Friday, December 25, 2020

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு. தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்!

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது.

தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான ஆவணங்கள் மூலம் ஆய்வு நூல்களை படைத்த பண்பாட்டுப் பேரறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியிருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் தமிழியல் துறை தலைவராக பணியாற்றியவர்.

பேராசிரியர், முனைவர் தொ.ப அவர்கள் பேராசிரியர் மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோரை முன்னோடியாக அவர் கருதினாலும் தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் ஆராய்ச்சி செய்வதற்கு புதிய முறையைப் பின்பற்றி முத்திரை பதித்தவர் ஆவார்.

தொ.ப .அவர்களின் ‘அழகர் கோவில் ஆய்வு’ நூல் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

புத்தகங்களில் இருந்தும், தத்துவங்களில் இருந்தும் வாதங்களை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில், தமிழ்நாட்டுத் தெருக்களில், கோவில் வாசல்களில், ஆற்றங்கரைகளில், திருவிழாக்களில், நாட்டார் தெய்வங்களின் முற்றங்களில் கள ஆய்வு செய்து, ஆய்வு உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும், சமயங்களின் அரசியல், விடுபூக்கள், பண்பாட்டு அசைவுகள், போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அவர் அளித்த கொடையாகும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் தோய்ந்து முன்னோடியாக திகழ்ந்தவர்.

மேலும் அவரது சங்க இலக்கிய ஆய்வுகளில் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் என்பதோடு மட்டுமின்றி, அதன்மீது எழுப்பப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை உருவாக்கின.

திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்றுக் கொண்ட தொ.ப., தந்தை பெரியார் சிந்தனைகள், கொள்கைகள் , தமிழினத்தின் விடியலுக்கு எல்லா காலத்திற்கும் தேவைப்படுகின்றன என்பதை இறுதி மூச்சு அடங்கும் வரையில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

பார்ப்பனியம் விழுங்கி  செரிக்க முடியாத தந்தை பெரியார் கலக மரபு சிந்தனையாளர் என்று மிகச்சரியாகக் கணித்தவர் தொ.ப. அவர்கள்.

இந்துத்துவ சனாதன சக்திகள் நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முனைந்துள்ள சூழலில் மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்திற்கு கருத்து வளம் சேர்த்தவர் தொ.ப.

“மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், ரத்தக் களறிகள், பிறவகை வன்முறைகள், அனைத்திலும் இந்து என்ற கருத்தியலே மையமாகத் திகழ்கிறது. எனவே பெரியாரியப் பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தைத் தரவேண்டும்.

அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும், நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும்” என்று வலுவாகக் குரல் எழுப்பி, இந்த மண்ணில் சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்.

அவரது மறைவு தமிழினத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும், தமிழ் பண்பாட்டு ஆய்வு உலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.ப. அவர்களுக்கு மதிமுக வீர வணக்கத்தை செலுத்துகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய நண்பர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.12.2020

No comments:

Post a Comment