Sunday, April 12, 2020

மலேசியாவில் இறந்த லோகநாதன் உடல் எரியூட்டப்பட்டது - வைகோ அவர்களுக்கு குடும்பத்தார் நன்றி!

காரைக்குடி கீழச்செவல்பட்டிக்காரர் லோகநாதன். மலேசியாவில் பல கோவில்களில் ஐந்து ஆண்டுகள் பூசாரியாகப் பணிபுரிந்தவர்.

அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்தவர், மூன்று மாதங்களுக்கு முன்பு, மீண்டும் மலேசியா சென்றார்.

பினாங்கு முனீஸ்வரர் கோவிலில் பணி செய்து வந்தார். முன்பே அந்தக் கோவிலில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்தான்.

ஆனால், இந்த முறை, உரிய விசா இல்லாமல் கூடுதல் காலம் தங்கி இருந்ததற்காக, மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவால் சிறைக்கு உள்ளேயே இறந்து போனார். அவரது உடல், பினாங்கு மருத்துவமனையில் இருந்தது.

கொரோனா காரணமாக, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூடி இருக்கின்றது.

உரிய சான்றிதழ்கள் இல்லாமல், ஏப்ரல் 30 வரை எதுவும் செய்ய முடியாத நிலை.

லோகநாதனின் உடலை, இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அங்கேயே எரித்து விடுவது என, அவரது குடும்பத்தார் முடிவு செய்தார்கள்.

லோகநாதனின் சகலர் தண்டபாணி, மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வருகின்றார்.

திரு இராஜாராம் பாண்டியன் மூலமாக இந்தச் செய்தியைக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

சிறைக்குள் அவர் தாக்கப்பட்டாரா என்பது குறித்துத் தலைவர் வைகோ அவர்கள் கேட்டு அறிந்தார்கள்.

லோகநாதன் தாக்கப்படவில்லை. அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது. அதற்கான மருந்து மாத்திரைகளைச் சாப்பிடவில்லை. நாங்கள் அவ்வப்போது சிறையில் பார்த்து வந்தோம். தவிர, மலேசியக் காவல்துறையினர் அடிக்கவில்லை என தண்டபாணி தெளிவுபடுத்தினார்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.

உரிய சான்றிதழ்களைப் பெறவும், லோகநாதன் உடலைப் பினாங்கிலேயே எரிப்பதற்குமான உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, இரண்டே நாட்களில் அந்தப் பணிகள் நிறைவு பெற்றன.

பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு உறுதுணையாக இயங்கி வருகின்ற, பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி முன்னின்று ஏற்பாடுகள் செய்தார்.

லோகநாதன் உடல் நேற்று (10.4.2020) மாலை எரியூட்டப்பட்டது.

20 நாள்களாக உடலை எடுக்க முடியாமல் இருந்தோம். இங்கே ஏப்ரல் 30 வரை ஒன்றும் செய்ய முடியாது எனக் கருதினோம்.

வைகோ அவர்கள் முயற்சியால், லோகநாதன் உடலை மருத்துவமனையில் இருந்து பெற முடிந்தது. அவருக்கு எங்கள் நன்றி, என தண்டபாணி மற்றும் ராஜாராம் பாண்டியன், லோகநாதன் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 11-04-2020 தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment