Monday, August 13, 2018

ஆளுநர் மாளிகையில் தலைமை நீதியரசி பதவியேற்பு விழாவில் நீதியரசர்கள் முறையாக நடத்தப்படாததற்கு வைகோ கண்டனம்!

நேற்று (12.08.2018 அன்று) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதியரசி தகில் ரமணி அவர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட நிகழ்ச்சியின் போது, இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறை மதிப்பு வரிசைப்படி உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர இடம் ஒதுக்காமல், அமைச்சர்களும், காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல் சீருடையில் இல்லாத காவல்துறை அதிகாரிகளும், முன் வரிசைகளில் அமர்ந்ததும், பின் வரிசைகளில் நீதிபதிகள் உட்கார வைக்கப்பட்டதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்தப் பதவியேற்பு விழாவில் நீதியரசர்களுக்கு இடம் ஒதுக்கப்படுவதை நேரில் வந்து பார்க்க சென்னை உயர்நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் முயன்றபோது, ஆளுநர் மாளிகை அதற்கு அனுமதி மறுத்தது என்பது நீதித்துறையையே உதாசீனப்படுத்திய செயலாகும்.

இதற்கு முன்னர் மதுரை மாநகரில், மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சியின்போதும் அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடம் கொடுப்பதற்காக இருக்கைகளில் அமர்ந்திருந்த நீதிபதிகளை அவமானப்படுத்தி அவமதித்த செயலும் நடைபெற்றது இருக்கிறது.

நேற்று ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கின்ற வகையில் நடைபெற்ற செயலுக்கு ஆளுநர் மாளிகையின் அதிகாரப் பொறுப்பில் உள்ளோர்தான் பொறுப்பாளிகள் ஆவார்கள். இதற்குரிய விளக்கத்தை ஆளுநர் மாளிகை தருவதுடன், இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 13-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment