Friday, June 8, 2018

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தேசிய பேரிடர் அமைப்பு தமிழகத்தின் உரிமைக்கு ஆபத்து-வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களின் விவசாயத்துக்குத் தேவையான பாசன நீரும், பொதுமக்களுக்குக் குடிதண்ணீரும் வழங்குகிற விதத்தில் 1886 ஆம் ஆண்டு அன்றைய சென்னை ராஜதானி அரசும், திருவிதாங்கூர் அரசும் செய்துகொண்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றதாகும்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் பென்னிக் குயிக் கட்டிய அணை கரிகாலன் கட்டிய கல்லணை போல் பல நூற்றாண்டுகளுக்கு வலிமையான அணையாகும். இதில் 152 அடி உயரம் தண்ணீர் தேக்க தமிழ்நாட்டுக்கு உரிமை உண்டு. ஆனால் 1979 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி கேரளத்தில் ஒரு பத்திரிகை, முல்லைப் பெரியாறு அணை உடையும் என்றும், கேரளத்தில் நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட்டதால், வதந்தியையும், பீதியையும் ஏற்படுத்தியது. இதனால் இரு மாநில அரசுகளும், மத்திய அரசின் நீர்வள ஆணையமும் திருவனந்தபுரத்தில் கூடி அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைத்துக் கொள்வது என்றும், அணையை வலுப்படுத்திய பிறகு தண்ணீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்தது. ஆனால் தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகளுக்கு கேரளா பல முட்டுக்கட்டைகள் போட்டும் ஏற்கனவே வலுவாக இருந்த பென்னி குயிக் அணை மேலும் பன்மடங்கு வலுப்படுத்தப்பட்டது.

பென்னி குயிக் அணை கட்டியபோது அடி மட்டம் 144.6 அடியாக இருந்தது. நவீன தொழில்நுட்பத்தால் அடி மட்டம் மேலும் 56 அடி சேர்க்கப்பட்டு, மொத்தத்தில் 200 அடி 6 அங்குலம் ஆக்கப்பட்டது. மேல் மட்டம் முதலில் பத்தரை அடி இருந்தது. தற்போது இருபதரை அடி ஆக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியன்று நீதிபதிகள் சபர்வால், தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூவர் அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உடனடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், பின்னர் காலப் போக்கில் 152 அடி வரை உயர்த்தலாம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு அரசியல் சட்ட அமர்வுக்கு வழக்கைக் கொண்டு சென்றது. அந்த அமர்வு முல்லைப் பெரியாறு அணை வலுவையும், இரு மாநிலங்களுடைய நிலைப்பாட்டினையும் ஆய்வு செய்ய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், ஏ.ஆர்.லட்சுமணன், கே.டி.தாமஸ் ஆகிய மூவர் குழுவை நியமித்தது. அந்த மூவர் குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது; நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம். புதிய அணை தேவை இல்லை என்று தீர்ப்பளித்தது.

அதற்கு ஆதாரமாக முன்னர் உச்சநீதிமன்றம் அமைத்த டாக்டர் டி.கே.மித்தல் கமிட்டி அறிக்கையையும், எஸ்.எஸ்.பிரார் கமிட்டி அறிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அம்முடிவுக்கு வந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால், தண்ணீர் நிரம்பும் ஏரியின் கொள்ளளவு பகுதியில் கேரளத்தினர் பல நட்சத்திர விடுதிகளையும், கட்டடங்களையும் கட்டி உள்ளனர். அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி, கேரள அரசு மிகவும் தந்திரமாக கேரள மாநிலத்துக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பரப்புக்கு அருகில் ‘பஸ் ஸ்டேசன்’ என்ற ஒரு வளாகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அது பசுமைத் தீர்ப்பாயத்தால் தடுக்கப்பட்ட பின் பிரச்சினையை உச்சநீதிமன்றத்துக்கு கேரள அரசு கொண்டு சென்றது.

‘பஸ் ஸ்டேசன்’ என்று சொல்லும் இந்த வளாகத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களையும், கேளிக்கை விடுதிகளையும், வணிக வளாகங்களையும் கட்ட முடிவு செய்து, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பதுதான்.

கேரள அரசின் பின்னணியில் அம்மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஸல் ஜாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் மூன்று கோடி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். இதைத் தடுப்பதற்கான ஒரு அவசரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். கேரளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் ஜார்ஜ் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். அந்த மனுவில் அப்பபட்டமான பொய்யைக் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிக் குயிக் அவர்கள் இந்த அணை ஐம்பது ஆண்டுகளுக்குத்தான் வலுவாக இருக்கும் என்று கூறி உள்ளதகாவும், எனவே அணை எந்த நேரத்திலும் உடையலாம் என்றும், கோடிக்கணக்கான கேரள மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும், இந்த ஆபத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பென்னிக் குயிக் அவர்கள் தான் கட்டிய அணை எந்தக் காலத்திலும் உடையாது என்றுதான் கூறி உள்ளார் என்பதற்கு நேர் மாறான பொய் தகவலை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த வாதங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, பேரழிவு தடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் தனது ஆணையில் நீண்ட உபதேசம் செய்திருக்கிறார்.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிம்னறத்தின் தலைமை நீதிபதியின் தீர்ப்பு தமிழக நலன்களுக்கு கேடாக அமைந்தது. முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் முறையான குழுக்களை அமைத்து திட்டவட்டமான தீர்ப்பை தந்தபின்னரும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2018 ஜனவரி 11 இல் வழங்கிய தீர்ப்பு நமக்கு மிகவும் கவலை தருகிறது. தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சரியான முறையில் வாதிடவில்லை. இப்பிரச்சினையும் தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.

தமிழகத்துக்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மேற்கொள்ளவிடாமல் பிரச்சினையை அரசியல் சட்ட அமர்வுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு முற்பட வேண்டும்

உலகத்தில் 44,400க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்தியாவில் 4,448 அணைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 90 அணைக்கட்டுகள் உள்ளன. எங்கும் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.

1990 முதல் இன்றுவரை முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 45 முறைகள் நில அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் பென்னிக் குயிக் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் 104 அடி உயரம் வரை Dead storage நிரந்தரத் தண்ணீர்த் தேக்கம் ஆகும். முல்லைப் பெரிய அணையின் கொள்ளளவு 10.5 டி.எம்.சி. ஆகும். இடுக்கி அணை 552 அடி உயரமும் 75 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட பெரிய அணையாகும்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்தக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள அரசுக்கு சாதகமான நிலைமை உருவாக நாம் இடம் தரல் ஆகாது. எனவே உச்சநீதிமன்றத்தினுடைய இந்த ஆணையை எதிர்த்து, பிரச்சினையை அரசியல் சட்ட அமர்வுக்கு தமிழக அரசு கொண்டுசெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ‌என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 8-6-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment