Thursday, April 30, 2020

சோதனைகளைக் கடந்து வெற்றியை ஈட்டட்டும் தொழிலாளர் வர்க்கம்! வைகோ மே நாள் வாழ்த்து!


முதலாளித்துவ தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழிலாளர்கள் 14 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இத்தகைய உழைப்புச் சுரண்டலை எதிர்த்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. 1836 இல் இங்கிலாந்தில் தோன்றிய ‘சாசன இயக்கம்’ உலகின் பெருந்திரள் தொழிலாளர்கள் கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக வளர்ந்தது. சாசன இயக்கத்தின் முக்கியக் கோரிக்கையாக 10 மணி நேர வேலை முன்வைக்கப்பட்டது. 1842 ஆம் ஆண்டில் சாசன இயக்கம் சார்பில் அறைகூவல் விடுத்த பொது வேலை நிறுத்தம், அடக்குமுறை மூலம் தோல்வி கண்டது பிரிட்டனில்.


ஆனால், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தொழிலாளர் போராட்டம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியது. 1850களில் காரல் மார்க்ஸ் சாசன இயக்கத்திற்கு வழிகாட்டியாக அமைந்தார்.

ஆஸ்திரேலியா தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக மெல்போர்ன் விக்டோரியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேரம் கோரிக்கையை முன்வைத்து உலகிலேயே முதன் முதலில் வெற்றி கண்டனர்.

சர்வதேச தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இணைந்து ‘முதல் அகிலம்’ எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை 1864 இல் ஏற்படுத்தினர். உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் தொழிலாளர் பிரதிநிதிகள் கூடிய முதலாம் அகிலத்தின் மாநாடு 1850 களில் ஜெனிவாவில் நடந்தபோது, உரையாற்றிய காரல்மார்க்ஸ், 8 மணி நேரம் வேலை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்குக் குரல் எழுப்பினார்.

இதனால் ஊக்கம் பெற்ற அமெரிக்க தொழிலாளர் இயக்கங்கள் 1866 இல் ஒன்றிணைந்து, ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை’ உருவாக்கி, 8 மணி நேரம் வேலைக் கோரிக்கையை முன் வைத்தன.

1886 மே 1 இல் அமெரிக்காவில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. இந்த நிகழ்வுதான் மே தினம், ‘தொழிலாளர் தின’மாக ஆவதற்கு அடித்தளம் அமைத்தது.

1886 மே முதல் நாளில் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் விடுத்த வேலை நிறுத்த அறைகூவலில் 4 இலட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர் வர்க்கத்தின் ஆர்ப்பாட்டம், பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது. 1886 மே 3 இல் தொழிலாளர்களின் பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியானார்கள்.

மறுநாள் மே 4 இல் சிகாகோ நகரில் ‘ஹே மார்க்கெட்’ திடலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தித் தாக்கியது. தொழிலாளர்கள் ரத்தம் ‘ஹே மார்க்கெட்’ திடலை நனைத்தது.

தொழிலாளர் போராட்டத்தைத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட தொழிலாளர் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்சர் ஆகிய நால்வரும் 1887 நவம்பர் 11 இல் தூக்கிலிடப்பட்டனர்.

நவம்பர் 13, 1887 இல் நடந்த தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் தொழிலாளர்கள் திரண்டனர்.

1889 ஜூலை 14 இல் பாரீஸ் நகரில் கூடிய சர்வதேச தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் 8 மணி நேர வேலை போரட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், 1890 மே முதல் நாளை ‘சர்வதேச தொழிலாளர் நாளாக’க் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எட்டு மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்காக இரத்தம் சிந்திய தொழிலாளர்களுக்கு, உயிரிழந்த தியாகிகளுக்கு மே நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.

இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறித்து வரும் பா.ஜ.க. அரசின் கொடுமையை எதிர்த்துப் போராடுவோம்!

கொரோனா கொடிய பேரிடரால் இந்தியாவில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தெரிவித்து இருக்கின்றது. வேலை வாய்ப்பை இழந்து வாடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் துயரத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

சோதனைகளைக் கடந்து, வெற்றிகளை ஈட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு மே நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 30-04-2020 தெரிவித்துள்ளார்,

No comments:

Post a Comment