Wednesday, June 24, 2020

தமிழக அரசு நிபந்தனையால் சாட்டர் வானூர்திகள் ரத்து! மஸ்கட்டில் தவிக்கும் தமிழர்களை தாயகத்திற்கு மீட்டு செல்லுமாறு, வைகோ எம்பி அவர்களுக்கு ஓமன் தமிழர்கள் கோரிக்கை!

தலைவர் வைகோ எம்பி அவர்களுக்கு,
வணக்கம்!

கொரொனா கோவிட் 19 தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து நாடுகளும் பயணிகள் வானூர்தி போக்குவரத்தை ரத்து செய்தன. இதனால் வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வேலை இழந்தும், மருத்துவத்திற்காகவும், குடும்ப சூழலாலும் சொந்த நாட்டிற்கு திரும்ப இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வந்தே பாரத் திட்டம் மூலம் ஏப்ரல் மாதம் ஓரிரு வானூர்திகளே ஓமனிலிருந்து, தமிழ்நாட்டு தலைநகர் சென்னைக்கு பயணிகளுடன் வந்துள்ளது. ஜூன் 29 ஆம் தேதியும் ஒரு விமானம் மட்டுமே சென்னைக்கு பயணப்படுவதாக ஓமன் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆயிரகணக்கான தமிழர்கள் ஓமன் இந்திய தூதரகத்தில் பயணத்திற்காக பதிவு செய்தும் காத்திருக்கின்றனர்.

ஓமனிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓரிரு வானூர்திகளே இயங்கும் நிலையில், 
இங்குள்ள தமிழர்கள் தன்னார்வலர்களாக இணைந்து தனியார் சாட்டர் வானூர்திகளுடன் பேசி வானூர்திகள் ஏற்பாடு செய்து ஏழை தொழிலாளர்களை  தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக  திருச்சி ஜூன் 23, 25 ஆம் தேதியும், மதுரை ஜூன் 24 ஆம் தேதியும் செல்ல ஏற்பாடு செய்து, தமிழ்நாடு அரசு மற்றும் ஓமன் இந்திய தூதரகத்தின் அனுமதியையும் தனியார் வானூர்திகள் பெற்றிருந்தன.  

(இதனால் 1200 கிமீ தொலைவிலுள்ள மக்கள் விமானத்திற்காக முந்தின நாள் இரவே விமான நிலையம் வந்துவிட்டார்கள். காலையில் வானூர்தி புறப்பட இருந்த சில மணி நேரம் முன்புதான் ஜூன் 23 ஆம் தேதி திருச்சி செல்ல வேண்டிய வானூர்தி ரத்தாகியுள்ள செய்தி கிடைத்திருக்கிறது. அதில் பல கர்பிணி பெண்கள் இருந்துள்ளனர். வானூர்தி ரத்தாததால் மஸ்கட்டிலே தங்க வசதியில்லாமல் அவதியுறுகின்றனர். பலரை தன்னார்வலர்கள் ஹோட்டல்களில் தங்க வைத்திருக்கின்றனர். பலர் வீடு திரும்பி வேறு நாளுக்காக காத்திருக்கின்றனர். )

23 ஆம் தேதி தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்த நிலையில், அன்று காலை தமிழக அரசு தனியார் சார்ட்டர் விமானங்களுக்கு சில நிபந்தனைகளை விதித்தது. அதில், பயணிகள் பயணப்படும் முன் கோவிட் 19 பரிசோதனைக்காக பணம் கட்ட வேண்டும் அல்லது கோவிட் 19 சோதனை சான்று  வேண்டும். தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தரை இயங்கிய பிறகு, விடுதிகளில் தங்க வசதியில்லாதவர்களை, விமான நிலையம் அருகிலே  இலவசமாக 7 நாட்கள் தங்க வைக்க மண்டபம் போன்ற பெரிய வளாகங்களை, தொண்டு நிறுவனங்களே ஏற்பாடு செய்து, அதற்கான ஆதாரத்தையும் தமிழக அரசுக்கு வழங்க வேண்டுமென்றும், அதை தமிழக சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனையிட்டு அனுமதி பெற்றிருக்க வேண்டும். விடுதியில் தங்குகிறவர்களுக்கு செலவு தோராயமாக ஒரு நாள் ரூ 2500 ஆகும் செலவை பயணிகளே ஏற்கவேண்டும் என்ற அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டாலே வானூர்திகள் தமிழ்நாட்டில் இறங்க அனுமதிக்க இயலும் என்று கூறியுள்ளது தமிழக அரசு. 

வேலை இழந்த கூலி தொழிலாளர்கள், பல தன்னார்வலர்கள் உதவியுடன் பயண சீட்டு வாங்கவே சிரமபட்டு பயணசீட்டு வாங்கிய நிலையில்,  தமிழக அரசின் கடைசி நேர அறிவிப்பால் 23, 24, 25 ஆம் தேதி பயணம் செய்வதற்கான பயணசீட்டுகளும் எடுத்த நிலையில், கோவிட் 19 சோதனை, தங்குமிடத்திற்கு பணம் பணம் கட்ட இயலாததால் 23, 24, 25 ஆம் தேதி புறப்பட வேண்டிய சாட்டர் வானூர்திகள் அனைத்தும் ரத்தாகியுள்ளது.

இங்குள்ள தன்னார்வலர்கள் பெரும் சிரமமெடுத்து பெருந்தன்மையோடு எப்படியாவது தொழிலாளர்களை தாயகம் அனுப்ப வேண்டும் என்று முயலும் போது, தாய் மடியில் வந்த பிறகும் தாயே பிள்ளைகளை புறக்கணிப்பது போன்ற மனநிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது வேதனையளிக்கிறது. 

வந்தே பாரத் திட்டம் மூலம் வானூர்தி இல்லாமலும், தனியார் நிறுவனங்கள் மூலம் அரிதாக ஏற்பாடு செய்யப்படும் வானூர்திகளுக்கு கூட பல நிபந்தனை விதிப்பதன் மூலம் ஏழை தொழிலார்கள் ஓமனிலிருந்து தாயகம் செல்வது கனவாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. 

ஆகவே தமிழக அரசு இந்திய அரசு விமானங்களை அதிகமாக இயக்க அனுமதி வழங்க வேண்டுமென்றும், தனியார் சாட்டர் விமானங்களையும் எந்த நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதித்து ஏழை தொழிலாளர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு தலைவர் வைகோ அவர்கள் அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களை மீட்டு தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுமாறு ஓமன் தமிழர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை.
24-06-2020

No comments:

Post a Comment