Thursday, June 14, 2018

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018ஐ திரும்பப் பெறுக-வைகோ அறிக்கை!

மத்திய அரசின் சுற்றுச் சூழல்துறை ஏப்ரல் 18, 2018 இல் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை - 2018, மீனவர் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் இருக்கின்றது.

தற்போது நடைமுறையில் உள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை -1991 இல் வடிவமைக்கப்பட்டு, பின்னர் 2011 இல் மேலும் செம்மையாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

கடற்கரைச் சுற்றுச் சூழலையும், உயிர் சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், மீனவர்கள் வாழ்வுரிமையை உறுதி செய்யும் வகையில் 1991 இல் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை பிரகடனம் செய்யப்பட்டது.

மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது செயல்படுத்த முனைந்துள்ள சாகர்மாலா திட்டம், நீலப் பொருளாதாரக் கொள்கை மற்றும் கடலை கையகப்படுத்துதல் போன்றவற்றிற்காக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மாற்றி அமைக்கப்பட்டு, புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை நிலங்களையும், நீர் நிலைகளையும் (Coast Regulation Zone -CRZ) நான்கு மண்டலங்களாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப பாதுகாப்பதையும், பயன்படுத்துவதையும் அறிவுறுத்துகிறது. அதன்படி முதலாம் பிரிவில் (CRZ -1A) கடற்கரையின் சூழலைப் பாதுகாக்கும் சதுப்பு நிலங்கள், உப்பளங்கள் முதலான பகுதிகள் உள்ளன. அப்பகுதிகளைப் பாதுகாப்பதும், அவற்றில் தொழில் நிறுவனங்களுக்கானக் கட்டுமானப் பணிகள் எதுவும் கூடாது என்பதும் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை தற்போதுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளன. புதிய வரைவு அறிவிப்பாணையில் இது நீக்கப்பட்டு, சுற்றுலாத் திட்டங்களுக்கான கட்டுமானங்கள், பாலங்கள், சாலைகள் அமைக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டு இருக்கின்றது.

கடல் அலைகள் தாக்கம் உள்ள பகுதி என்று வரையறுக்கப்பட்டுள்ள இரண்டாம் பிரிவில் (CRZ -1B) நீர் முகப்பு தேவைக்குரிய திட்டங்களான துறைமுகங்கள், மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் கடல் சுவர் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் புதிய வரைவு அறிவிப்பாணையில் சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோன்றே மற்ற மூன்று மண்டலங்களிலும் சாலைகள், தொடர் வண்டி இருப்புப் பாதைகள், தொழிற்கூடங்கள், விடுதிகள் அமைத்தல், துறைமுகங்களில் நிலக்கரி கிடங்குகள் மற்றும் எண்ணெய், எரிவாயு சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல், நவீன நகரம் அமைவதற்கான கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவை செயல்படுத்தப்படும் என்று புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018 இல் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

மோடி அரசு, இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் சாகர் மாலா திட்டம் எனும் பெரும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. இதற்காக தொடர் வண்டி மற்றும் சாலைப் போக்குவரத்து துறைமுகங்களுடன் இணைக்கப்படும் கடற்கரைகள் முழுமையாக துறைமுகங்களின் கீழ் அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். கடற்கரைகளில் நவீன நகரம் எனும் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் சாகர் மாலா திட்டத்திற்காக இலட்சக்கணக்கான கடற்கரை மற்றும் நீர்நிலைகள் மற்றும் நதிகளை ஒட்டியும், கடற்கரை நிலங்களும், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படும்.

சாகர்மாலா திட்டத்திற்கான பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மிகப் பெரும் நிறுவனங்களின் மூலதனம் மூலம் திரட்டப்படும் என்பதால், கடற்கரைகள், துறைமுகங்கள், தீவுகள் அனைத்தும் தனியார் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.

சாகர்மாலா திட்டத்திற்கு தற்போதுள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011 தடையாக இருப்பதால்தான், புதிய அறிவிப்பாணையைக் கொண்டுவந்து, கடற்கரைகளில் காலம் காலமாக வாழும் மீனவர்களை விரட்டிவிடவும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கவும், மத்திய அரசு துடிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆயிரம் கிலோ மீட்டர் நீள கடற்கரை பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, சுற்றுச் சூழல் சீர்கேடுகள், பருவ கால மாற்றங்களால் ஏற்பட்டு வரும் ஆபத்துகள் பெரும் அழிவை உருவாக்கும்.

மீனவர் சமூகம் கொந்தளித்து அறப்போர் களத்தில் குதித்துள்ளதை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்திவிடக்கூடாது. புதிய வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை, 2018ஐ திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 14-06-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment