Sunday, April 26, 2020

பந்தல் மற்றும் ஒலி-ஒளி அமைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குக! வைகோ அறிக்கை!

கொரோனா ஊரடங்கு காரணமாக இலட்சக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் திருமண விழாக்கள், பள்ளி - கல்லூரி விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் அரசு விழாக்களுக்கு பந்தல் அமைப்பது, ஒலி-ஒளி பெருக்கி ஏற்பாடு செய்வது போன்ற பணிகளில் சுமார் 10 இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் வாடகைப் பாத்திரங்கள், மேடை அலங்காரம், வாடகை நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் போன்ற சிறுதொழில் சார்ந்தவர்களும் அடங்குவர்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதுடன், இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை, பொதுப்பங்கீட்டுக் கடைகள் மூலம் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 26-04-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment