Saturday, June 6, 2020

ஆருயிர்ச் சகோதரர் டிஏகே இலக்குமணனை இழந்தேன்! வைகோ உருக்கம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்,  டி.ஏ.கே இலக்குமணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

நெல்லை மாவட்டத்தில் தி.மு-க. வைப் பாடுபட்டு வளர்த்த முனனோடி செயல்வீரர்களுள், எதற்கும் அஞ்சாத தீரர்களுள் ஒருவர் டிஏகே இலக்குமணன் ஆவார். எழுபதுகளில் நாங்குநேரியில் தி.மு.க. வட்டக்கழகச் செயலாளராகப் பணி ஆற்றிய நாள்முதல், 45 ஆண்டுகள் என்னோடு உயிராகப் பழகியவர். தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று, நானும் அவரும, பலமுறை கைதாகி, சிறைச்சாலையில் ஒன்றாக இருந்தோம்.

மாவட்டச் செயலாளராக,   பொதுப்பிரச்சினைகளில், மக்கள் பிரச்சினைகளில் தோழர்களைத் திரட்டி இடைவிடாத போராட்டங்களை நடத்தினார்.

கலகலப்பாக உரையாடி, போராட்டக் களங்களில் முன்னின்று, ஒன்றாக உண்டு, அண்ணனும் தம்பியுமாக உறவாடிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன். 

1977 இல், டாக்டர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது இலக்குமணனோடு சேர்ந்து, ஆயிரக்கணக்கானோர் கைதானோம். அனைவரும் பிணையில் சென்றபின்னரும், நானும் இலக்குமணனும் 87 நாட்கள் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் ஒன்றாக இருந்தோம்.

நெல்லை மாவட்ட தி.மு.க. தொண்டர் படையை உருவாக்குவதில் அவரும், மஸ்தானும், மிக முக்கியப் பங்கு ஆற்றினார்கள்.     

திட்டமிட்டுப் பணி ஆற்றக் கூடிய செயல் ஆற்றல் மிக்கவர். எதற்கும் அஞ்சாமல், ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாது, அச்சத்திற்குச் சற்றும் இடம் இன்றி, துணிச்சலோடு போராட்டக் களங்களில் நிற்கக்கூடிய மாவீரன்தான், சகோதரர் இலக்குமணன் ஆவார்

கடந்த ஆறு மாதங்களில், நெல்லைக்குச் செல்கின்றபொழுது, மூன்று முறை அவரைச் சந்தித்து விட்டு வந்தேன். அண்மையில், அவரது துணைவியாருடன் பேசினேன். அடுத்த முறை நெல்லைக்கு வருகின்றபொழுது வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னேன். 

இந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 6-6-2020  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment