Wednesday, August 21, 2019

இனப்படுகொலைக் குற்றவாளி இராணுவத் தளபதியா? வைகோ கண்டனம்!

மனிதகுல வரலாற்றில் பல்வேறுகாலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும்.
ஏழு அணு ஆயுத வல்லரசு களின் ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தாக்குதல்களில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள இராணுவ த்தின் 58 ஆவது டிவிசன் கமாண்டர் சவேந்திர சில்வா, யூதர்களைக் கொன்று குவித்த அடால்ப் இச்மனைப் போல், பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப் பாவி ஆவான்.
ஐ.நா.வழங்கிய உதவிப் பொருட்கள், யுத்தத்தால் வீடு வாசல்களை இழந்து,காடுகளுக்குள் நிர்கதியாக நின்ற அப்பாவித் தமிழர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்தவன்;
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைப் பிடித்துச் சுட்டுக்கொல்ல ஆணை இட்டவன்;
தமிழ்ப் பெண்களின் மானத்தை கற்பைச் சூறையாடி, கொன்று குவித்த அரக்கன்;
இறுதிக்கட்டப் போரின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவ முகாம்கள் மீது குண்டுகளை வீசி, அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த தமிழர்களைக் கொன்றவன்;
பால் பவுடரும் உணவுப் பொருட்களும் வாங்க வரிசைகளில் நின்ற தாய்மாய்கள் மீதும் குண்டுகளை வீசக்காரணம் ஆனவன்;
கொலைகார இராணுவத்தினரை வெள்ளை வேன்களில் அனுப்பி, தமிழர்களை இரத்த வேட்டை ஆடியவன்;
அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைகளைச் செய்த கயவன்தான் சவேந்திர சில்வா.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலிலும், டப்ளின், பிரெம்மன் தீர்ப்பு ஆயங்களிலும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் சவேந்திர சில்வாவின் கொலை பாதகச் செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம், சிங்கள இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சவேந்திர சில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா நியமித்தபோதே தமிழர்கள் தலையில் இடி விழுந்தது. இப்போது தலைமைத் தளபதியாக நியமித்துள்ளார்.
கொலைகார ராஜபக்சே அரசில் இராணுவ அமைச்சராக இருந்த, சிறிசேனாவும் இனப்படுகொலைக் குற்றவாளியே.
இவர்கள் மூவருமே உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
சவேந்திர சில்வா நியமனத்திற்கு அமெரிக்க அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடித் தமிழர்களைக் குடிமக்களாகக் கொண்டுள்ள இந்திய அரசு கண்டிக்கவில்லை. மாறாக, கொஞ்சிக் குலவுகின்றது. மன்னிக்க முடியாத தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது.
தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் மேனியில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டு உயிர்க்கொடை ஈந்தனர். அந்தத் தியாகம் வீண் போகாது.
காலம் மாறும்; ஈழத்தமிழர் பிரச்சினையின் பரிமாணமும் மாறும். இனப்படுகொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் 21-08-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment