Friday, December 25, 2020

கிறிஸ்துமஸ் வாழ்த்து! வைகோ!

மனித குலத்திற்கு வெளிச்சமாக, கருணை வெள்ளமாகத் திகழும் இயேசு பெருமானின் போதனைகளை நினைவுகூர்ந்து, மன ஆறுதல் பெறவும், மகிழ்ச்சி அடையவும், உலகம் முழுமையும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

சாதி மதங்களின் பெயரால், வெறுப்பும் பகையும் வளர்ந்து, அதன் விளைவாக, கலவரங்களும், இரத்தக் களறிகளும் மனித சமுதாயத்துக்குப் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், மீட்பர் இயேசு மலையின் மேல் நின்று, அமுத மொழிகளாகப் பொழிந்த கருத்துகள், சுயநலமும் பேராசையும் அலைக்கழிக்கும் இன்றைய உலகத்திற்கு நல்வழி காட்டுகின்றன. 

“சாந்த குணம் உள்ளவர்களாக, நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்களாக, சிறுமைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக, நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்களாக வாழ்கின்றவர்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்துக்கு வெளிச்சமாகவும் இருப்பார்கள்” என்று அவர் சொன்னதை ஏற்று வாழ்ந்த உத்தமர்கள் அவற்றை மெய்யாக்கி இருக்கின்றார்கள்.

பிலாத்துவின் சபையில் இயேசு நிந்திக்கப்பட்டபோதும், சித்திரவதை செய்து சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், அன்பின் சிகரமாகவே திகழ்ந்தார். சகிப்புத்தன்மைக்கும், இன்னா செய்யாமைக்கும், இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்த உயர்பண்புக்கும் அவரது வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டு.

திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கணம் தந்த கால்டுவெல்; திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்த ஜி.யு. போப்; தேம்பாவணி தந்த வீரமா முனிவர்; தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு; கடற்கரை வாழ் மக்களுக்குத் தொண்டு ஊழியம் புரிந்த புனித சேவியர் அடிகளார், திருச்சபை சேவை செய்து கொலையுண்டு மடிந்த தோமையார், ஜான் பிரிட்டோ உள்ளிட்ட இயேசு சபை அருட் தந்தையரும், போதகர்களும் ஆற்றிய அரும்பணிக்கு, தமிழ் இனம் நன்றிக்கடன்பட்டு இருக்கின்றது. 

சகோதரத்துவமும், மனித நேயமும், மக்கள் மனதில் மேலோங்க, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைவரும் உறுதி மேற்கொள்வோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.12.2020

No comments:

Post a Comment