Friday, June 15, 2018

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு-வைகோ!

ஐக்கிய முற்போக்குக் முன்னணி ஆட்சி நடந்தபோது, கேரள மாநில அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், ‘அணை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மிகத் தந்திரமாக ஒரு மசோதாவைத் தயாரித்தனர். அந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு உள்ளே இருக்கின்ற அணைகளின் மொத்த நிர்வாகக் கட்டுப்பாடும், பராமரிப்பு உட்பட அனைத்து முடிவுகளும், அம்மாநில அரசுகளுக்கே உரிமை ஆக்கப்படும்.

இதனால், இந்தியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் மாநிலம் தமிழ்நாடுதான்.

2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழகம் பென்னி குயிக் அணையில் 142 அடி முதலில் தேக்கிக் கொள்ளலாம்; பின்னர் 152 அடி வரை தேக்கிக் கொள்ளலாம். இதற்கு எதிராகக் கேரள அரசு செயல்படக் கூடாது என்று கூறினர்.

உடனடியாகக் கேரள அரசு சட்டமன்றத்தைக் கூட்டி, கேரள மாநிலத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும் என்றும், அணைகள் குறித்து, மாநில அரசு எடுக்கும் முடிவில் எந்த நீதிமன்றமும் குறுக்கிட முடியாது என்றும் சட்டம் இயற்றியது.

பின்னாளில் உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்தது.

இந்தப் பின்னணியில்தான், கேரள அரசுக்குச் சாதகமாகத் திட்டமிட்ட அதிகாரிகள், அணைப் பாதுகாப்பு மசோதா என்ற புதிய மசோதாவைத் தயாரித்தனர். அதன்படி, முல்லைப்பெரியாறு அணை குறித்து முடிவு எடுக்கும் முழு உரிமையும், கேரள அரசுக்கே உரியதாகி விடும் என்பதால், 2012 டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை நான் நேரில் சந்தித்து, ‘உத்தேசித்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக் கூடாது; சட்டம் ஆக்கக் கூடாது; அரசியல் சட்டத்தின் 262 ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின் குறிக்கோளுக்கு எதிரான நிலைமை விளையும்; தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும்;. ஏனெனில், கர்நாடகமும் இப்படி ஒரு சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரைக் கொடுக்காது; ஆகவே, விபரீதமான நிலைமைகள் உருவாகும்; இந்த நிலை எழுந்தால், இந்திய ஒருமைப்பாடு எங்களுக்கு எதற்காக? சோவியத் ஒன்றியம் போல இந்தியா தனித்தனி நாடுகள் ஆகின்ற நிலைமைக்கு வித்திட்டு விடாதீர்கள்’ என்று கூறியதை, அன்றைய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

அது மட்டும் அல்ல. அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த, மறைந்த ஜெயலலிதா அவர்கள், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன்.

வர இருந்த ஆபத்து நீங்கி விட்டது என்ற நிம்மதியோடு இருக்கும் நிலையில், நம் தமிழ்நாட்டின் தலையில் பாறாங்கல்லைப் போடுவதைப் போல, அணை பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வர நரேந்திர மோடி அரசு முடிவு எடுத்து, ஜூன் 13 ஆம் நாள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் தந்து இருக்கின்றது. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், மத்திய அரசு திட்டமிட்டே வஞ்சகம் செய்து, காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திக்கொடுத்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் நீக்கி, கர்நாடக அரசின் தயவில் தமிழகம் இருக்க வேண்டிய வகையில் அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருக்கின்றது.

இந்த முடிவு வருவதற்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு நடுநிலை தவறிய பாரபட்சமான தீர்ப்பை வழங்கியது.

கேரளம், கர்நாடகம், பாலாற்றுப் பிரச்சினையில் ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைக் கொடுக்காமல் அநீதி விளைவிக்க, உத்தேசிக்கப்பட்டுள்ள அணை பாதுகாப்பு மசோதா வழிவகுத்து விடும்.

‘இந்த அணை பாதுகாப்பு மசோதா குறித்த விவரங்கள் எதுவும் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை’ என்று, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி அவர்கள் கூறியதோடு, ‘மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த மசோதாவைக் கொண்டு வரக்கூடாது’ என்றும் தெரிவித்து இருக்கின்றார்.

எனவே, அணை பாதுகாப்பு மசோதாவின் முழு விவரங்களையும் மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.

ஆனால், மூடு மந்திரமாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு இந்த மசோதாவைச் சட்டம் ஆக்கி, தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய முடிவு எடுத்துள்ளது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், நதிநீர் உரிமைப் போராளிகளும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 15-06-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment