Saturday, August 24, 2019

இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக-வைகோ வேண்டுகோள்!

2014 இல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருக்கின்றது.
ஆனாலும், இரயில்வே துறை தனியார் மயம் ஆகாது என்று இரயில்வே அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் கூறி வந்தனர்.
கடந்த மே மாதம் இரண்டாவது முறையாகப் பொறுப்பு ஏற்ற பின்பு, ‘100 நாள் செயல் திட்டம்’ என்ற பெயரில், இரயில்வே உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நெரிசல் இல்லா வழித் தடங்களிலும், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும், தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - ஹௌரா, ஹௌரா - சென்னை வழித்தடங்களிலும், தனியார் நிறுவனங்கள் தொடரிகளை ஓட்டுவதற்கு உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரிமியம் கட்டண இரயில்களைத் தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே இரயில்வேத் துறைக்குச் சொந்தமான அச்சகங்கள் மூடப்பட்டு உள்ளன. பயணச் சீட்டு வழங்குவதையும், இரயில் பெட்டி தயாரிப்பு, இரயில் இயந்திரம் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் ஏழு உற்பத்தி ஆலைகளையும், இரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க இரயில்வே துறை முனைந்துள்ளது.
இந்நிலையில், இரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகக் காரணம் கூறி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய நேற்று முன்தினம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது. ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் ரூபாய் 600 கோடி வரை திரட்டுவதற்கு இரயில்வே துறை முடிவு எடுத்து இருக்கின்றது.
இரயில்வே துறையைப் புதுப்பிக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 இலட்சம் கோடி முதலீடு தேவைப்படுகின்றது; ஆனால் ஆண்டுக்கு 1.6 இலட்சம் கோடி மூலதனம் இடும் சக்தி மட்டுமே இரயில்வே துறையிடம் இருப்பதால், தனியார் மூலதனம் தேவை என்று பா.ஜ.க. அரசு தனியார் மயத்தை நியாயப்படுத்துகின்றது.
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரயில்வே துறையைப் புதுப்பிக்கத் தேவையான நிதி, பொதுத்துறை-தனியார் கூட்டின் மூலம் திரட்டப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்; ஏழை எளிய மக்களுக்கு இரயில் பயணம் என்பது எட்டா கனியாக ஆகிவிடும். சரக்குக் கட்டணங்கள் கடுமையாக உயரும்; அதனால், விலைவாசி உயரும். இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே, முன்பு அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் வகையில், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 24-08-2019 அன்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment