Saturday, August 10, 2019

மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் இன்று 10.08.2019 சனிக்கிழமை, காலை 10.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் காலை 11.00 மணிக்கும், சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:

இந்துத்துவ சனாதன சக்திகளின் நீண்ட நாளைய திட்டமான காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்புரிமையைப் பறிக்க வேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சி அரசு நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கும் மிருக பலத்தின் துணை கொண்டு செயல்படுத்தி இருக்கின்றது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் அம்மாநில நிரந்தர குடிமக்களுக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப் பிரிவு 35ஏ ஆகிய இரண்டையும் நரேந்திர மோடி அரசு நாடாளுமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டுவந்து நீக்கி இருக்கின்றது. ஆகஸ்டு 5 ஆம் தேதி, மாநிலங்களவையிலும். 6 ஆம் தேதி மக்களவையிலும் காஷ்மீர் சிறப்புரிமையை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது.
நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆகஸ்டு 5 ஆம் தேதி மாநிலங்கள் அவையில் இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்த சிறிது நேரத்திலேயே அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்று குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது. நாடாளுமன்றத்திற்கு இதைவிட பெரும் அவமதிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.
பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுகளின் படி காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகக் கூறுபோடப்பட்டுள்ளது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீரும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் மாற்றப்படுகிறது.
காஷ்மீர் மக்களின் உணர்வுபூர்வமானப் பிரச்சினைகளை பாரதிய ஜனதா அரசு அணுகி உள்ள முறை காஷ்மீரை - கொசாவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போன்று மாற்றிவிடும் ஆபத்து நேரிடும் என்று மாநிலங்கள் அவையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மிகச் சரியாக எச்சரிக்கை முழக்கமிட்டுள்ளார்.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர், காஷ்மீர் சமஸ்தான மன்னர் ஹரிசிங், அங்கு பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் சேர்ப்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்.
காஷ்மீரை இணைத்துக்கொள்ள விரும்பிய பாகிஸ்தான், தனது இராணுவத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின.
காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அதனை சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இந்தியாவும் கூறி வருகின்றன.
பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக்கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இரு நாடுகளும் போட்டியிட்டன.
இந்தப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்குச் சென்றதால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 21.04.1948 இல் தீர்மானம் (47) நிறைவேற்றப்பட்டு, இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது நிறைவேறவில்லை.
மேலும் காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஐ.நா.மன்றத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. பண்டித நேரு தலைமையிலான இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது.
ஆனால். பிரதமர் நேரு, ஒப்பந்தப்படி காஷ்மீரத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தாமல், ஐ.நா. ஒப்பந்தத்தை கை கழுவினார். காஷ்மீர் மக்களின் தனித்தன்மையை நிலைநாட்டிட அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ உருவாக்கப்பட்டு, காஷ்மீரத்திற்கு சிறப்புரிமை வழங்கப்பட்டது.
காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கப்பட்ட போதே, ஜனசங்கத் தலைவர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி அதனை எதிர்த்தார். தற்போது நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுவிட்ட பாரதிய ஜனதா கட்சி அரசு, தமது இந்துத்துவ மதவாதக் கண்ணோட்டத்தைச் செயல்படுத்தி இருக்கின்றது.
காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீர்மூலம் ஆக்கிவிட்டு, ‘ஆளுநர் ராஜ்யம்’ நடத்துகின்ற பா.ஜ.க. அரசு, காஷ்மீர் மக்களின் உணர்வுப்பூர்வமான எண்ணங்களைப் பொசுக்கிவிட்டு, அம்மக்களின் கருத்தறியாமல் ஏதேச்சாதிகாரமான முறையில் செயல்பட்டு இருக்கின்றது.
காஷ்மீர் மக்கள் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று கொந்தளிக்கின்ற வேளையில், அங்கு தீவிரவாதம் மேலும் வலுவடையும். இந்தியாவின் பகை நாடுகள் காஷ்மீரத்தைப் பன்னாட்டு விவகாரமாக மாற்றுவதற்கு முயலும். ஐ.நா. மன்றம் தலையிடும் நிலையும் உருவாகி இருக்கின்றது.
வளர்ச்சியின் பெயரால் காஷ்மீர் பள்ளத்தாக்கு இனி பெரும் குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு, எழில் கொஞ்சும் காஷ்மீர் சிதைக்கப்பட்டுவிடும்.
காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ‘வரலாற்றுப் பிழை’ மீள முடியாத புதைகுழிக்குள் இந்தியாவைத் தள்ளி இருக்கின்றது என்பதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.
தீர்மானம் 2:
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆகஸ்டு 5 ஆம் தேதி காலை 11 ம ணி அளவில் நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் சந்தித்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கோரிவிட்டு, தமிழகம் எதிர்நோக்கி இருக்கும் பேராபத்துகளையும், பிரதமரின் நேரடி கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைத் தொழிலைக் காக்க வேண்டும்.
நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்; அணை பாதுகாப்பு மசோதா கூடாது; கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக் கூடாது; சோழவள நாட்டைப் பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அளித்தார்.
இத்தகையத் திட்டங்களால் தமிழ்நாடு சந்திக்கப் போகும் விபரீதங்களைக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பிரதமரிடம் விளக்கினார்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.
கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்டினால் அதன் பிறகு தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்காது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். இதன் விளைவுகள் கேடாக முடியும். இந்தியாவில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்காலத் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டுவிடும். எனவே. மேகேதாட்டு அணை கட்டுமானத்தைத் தடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
அணைப் பாதுகாப்பு மசோதாவால் இந்தியாவில் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். அந்தந்த மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்றால். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கேட்கும் நிலை வரும் என்று தெரிவித்தார்.
2010 டிசம்பர் 5ஆம் தேதி அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை வைகோ சந்தித்து. அணை பாதுகாப்பு மசோதாவை நீங்கள் நிறைவேற்றினால், சோவியத் ரஷ்யா போல இந்தியா தனித்தனி நாடகள் ஆகும் நிலைமை ஏற்படும் என்று தன் கவலையைத் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டு, அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைத்தார். இன்று அதே கருத்தை பிரதமர் மோடியிடமும் வலியுறுத்தினார். இதே நிலைமை நீடித்தால், இந்திய சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றபோது, இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்காது. வரப்போகின்ற ஆபத்தைச் சொல்ல வேண்டியது தனது கடமை என்றும் பிரதமரிடம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப் பிரிவு 370, 35ஏ வழங்கி உள்ள சிறப்பு உரிமையைப் பறித்தால், அதன் விளைவுகள் விபரீதமாகக்கூடும். காஷ்மீர் பிரச்சினை என்பது கொசாவோ, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போல ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கருத்தைக் கவனமாகக் கேட்டறிந்த பிரதமர் மோடி அவர்கள், ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காக பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து வலியுறுத்திய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களை உரித்தாக்குகிறது.
தீர்மானம் 3:
மாநிலங்கள் அவையில் இந்திய மருத்துவ ஆணைய மசோதா பற்றிய விவாதம் ஆகஸ்டு 2 ஆம் தேதி நடைபெற்றது. மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் விவாதங்களுக்கு இந்தியில் பதில் கூறத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இது மருத்துவம் குறித்த விவாதம். அதில் நுணுக்கமான சொற்களை ஆங்கிலத்தில்தான் சொல்ல முடியும். எனவே, நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார்.
அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் உரையாற்றினார். உடனே, வடநாட்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, அமைச்சர் இந்தியில்தான் பேச வேண்டும் என்று கூச்சல் போட்டனர்.
உடனே வைகோ அவர்கள் இந்தியில் பேசக்கூடாது; உங்களுக்கு இந்தி வேண்டுமா? இந்தியா வேண்டுமா? உங்களுடைய வெறிப்போக்கு இந்தியாவை உடைத்துவிடும் என்று உரத்த குரலில் முழங்கினார்.
வைகோவைப் பார்த்து ஆத்திரத்தோடு இந்தியில் கூச்சல் போட்டார்கள். தேச விரோதி என்றார்கள். நீங்கள் இந்து ராஷ்டிரா வெறியர்கள். உங்கள் கூச்சல்களுக்கு நான் அஞ்சமாட்டேன். இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எரித்து சிறைக்குப் போனவன் நான் என்று வைகோ பதிலடி கொடுத்தார். மோதல் ஏற்படும் நிலை உருவானது.
மாநிலங்கள் அவையில் இந்தி வெறியர்கள் நூறு பேர் எழுந்து நின்று இந்தியில் கூச்சல் எழுப்பியபோது, “ஒழியட்டும்! ஒழியட்டும்! இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்! அழியட்டும்! அழியட்டும் இந்தி ஆதிக்கம் அழியட்டும்! ஒழிகவே! ஒழிகவே! இந்தி ஆதிக்கம் ஒழிகவே!” என்று வைகோ அவர்கள் தீரத்துடன் தனி ஒருவராக துணிச்சலுடன் தொடர்ந்து முழக்கமிட்டார்.
அதன்பின்னர் அமைச்சர் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி உரையாற்றினார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், மொழிப் பிரச்சினையால் இங்கே மோதல் ஏற்பட்டது. இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம். இனிமேல் திணிப்பும் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்றார். 41 ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலங்கள் அவையில் இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அதே உணர்வுடன் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக சிம்மசொப்பனமாக திகழ்வதற்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4:
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15, 2019 அன்று சென்னையில் முழு நாள் மாநாடாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை, கழகம் அனுசரிக்கும் சூளுரை நாளான அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்குவது என்றும், கழகத்தின் அமைப்புத் தேர்தல்களை அடுத்த ஆண்டு 2020 ஆகஸ்டு மாதத்திற்குள் நடத்தி முடிப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 6:
கரூர் மாவட்டம், புகளூர் விசுவநாதன், மணல் கொள்ளையை எதிர்த்துப் பலப் போராட்டங்களை நடத்தியவர். காவிரி பாதுகாப்புக் கூட்டங்களை புகளூர் விசுவநாதன் நடத்தியபோது, சமூக செயல்பாட்டாளர் முகிலன் அதில் பங்கேற்று இருக்கிறார். தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் முகிலன் வழக்கில் பொய் சான்று அளிக்குமாறு காவல்துறை புகளூர் விசுவநாதனிடம் மிரட்டல் விடுத்திருக்கிறது. அதற்கு அடிபணிய மறுத்ததால், சமூக ஆர்வலர் விசுவநாதனை ஆகஸ்டு 7ஆம் தேதி இரவு அவரது வீட்டுக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அவரை தரதரவென இழுத்து கை கால்களில் காயம் ஏற்படும் அளவுக்கு பலவந்தமாக பலத்தைப் பிரயோகித்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
சட்ட நடைமுறைகளையும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், புகளூர் விசுவநாதனை தீவிரவாதி போன்று சித்தரித்து, பொய் வழக்கில் கைது செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழுக்கும், தமிழ்பண்பாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிய பெருமைமிக்க குடும்பத்தைச் சேர்ந்த விசுவநாதனின் அண்ணன் திரு. இளங்கோ அவர்கள். டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, மொழிப் போராட்டத் தியாகிகளுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தரக்கோரினார். அதனை கலைஞர் நிறைவேற்றினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த குடும்பப் பின்னணியும், தமிழ் உணர்வும், சமூக உணர்வும் மிக்க புகளூர் விசுவநாதன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்று, உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
மேலும், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 38 வழக்குகளைப் போட்டு, ஆதிக்கத்திற்கு எதிரான அவரின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. சமூக ஆர்வலர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு, அடக்குமுறையை ஏவும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
தமிழகத்துக்கு வீட்டு வசதி, மகளிர் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்கு 14 ஆவது நிதி ஆணையம் 2017-18 ஆம் நிதி ஆண்டில் 5,920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியை குறிப்பிட்ட கால அளவுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், அந்த நிதி மத்திய அரசுக்கு திரும்பச் சென்றுவிடும். தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் 3676 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல், மத்திய அரசுக்கு திரும்பச் சென்றுள்ளது. மத்திய தணிக்கைத் துறை வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் மூலம் தமிழக அரசின் மெத்தனப் போக்கு அம்பலமாகி இருக்கிறது.
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 194.78 கோடியும், கிராமப் புற தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 97.65 கோடியும், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்ட்ட நிதியில் 247.84 கோடியும் பயன்படுத்தப் படாததால், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மகளிர் மேம்பாட்டுக்கான சுயஉதவிக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட 23.84 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு வழங்குவது இல்லை என்று தமிழக அரசு கூறி வரும் நிலையில், தமிழகத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3676 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைத்தது கண்டனத்துக்கு உரியது.
தீர்மானம் 8:
இந்திய ஜவுளித்துறையில் மிக முக்கிய தொழிலாக இருப்பது பருத்தி நூல் தயாரிப்பு ஆகும். தமிழகமும் பருத்தி நூல் தயாரிப்புத் தொழிலில் முன்னணியில் உள்ளது. உலகின் மொத்த பருத்தி நூல் தேவையில் 26 சதவிகிதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. நாட்டின் மொத்த பருத்தி நூல் உற்பத்தியில் 32 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், 27 சதவிகிதமாக இது குறைந்துள்ளது. இந்தியாவின் நூலை இறக்குமதி செய்வதில் சீனா முதலிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த இடத்திலும் உள்ளன.
இந்திய நூலுக்கு சீனாவில் 3.5 சதவிகிதமும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 சதகிவிதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொண்டு, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து பருத்தி நூலை அதிகமாக இறக்குமதி செய்கின்றன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் நூற்பாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்), கடந்த ஆண்டைக் காட்டிலும், பருத்தி நூல் ஏற்றுமதி சுமார் 33 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் பாகிஸ்தானுக்கும் இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், இனி பாகிஸ்தானிலிருந்தும் சீனா தமது தேவைக்கான நூலை கொள்முதல் செய்துகொள்ளும். இதனால், இந்தியாவிலிருந்து சீனாவுக்கான நூல் ஏற்றுமதி மேலும் குறையும்.
கடந்த சில மாதங்களாக நலிந்து வரும் நூற்பாலைகளுக்கு இது மேலும் ஒரு பேரிடியாகும். எனவே, ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை, வட்டி சலுகை, மத்திய - மாநில அரசுகளுக்கான வரிகளைத் திரும்பப் பெரும் சலுகை, சர்வதேச விலைக்கு நிகராக இந்திய நூலின் விலையைக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நூற்பாலைகள் நலிவு அடைவதைத் தடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமையை தவிர்க்க முடியும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
கோவை, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பெரும் மழை பெய்துள்ளது. அவலாஞ்சி பகுதியில் நேற்று காலை 8 மணி அளவில் அதிகபட்சமாக 91 செ.மீ. மழை பதிவானது. இதனால் அவலாஞ்சி, மேல்பவானி, எமரால்டு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவுகளால் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழை காரணமாக ஓடைகள், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே, சர்கார்பதி வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 22 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலும் கன மழை கொட்டியதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மீட்புப் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 10:
ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கதிர்ஆனந்த் அவர்களை வெற்றிபெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment