Thursday, October 22, 2020

தலைமைக் கழகச் செய்திக் குறிப்பு!

தென்காசி மாவட்டம், மலையடிக்குறிச்சி மற்றும் களப்பாகுளம் கிராமங்களைச் சேர்ந்த கே.வீரபாண்டியன், பி.கருத்தப்பாண்டி, வி.முருகன் மற்றொரு கருத்தப்பாண்டி ஆகிய நான்கு பேரும் குடும்ப வறுமை காரணமாக பொருள் ஈட்டுவதற்காக கடந்த பிப்ரவரி 2020 இல் சௌதி அரேபியா நாட்டிற்குச் சென்றனர். 


தங்களைப் பணி அமர்த்திய நிறுவனம் முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே ஊதியம் கொடுத்தது; அடுத்த ஐந்தாறு மாதங்களாக ஊதியம் தரவில்லை; கொரோனா தொற்று காரணமாக ஊதியமோ, வேலைவாய்ப்போ, உணவு மற்றும் தங்கும் இட வசதியோ ஏற்படுத்தித் தர இயலாது என கைவிரித்து விட்டது; எனவே, தாங்கள் நாடு திரும்ப உதவுமாறு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்களுக்கு, கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர்.


வைகோ எம்.பி., அவர்கள், வளைகுடா கழகப் பொறுப்பாளர் ஸ்டாலின் பீட்டர் பாபுவைத் தொடர்புகொண்டு, நால்வரையும் பத்திரமாகப் பாதுகாத்து, அவர்கள் தாயகம் திரும்ப தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். 


வைகோ அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சௌதியில் இயங்கும் ஜெத்தா தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.எஸ். ஜாகீர் உசேன், சௌதி அல்-கோ பார் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர் ரஹமத்துல்லா ஆகியோர் விரைந்து செயல்பட்டு, அவர்கள் வேலை செய்த நிறுவனத்திற்கு இடைவிடாது கொடுத்த அழுத்தம் காரணமாக, வெளியேற்ற அனுமதி ஆணையை (நுஒவை ஏளைய) பெற்றுத் தந்தனர்.


அதைத் தொடர்ந்து, நான்கு பேரும் 19.10.2020 அன்று, திருவனந்தபுரம் வழியாக தங்கள் ஊருக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். தங்களை மீட்க உதவிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், தென்காசி மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் தி.மு.இராசேந்திரன் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

22.10.2020

No comments:

Post a Comment