Friday, December 2, 2016

தமிழக ஆளுநர்-வைகோ சந்திப்பு! ஜல்லிகட்டு தகவல் சொல்ல வைகோ வேண்டுகோள்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (02.12.2016) காலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். அதுகுறித்துச் செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கம்: 

ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்கள் எனக்கு நல்ல நண்பர். ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகத் தொடர்ந்து மூன்று முறை இருந்தார். 

ஆந்திராவில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்று வந்தவுடன் அவரை உள்துறை அமைச்சகத்தின் ராஜாங்க அமைச்சராக (Ministry of State of Home) பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நியமித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர் ஆனார். அவரது இல்லத்தில் பலமுறை சந்தித்து இருக்கின்றேன். ஒருமுறை தமது இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருக்குத் தனிப்பட்ட முறையில் அளித்த விருந்துக்கு என்னையும் அழைத்து இருந்தார். 

அதுபோல இன்றைக்கும் நட்பு முறையில் சந்தித்தேன். பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். விவரம் கூற இயலாது. 

முக்கியமான ஒன்று, ஜல்லிக்கட்டுத் தடை. 

நான் ஒரு விவசாயி. எங்கள் தொழுவத்தில் நூறு மாடுகளுக்கு மேல் இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்களின் கலாச்சாரத்தோடு, பண்பாட்டோடு இணைந்து இருப்பது ஜல்லிக்கட்டு. அதைப்பற்றி விளக்கம் அளித்தேன். ஜல்லிக்கட்டுக் காளைகளை விவசாயிகள் தங்கள் பிள்ளைகளைப் போலத்தான் வளர்க்கின்றார்கள். தார்க்குச்சி கொண்டு கூடக் குத்த மாட்டார்கள். அப்படி இருக்கையில் ஜல்லிக்கட்டை மிருகவதை என்று சொல்லி உச்சநீதிமன்றம் 2014 இல் தடை விதித்தது. 

ஆனால் அந்தத் தடையை நீக்குவதற்குத் தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொண்டது. அதே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தாலும், தமிழக மக்கள் நடத்திய போராட்டங்களாலும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 2016 ஜனவரி 7 ஆம் தேதி மத்திய அரசு ஒரு அறிவிக்கை (Notification) வெளியிட்டது. ஆனால், காட்சிப் பொருளாகக் காட்டத் தடை விதிக்கப்பட்ட விலங்குகள் என்ற பட்டியலில் இருந்து காளைகளை நீக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு, மிருகவதைத் தடைச்சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, 2016 நவம்பர் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 

எனவே, ஜல்லிக்கட்டின் முழுப் பின்னணியை அறிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தடையாகவே இருக்கின்றது. இதுகுறித்துப் பிரதமரிடம் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்கு உரிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு நிறைவேற்றிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

உச்சநீதிமன்றத் தடை குறித்து ஆளுநர் விளக்கமாகக் கேட்டார். 

இந்த விளையாட்டில் வீரர்களுக்குக் காயம் ஏற்படலாம்; உயிர் ஆபத்துகள் நேரலாமே தவிர, மாடுகளுக்கு எந்த இடையூறுகளும் கிடையாது; கண்ணில் மிளகாய்ப் பொடி போடுகிறார்கள்; மாடுகளுக்குச் சாராயம் ஊற்றுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் பொய். அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். இது எனக்குத் தெரியும். 

ஜல்லிக்கட்டு விலங்கு வதை என்றால், நாடு முழுவதும் ஆடு, மாடு, கோழி வெட்டுகிறார்களே? அது வதை இல்லையா? அதை எப்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதிக்கின்றார்கள்? 

மாடுகளுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றாலும் கூட விவசாயிகள் தாங்க மாட்டார்கள். இறந்த மாடுகளுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள் என்பதை எல்லாம் பிரதமரிடம் எடுத்துச் சொல்லுங்கள். தடையை நீக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். 

வருகின்ற டிசம்பர் 10 ஆம் நாள் ஒரு நிகழ்ச்சியில் பிரதமரைச் சந்திப்பேன்; உங்கள் வேண்டுகோளை அவரிடம் எடுத்துரைப்பேன் என்று ஆளுநர் அவர்கள் கூறினார்கள் என வைகோ அவர்கள் கூறினார்கள் என மதிமுக தலைமை கழக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment