழ் வாய்ந்த திருப்பதி தேவஸ்தான உடல் ஊனமுற்றோர் சிகிச்சை நிறுவனத்தின் தலைமை மருத்துவர் ஜெகதீஸ் அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சைஆய்வினை மேற்கொண்டனர். மொத்தம் 12 ஆயிரம் பேருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கா~லிபர் என்று சொல்லக்கூடிய காலணிகள் 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. மத்திய அரசு அமைச்சகத்திலிருந்து ஏற்பாடு செய்து, 1500 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த மனநிறைவோடும், தகுதியோடும் மாற்றுத் திறனாளிகளுக்கு பொதுவாழ்வும் விடியலும் ஏற்பட வாழ்த்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment