Wednesday, June 17, 2020

காவல்துறையினருக்கான கொரோனா நிவாரணத்தை உடனே வழங்குக!தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை!

அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கின்ற கொடிய கொள்ளை நோய் கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினர் தங்கள் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாது மரணமே நேரினும் அதனை எதிர்கொள்ளும் மனத் துணிவுடன் இரவு பகலாகத் தொண்டாற்றி வருகின்றனர்.

கால நேரமின்றிப் பணியாற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தொற்று நோய் பாதித்தால் இரண்டு இலட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதுவரையில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் அறிவித்தவாறு நிவாரணம் எதுவும் தரவில்லை. சொன்ன வாக்குறுதியை தமிழ்நாடு அரசு காப்பாற்றாவிடில், அரசின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதோடு, அரசுப் பணிகள் ஆங்காங்கே முடங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அறிவித்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 17-06-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment