Saturday, June 6, 2020

வேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது. வைகோ அறிக்கை!

கொரோனா என்ற தீநுண்மித் தொற்று நமக்குப் பெரும் பாடம் புகட்டி இருக்கின்றது. அனைத்து வழிகளிலும், தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் தேவையை வெகுவாக உணர்த்தி விட்டது. குறிப்பாக, சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் கட்டாயத்தை அனைவரும் புரிந்து கொண்டுள்ளோம். 

இந்த நிலையில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அதைக் கெடுப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த முனைகின்றன. 

அதிலும் குறிப்பாக, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

உலக அளவில் தமிழகத்திற்குப் புகழ் சேர்ப்பது, வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம். 30 ஹெக்டேர் பரப்பில் அமைந்து இருக்கின்றது. புவியின் வடக்கு முனையை ஒட்டி இருக்கின்ற சைபீரியக் கடுங்குளிரில் வாழுகின்ற பறவைகளும், வறண்ட நிலமான ஆஸ்திரேலியாவில் இருந்தும், சுமார் 5000 முதல் பத்து ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து  வருகின்றன. இங்கே தங்கி, இனப்பெருக்கம் செய்கின்றன. 

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற வேடந்தாங்கலில், சுமார் 40 விழுக்காடு பரப்பில், தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க, தமிழக அரசு  முனைகின்ற செய்திகள், வேதனையை ஏற்படுத்துகின்றன. 

சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3 கிலோ மீட்டர் என்கிற அளவிற்குச் சுருக்குவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கின்றது. 

அப்படிச் செய்வதால், பல்வகை உயிர்களின் பாதுகாப்பிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது, என தலைமை வனப் பாதுகாவலரைக்  கட்டாயப்படுத்தி அறிக்கையும் பெற்று இருக்கின்றார்கள். அதை, சுற்றுச்சூழல் துறைச் செயலாளரும் பரிந்துரைத்து இருக்கின்றார். 

இதன் பின்னணியில், அந்தப் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் இருப்பதாகத் தெரிகின்றது. அவர்களுடைய தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவே இந்த நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு இருப்பதாகத் தெரிகின்றது. தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு வேறு எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது, வேடந்தாங்கலைக் குறி வைப்பது, இயற்கைப் பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும். 

ஏற்கனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் பெரும்பகுதி கட்டடங்கள் ஆகி விட்டது. 

நடுவண் அரசில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என ஒரு தனி அமைச்சகம் இருக்கின்றது. ஆனால், இந்தியா முழுமையும், இதுபோன்ற, இயற்கைச் சூழலைக் கெடுக்கின்ற, நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நடுவண் அரசு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்து இருக்கின்றது. 2014 இல் அமைக்கப்பட்ட, தேசிய வன உயிர்இயல் வாரியம், இதுவரை ஒருமுறை கூடக் கூடியது இல்லை. துறையின் அமைச்சரே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கின்றார். 

வளர்ச்சித் திட்டங்களால், வேலைவாய்ப்பைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். ஆனால், சுற்றுச்சூழலும், பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்பட்டால், மனித இனம் வாழவே முடியாது.

பறவைகள் வாழிடத்தின் பரப்பைப் பெருக்குவதற்கு, விரிவுபடுத்துவதற்குத்தான் அரசு முயற்சிக்க வேண்டும்.

மாறாக, வேடந்தாங்கலின் பரப்பு அளவைக் குறைக்க முனையும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும், நடுவண் அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 6-6-2020  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment