Friday, May 1, 2020

கொடி உயர்த்திக் கொண்டாடுவோம்; விடியலின் வெற்றியைக் காண்போம்!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!
மே 6, 2020 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கால் நூற்றாண்டைக் கடந்த நமது மறுமலர்ச்சிப் பயணத்தைத் திரும்பி நோக்கினால் மலைப்பாக இருக்கின்றது. தியாகத் தணலில் பூத்த நெருப்பு மலர்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
நம்மைவிட வலுவானவர்கள், பொருளாதார வலிமை, விளம்பர வெளிச்சம் இவை அனைத்தையும் பெற்று இருந்தவர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றம் என ஆட்சிமன்றங்களில் இடம்பெறும் பெருவாய்ப்பினைப் பெற்று இருந்தவர்கள் எல்லாம், ஒரு அரசியல் இயக்கம் தொடங்கி அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை நாடு அறியும்.
அதிகாரத்தின் நிழலைக்கூட மிதிக்காமல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளாக உயிர்த்தன்மையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. அதற்கு அடிப்படைக் காரணம், திராவிட இயக்கத்தின் ஆலுக்கு விழுதாக இந்த மண்ணில் எழுந்த கழகத்தை ஆணி வேராகத் தாங்கிப் பிடிக்கும் இலட்சக்கணக்கான கண்ணின் மணிகளான தொண்டர்களே நீங்கள்தான்.
இது தொண்டர்களால் விதை ஊன்றப்பட்ட இயக்கம்; கண்ணீரும், வியர்வையும் சொரிந்து, தொண்டர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம்; தொண்டர்களால் கட்டி எழுப்பப் பட்ட இயக்கம்.
என் ஊனிலும், உதிரத்திலும் கலந்து இருக்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் ஊட்டிய குடும்பப் பாச உணர்ச்சிதான் இந்த மாபெரும் இயக்கத்தின் ஆதார சுருதியாக இருக்கின்றது.
வேலூர் சிறைச்சாலையில் பொடா கைதியாக 19 திங்கள் அடைபட்டு இருந்தபோது, சிறையிலிருந்து கண்ணின் மணிகளுக்கு நான் எழுதிய மடல்தான் என் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் இன்னும் நிறைந்து இருக்கிறது.
“நமது இயக்கம் பாசம் என்னும் ரத்தத்தாலும், உறுதி எனும் நரம்பினாலும் பின்னப்பட்டு இருக்கின்றது. இந்தக் கூட்டினை எந்த உற்பாதத்தாலும் சிதைக்க முடியாது. நமது மணி மாளிகைச் சுவரின் ஒவ்வொரு செங்கல்லிலும் உங்களின் உன்னதமான தியாகமும், உழைப்பும் கலந்து இருக்கிறது.
மறுமலர்ச்சி தி.மு.கழகம் உணர்ச்சியின் உயிர்த்துடிப்பு. அதன் உயிர் வரிகள் தொண்டர்கள்.”
சிறை மடலில் நான் குறிப்பிட்டிருந்த இந்த வரிகள் எக்காலத்திற்கும் பொருந்தும்.
தேர்தல் அரசியலில் அறுவடை செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் வரலாற்றில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் படைத்திருக்கின்ற சாதனைகள் சரித்திர ஏட்டில் பொறிக்கத்தக்கவை.
“செந்தமிழை செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்தது என்று
குந்திக் குரல் எடுத்துக் கூவாய் கருங்குயிலே”

என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வீர வரிகளுக்கு இலக்கணமாக செந்தமிழர் நாட்டில் ‘வெந்தணலாக’ எழுந்ததுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
“கெடல் எங்கே தமிழர் நலம் அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!”

என்று ஆணையிட்ட பாவேந்தரின் கருத்துக்கு செயல் வடிவம் தந்தது மறுமலர்ச்சி தி.மு.க. அல்லவா?
பூமிப் பந்தில் வாழுகின்ற தமிழர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நமக்காக ஒரு இயக்கம் நம் தாயகத்தில் வீறுகொண்டு இயங்குகிறது. அதுதான் மறுமலர்ச்சி தி.மு.க. என்று ஏற்றிப் போற்றும் பெருமையைப் பெற்று இருக்கிறோம்.
கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு முதலில் நீளுகின்ற கரங்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வின் கரங்கள் என்பதை உலக தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்து இருக்கிறது.
தமிழர்களின் இன்னொரு தாயகமாம் தமிழீழ மண்ணில் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு கழகம்தான் தமிழகத்தில் களம் அமைத்து ஆதரவு தருவதில் சமரசமின்றி இன்னமும் உறுதியாக இருக்கின்றது. அடக்குமுறைச் சட்டங்கள் நம்மை சுற்றி வளைத்தபோதும், அரசியல் எதிரிகள் நமது தமிழீழத் தாகத்தையே மனதில் கொண்டு வீழ்த்த முற்பட்டபோதும், அவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், துணிந்து ஈழத்திற்காகக் குரல் எழுப்பி வருகின்றோம்.
மாவீரர் திலகம் பிரபாகரன் முப்பது ஆண்டு காலம் வழி நடத்திய ஈழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள இனவெறியர் கூட்டம் ஆட்டம் போடுகிறது. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்கத் துணை நின்ற இந்தியா, இப்போதும் - எப்போதும் சிங்களத்தின் பக்கம்தான் நிற்கும் என்று குதிக்கின்றது.
உலக அரங்கத்தில் ‘தமிழீழத்தின் குரலை நசுக்கிவிட்டோம்’ என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற சிங்கள அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். தமிழீழ விடுதலை வேட்கை வெற்றி பெறுவதற்காக அரசியல் லாப நட்டங்களைப் பாராமல் தொடர்ந்து குரல் எழுப்பும் கடமையை நாம்தான் மேற்கொண்டு வருகிறோம்.
தமிழீழத்தை மலரச் செய்ய பொது வாக்கெடுப்பு தேவை என்று முதன் முதலில் உலகிற்கு சொன்னது அடியேன், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் மட்டுமே!
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து நீதிமன்றங்களின் நெடியப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு இருப்பதும் கழகம்தான்.
தூக்குக் கயிற்றை முத்தமிட நாள் குறிக்கப்பட்ட மூன்று தமிழர் உயிரைக் காப்பதற்கு எனது உயிரணைய நண்பர், நினைவில் வாழும் புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியை சென்னை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வாதாடச் செய்து, மூன்று தமிழர் தூக்குக் கயிற்றை நிரந்தர மாக அறுத்து எறிந்தவர்கள் நாம் என்பதை வரலாற்றில் எவராலும் மறைத்துவிட முடியாது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்ப தற்கு களம் பல கண்ட பெருமை கால் நூற்றாண்டு கால தமிழக வரலாற்றில் நம்மைவிட வேறு எந்த இயக்கத்திற்கும் இருக்க முடியாது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முனைப்புடன் நின்று போராடியதால்தான் முல்லைப் பெரியாறு அணை தகர்க்கப் பட்டுவிடாமல் காப்பாற்றப் பட்டது.
காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட களம் காணுவதில் முன்னணியில் நின்றதும் கழகம்தான்.
சோழவள நாட்டின் நெற்களஞ்சியத்தைச் சூறையாடுவதற்கு மீத்தேனும், ஹைட்ரோ கார்பனும் எடுப்பதற்கு மத்திய அரசும், மத்திய அரசின் கைப்பாவையான அ.இ.அ.தி.மு.க. அரசும் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சித்தபோது, வேளாண் அறிஞர் நினைவில் வாழும் நம்மாழ்வார் அவர்கள் முதல் குரல் கொடுத்தார். அதனை வழிமொழிந்து மக்களை விழிப்படையச் செய்வதற்கு காவிரிப் படுகை தீரத்தில் முதன் முதலாக விழிப்புணர்வுப் பயணம் நடத்தியதும் கழகம்தான்.
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரிப் படுகையில் நாசகார மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களைச் செயல் படுத்தக் கூடாது என்று ‘காவிரி பாதுகாப்பு இயக்கத்தை’ உருவாக்கி, அதற்கு நானே ஒருங்கிணைப்பாளராக இருந்து போராட்டங்களை முன் னெடுத்தோம். அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், சமூக நல இயக்கங் கள் என்று 250க்கும் மேற்பட்ட இயக்கங்களை ஓரணியில் திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டங் களை நடத்தினோம்.
வருமுன் காக்கும் முன்னோடி காவல் படையாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் வீறுகொண்டு நின்று மக்களை அணி திரட்டியதால்தான் இன்று காவிரி பாயும் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாயிற்று என்பது காலத்தின் கல்வெட்டாய் என்றும் நிலைக்கும்.
காவிரியின் குறுக்கே இராசி மணல், மேகே தாட்டுவில் கர்நாடகத்துக்காரன் அணை கட்டித் தண்ணீரைத் தடுக்க சதித் திட்டம் தீட்டி இருப்பதை 2014 டிசம்பர் முதல் வாரத்தில் முதன் முதலில் நாட்டுக்குச் சொன்னவர்கள் நாம். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 2012 ஏப்ரல் 30 ஆம் நாள் கிருஷ்ணகிரியில் கர்நாடகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதும் கழகம்தான்.
நாகை, கடலூர் மாவட்டத்தில் 57,500 ஏக்கர் விளைநிலங்களைப் பறித்து பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017 ஜூலை 19 இல் தமிழக அரசு குறிப்பாணை வெளியிட்டதிலிருந்து, எதிர்த்துக் குரல் கொடுத்து அரசை பணியச் செய்ததும் மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான்.
அமராவதி, பவானி, பெண்ணையாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் உரிமைகளுக்கு அண்டை மாநிலங்கள் பாதகம் விளைவித்த போதெல்லாம் மறுமலர்ச்சி தி.மு.க. போராட்டக் களம் சென்று கடமை ஆற்றி இருக்கின்றது.
தேனி மாவட்டத்தையும், முல்லைப் பெரியாறு அணையையும் காப்பதற்கு மத்திய அரசின் நியூட்ரினோ ஆய் வகத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடி தடுத்து நிறுத்தியது மறுமலர்ச்சி தி.மு.கழகம் தான்.
தமிழ்நாட்டின் ‘மகாரத்னா’ நிறுவனமாக சுடர்விடும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இன்று பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது என்றால், வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது, என்.எல்.சி. தனியார் மயம் ஆக விடாமல், தடுத்தது மறுமலர்ச்சி தி.மு.க. என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என்பதை மக்கள் மன்றத்தில் குறிப்பாக தமிழ்நாட்டு மாதர்குலத்தின் நெஞ்சில் பதிய வைத்து, மதுக்கடைகளுக்கு மூடு விழா நடத்த தன்னெழுச்சியான போராட்டங்கள் தமிழ்நாட்டில் வெடித்தது எனில் அதற்கான விதையை தூவியது மறுமலர்ச்சி தி.மு.க. அல்லவா?
உலகக் கோடீஸ்வர நிறுவனங்களில் ஒன்றாகிய வேதாந்தா குடும்பத்தை எதிர்த்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசுகார நச்சு ஆலை அமைவதைத் தடுத்து, எண்ணற்ற போராட்டங்களை நடத்தி, உயர்நீதிமன்றத்திலும் - தீர்ப் பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நானே சென்று வாதாடினேன். இன்று வரையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முக்கியக் காரணம் நமது போராட்டம் என்பதை நாடு அறியும்.
2018 மே 22 இல் துப்பாக்கிச் சூடு நடந்து 13 உயிர்கள் அண்ணா தி.மு.க. அரசின் காவல்துறையால் பறிக்கப்பட்டபோது அன்று இரவிலேயே தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் நேரில் சந்தித்து கண்ணீரைப் பகிர்ந்துகொண்டேன்.
இவ்வாறு தமிழ்நாட்டின் நலனுக்காக கடந்த 26 ஆண்டுகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை தியாகம் செய்து, எரியும் மெழுகுவர்த்தியாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இந்த மணிமாளிகையை தாங்கிக் கொண்டிருக்கின்ற அடிக்கற்களாகத் திகழும் கண்ணின் மணிகளின் தியாகத் தால், தன்னலமற்ற மக்கள் தொண்டால் அரசியல் களத்தில் வீழ்த்த முடியாத சக்தியாக கழகம் உயர்ந்தோங்கி நிற்கின்றது.
திராவிட இயக்கத்தின் சமூக நீதி தழைக்கவும், தமிழ் இன, மொழி, அரசியல், பொருளாதார உரிமைகளைக் காக்கவும், திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கூறாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய இலட்சியப் பாதையில் கழகம் தடம் மாறாமல் பயணிக்கிறது.
எனவேதான் நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர் குலைத்து வரும் இந்துத்துவ மதவாதக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க, திராவிட இயக்க ஒற்றுமையைப் பேண வேண்டும் என்ற மகத்தான அரசியல் முடிவுடன், தொலைநோக்குப் பார்வையுடன் நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கரம் கோர்த்தோம். அதில் உறுதியாகவும் இருக்கிறோம்.
மனிதகுலம் சந்தித்த பல பேரழிவுகளில் மிகவும் கொடிய கொரோனா தொற்று நோயால், உலகமே அச்சத்தில் உறைந்து கிடக்கின்றது. இரண்டு இலட்சம் மக்கள் மடிந்துவிட்டார்கள்.
மார்ச் 24 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மே 3 வரையில் மட்டுமல்ல, அதற்கும் மேலாக இன்னும் சில நாட்கள் நீடிக்கும் நிலைமைதான் இருக்கின்றது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க தனித்து இருப்பதுதான் ஒரே வழி. சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கவும், அதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.
கொரோனா ஊரடங்கால் இலட்சக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்து நிர்க்கதியாக ஆகி இருக்கின்றார்கள். ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வோம்! மறுமலர்ச்சி தி.மு.க என்றால், செஞ்சிலுவைச் சங்கம் போன்று மக்கள் தொண்டாற்றுவோம் என்று முந்தைய மடலில் குறிப்பிட்டு இருந்தேன்.
சென்னை தொடங்கி, கன்னியாகுமரி வரையில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் கொரோனா நேரத்தில் மக்களின் பசி போக்கவும், நிவாரணப் பொருட்களை வழங்கவும், ஊருக்கு ஊர் முனைப்புடன் நின்று தொண்டாற்றி வருவதை எண்ணி எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
கைப் பொருளை கழகத்தின் வளர்ச்சிக்கு செலவழித்து வரும் கழகக் கண்மணிகள் மக்களின் துயர் துடைப்பதிலும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செல வழிக்கிறார்களே! இப்படிப்பட்டத் தூய தொண்டர்களின் குடும்பங்கள்தானே கழகம் 26 ஆண்டுகள் இலட்சியப் பயணத்தில் பீடு நடை போடுவதற்குக் காரணமாக இருக்கின்றன. அத்தகைய தொண்டர்கள் மனம் மகிழ்ந்து கொண்டாடும் வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபுரி நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான் என் நெஞ்சில் அலைகளாக மோதிக் கொண்டு இருக்கின்றன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் 1961 இல் நடந்த தி.மு.கழகத்தின் 3ஆவது மாநாட்டு உரையில் குறிப்பிட்டதைத் தான் என் உள்ளத்தில் பதியம் போட்டு வைத்திருக்கின்றேன்.
“எனது குடும்பப் பெருமையையோ, பண வலிமையையோ நம்பி என்னை நீங்கள் தலைவராக்கவில்லை. உங்களுடைய ஆற்றலினால்தான் நான் இந்த வலிமையைப் பெற்று இருக்கின்றேன். இலட்சக்கணக்கான தம்பிமார்களும் தங்கள் இதயத்தை என்னிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். நீங்கள் காட்டும் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் ஈடாக உடல் வளம் எனக்கு இருக்குமா? என்பதில் உறுதி இல்லை. ஆனால், உற்சாகம் பற்றிய ஐயம் குறுக்கிட வில்லை.”
பேரறிஞர் அண்ணாவின் மணி வாசகத்தையே திருவாசகமாக நானும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
சோதனைப் புயல்களை எல்லாம் கடந்து கழகம் கரைசேர்ந்துவிட்டது. இனி “விடியலின் வெற்றியைக் காண்போம்” என்ற உறுதி எனக்கு இருக்கின்றது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 27 ஆம் ஆண்டு தொடக்க விழாவைக் கொடி உயர்த்திக் கொண்டாடுவோம்!
கொரோனா கொள்ளை நோய் பீடித்துள்ள இந்த நேரத்தில், ஏழை எளிய மக்களுக்கு முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டுவோம்!
திராவிட இயக்க அரசியல் வானில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டேதான் இருக்கும்.
கண்மணிகளே,
எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ
சங்கொலி, 08.05.2020

No comments:

Post a Comment