Thursday, December 1, 2016

கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்! வைகோ அறிக்கை!

இராமேஸ்வரம் தீவில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கச்சத் தீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்த எட்டுத் தீவுகளுள் ஒன்று ஆகும். அதற்கான ஆவணங்கள் நிரம்ப உள்ளன.
1802 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரி நில உரிமைச் சட்டப்படி இராமநாதபுரம் அரசருக்கு வழங்கப்பட்ட கச்சத் தீவை, பின்னர் அவர்கள் தனி நபர்களுக்குக் குத்தகைக்கு விட்டனர்.
1905 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகில் உள்ள நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் சீனிகுப்பன் படையாட்சி கச்சத் தீவில் புனித அந்தோணியார் கோயிலைக் கட்டினார். அந்த நாள் முதல் அந்தக் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஆண்டுகூட 3,249 பேர் திருவிழாவுக்குச் சென்று வந்தனர்.
1974 ஆம் ஆண்டு, பிரதமர் இந்திராகாந்தி அம்மையார், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார். அதனால், கச்சத் தீவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது, வலைகளை உலர்த்துதல் போன்ற மரபு உரிமைகளைத் தமிழக மீனவர்கள் இழந்தனர்.
சிங்கள இனவாத அரசு, கச்சத் தீவு தங்களுக்குத்தான் உரிமை படைத்தது என்று கூறி வருவது மட்டும் அன்றி, கச்சத் தீவு ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட உரிமைகளைக்கூட மறுத்து வருகின்றது. அந்தப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது.
தற்போது, கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் தமிழக மீனவர்கள் சென்று வழிபடும் உரிமையையும், திருவிழாவில் பங்கேற்பதையும் இலங்கை அரசு தடை செய்யும் வகையில் அச்சுறுத்தி வருகின்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற யாழ்ப்பாணம் பிஷப் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்கள், அந்தோணியார் கோவிலில் போதுமான இடவசதி இல்லை; புதிய கோயிலைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக இலங்கை அரசு 3500 சதுர அடியில் 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியது. கட்டுமானப் பணியில் எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று தமிழக மீனவர்கள் வைத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதுகுறித்து இலங்கை அரசைக் கண்டித்து உடனடியாக ஒரு அறிக்கை கொடுத்தேன். தற்போது கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிந்து, டிசம்பர் 7ஆம் தேதி திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் நூறு ஆண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழக மீனவர்களின் மரபு உரிமையாக விளங்கி வரும் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவுக்குத் தமிழக மீனவர்களுக்கு அழைப்பு இல்லை என்பது வேதனை அளிக்கின்றது.
இது குறித்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், இலங்கை அரசின் நிலைப்பாடு இன்னும் தமிழக மீனவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது என்பது, அந்நாட்டின் கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீராவின் கருத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 115 படகுகளையும் விடுவிக்க முடியாது என்றும் இலங்கை அரசு திமிராகக் கூறிவிட்டது. அத்துடன், இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகுகளுக்கு 30 இலட்சம் ரூபாய் முதல் பல கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அந்நாட்டின் பன்னாட்டு மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கை அமைச்சர் மகிந்தா அமரவீரா மிரட்டல் விடுத்துள்ளார்.
கச்சத் தீவு புனித அந்தோணியார் கோயில் திறப்பு விழாவுக்கு தமிழக மீனவர்களுக்கு அழைப்பு அனுப்பாமல் மீன்பிடி உரிமைகளையும் நசுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ள இலங்கை அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தமிழக மீனவர்கள் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் பங்கேற்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment